Nanguneri Incident : வெட்டுப்பட்ட நாங்குநேரி பள்ளி மாணவர்கள்.. சமூகத்தின் முகத்தில் அறையும் மாரி செல்வராஜின் ட்வீட்
நெல்லை மாவட்டத்தில் பள்ளி மாணவனை உடன் படிக்கும் சக மாணவர்கள் வீடு புகுந்து வெட்டிய சம்பவத்திற்கு இயக்குநர் மாரி செல்வராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் பள்ளி மாணவனை உடன் படிக்கும் சக மாணவர்கள் வீடு புகுந்து வெட்டிய சம்பவத்திற்கு இயக்குநர் மாரி செல்வராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற சம்பவம் ஒன்று தமிழ்நாடு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அங்குள்ள நாங்குநேரி பகுதியில் முனியாண்டி என்பவர் வசித்து வருகிறார். அவரது மனைவி அம்பிகா. அம்பிகாவதி என்னும் தாய்க்கு, ப்ளஸ் 2 படிக்கும் மகனும், மகளும் உள்ளனர். வள்ளியூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துவரும் மாணவர் படிக்கும், இதே பள்ளியில் நாங்குநேரியைச் சேர்ந்த சில மாணவர்களும் படிக்கிறார்கள்.
அம்பிகாவதியின் மகன் பட்டியலின வகுப்பைச் சார்ந்தவர். அதனால் ஆதிக்க சாதியைச் சேர்ந்த அந்த மாணவர்கள் அவரிடம் சாதிய ரீதியான அதிகாரங்களை காட்டியதாக சொல்லப்படுகிறது. இதனால் அம்மாணவர் கடந்த ஒரு வாரமாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். பள்ளி நிர்வாகம் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மாணவனின் பெற்றோரை தொடர்புகொண்டு மாணவரை பள்ளிக்கு அனுப்பி வைக்குமாறு சொல்லியுள்ளனர்.
இதன்பின்னர் பள்ளிக்கு சென்ற அம்மாணவர், ஆசிரியர்களிடம் நடந்ததை சொல்லவும், பிரச்சினைக்குரிய மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதனால் அந்த ப்ளஸ் 2 மாணவருக்கும் மற்ற மாணவர்களுக்கு விரோதம் அதிகரித்துள்ளது. அவர்கள் பள்ளி முடிந்ததும் பாதிக்கப்பட்ட மாணவரை மிரட்டியுள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 10.30 மணியளவில் வீட்டில் இருந்த மாணவரை ஒரு கும்பல் வீடு புகுந்து அரிவாளால் சரமாரியாக வெட்டியது.
கடந்த இரண்டு நாட்களாக இந்த படிகட்டுகளில் சொட்டிக்கொண்டிருக்கும் சூடான இரத்தத்தின் கதையை யாரிடமாவது சீக்கிரம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் . காய்ந்து போனால் அதை பழைய புண்ணாக்கி எளிதாக எல்லாரையும் கடந்து போகசொல்லி உங்கள் இதயம் உங்களுக்கே தெரியாமல் எல்லாரிடமும் மன்றாட ஆரம்பித்துவிடும்… pic.twitter.com/XCxkZdJgdv
— Mari Selvaraj (@mari_selvaraj) August 11, 2023
அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த தங்கை, அண்ணன் தாக்கப்படுவதை தடுக்க முயல, அவரது கையில் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இவர்களின் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் இரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் மீட்டு நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவர் வெட்டப்பட்ட தகவல் கேள்விப்பட்ட அவரது தாத்தா கிருஷ்ணன் மாரடைப்பால் உயிரிழந்தார்.
இந்த நிலையில் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவருடன் படித்து வந்த 17 வயதுடைய 12ம் வகுப்பு மாணவர்கள் 4 பேர் மற்றும் இரண்டு சிறார் உட்பட 6 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு திரைத்துறையைச் சேர்ந்த பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் இயக்குநர் மாரி செல்வராஜ் இரத்தம் தோய்ந்த, வீட்டு வாசலின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அதில், “கடந்த இரண்டு நாட்களாக இந்த படிகட்டுகளில் சொட்டிக்கொண்டிருக்கும் சூடான இரத்தத்தின் கதையை யாரிடமாவது சீக்கிரம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் . காய்ந்து போனால் அதை பழைய புண்ணாக்கி எளிதாக எல்லாரையும் கடந்து போகசொல்லி உங்கள் இதயம் உங்களுக்கே தெரியாமல் எல்லாரிடமும் மன்றாட ஆரம்பித்துவிடும்” என தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: ‘வீசும் காற்றில் விஷம் பரவட்டும்' .. பள்ளி மாணவனுக்கு அரிவாள் வெட்டு.. கொதித்தெழுந்த ஜி.வி.பிரகாஷ்