நந்தன் தலைப்பிற்கே இத்தனை தடங்கலா? இயக்குனர் இரா.சரவணன் உருக்கம்!
சசிகுமார் நடிப்பில் கடந்தாண்டு வெளியான நந்தன் படத்தின் தலைப்பை வைப்பதற்கு எத்தனை தடைகள் என்பதை இயக்குனர் இரா.சரவணன் தெரிவித்துள்ளார்.

இந்திய சினிமாவில் எளிய மக்களின் வலியையும், சாதிய கொடுமைகளையும் அதிகளவு பேசிய திரையுலகமாக இருப்பது தமிழ் திரையுலகம். அந்த வரிசையில் மிகவும் முக்கியமான படம் கடந்தாண்டு வெளியான நந்தன். எழுத்தாளரும், பத்திரிகையாளருமான இயக்குனர் இரா.சரவணன் இயக்கிய இந்த படம் பலராலும் பாராட்டப்பட்டது.
நந்தன் பெயருக்கே இத்தனை தடங்கலா?
படத்தின் நாயகனாக சசிகுமார் மிக அற்புதமாக நடித்திருப்பார். இந்த படம் குறித்து இயக்குனர் இரா.சரவணன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பது, படத்தின் தலைப்பு ‘நந்தன்’ என்றபோது, எங்கள் குழுவிலேயே எதிர்ப்பு. பலரும் அந்தத் தலைப்பு வேண்டாமெனச் சொன்னார்கள். பழைய தலைப்பாகத் தெரிவதாகவும், பாலா சார் ஏற்கெனவே ‘நந்தா’ எனத் தலைப்பு வைத்துவிட்டதாகவும் சொன்னார்கள். ‘நந்தன்’ தலைப்பை அழுத்தமாக வலியுறுத்திய ஒரே நபர் எழுத்தாளர் வெய்யில்.
படத்தின் தலைப்பு ‘நந்தன்’ என்றபோது, எங்கள் குழுவிலேயே எதிர்ப்பு. பலரும் அந்தத் தலைப்பு வேண்டாமெனச் சொன்னார்கள். பழைய தலைப்பாகத் தெரிவதாகவும், பாலா சார் ஏற்கெனவே ‘நந்தா’ எனத் தலைப்பு வைத்துவிட்டதாகவும் சொன்னார்கள். ‘நந்தன்’ தலைப்பை அழுத்தமாக வலியுறுத்திய ஒரே நபர் எழுத்தாளர்… pic.twitter.com/rikTUzjVZE
— இரா.சரவணன் (@erasaravanan) September 20, 2025
புதுக்கோட்டையைச் சேர்ந்த புரட்சிக்கவிதாசன் (முன்பு தலித் மக்களுக்காகத் தனி இயக்கம் நடத்தியவர். இப்போது பா.ஜ.க.வில் இருக்கிறார்) அண்ணனிடம் பேசியபோது, தலைப்பு குறித்துக் கேட்டார். ‘நந்தன்’ எனச் சொன்னேன். சட்டென யோசித்தவர், “இந்தத் தலைப்பு வேண்டாமே…” என்றார். “ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கதைன்னு சொல்றீங்க. எங்க சமூகத்தில்கூட பெரும்பாலும் யாரும் ‘நந்தன்’னு பெயர் வைக்க மாட்டாங்க.
தலைப்பில் தீர்க்கம்:
அப்படியே வைத்தாலும் நந்தகோபால், நந்தகுமார் என இன்னொரு பெயரோடு சேர்த்துத்தான் வைப்பார்கள். ‘நந்தன்’ நெருப்பில் விழுந்து இறந்ததாலோ என்னவோ… அந்தப் பெயரை வைக்கத் தயங்குவாங்க. அதனால், வேறு தலைப்பு வையுங்கள்… அதுதான் படத்தை வெளிவர வைக்கும்…” என்றார். அப்போது தீர்க்கமாக முடிவெடுத்தேன்… படத்திற்கு ‘நந்தன்’தான் தலைப்பு என்று.
படத்தின் பிசினஸ் பேசப்பட்ட நேரம்… சிலர் படத்தைப் பார்த்தார்கள். “எல்லாம் சரி… ‘நந்தன்’ டைட்டிலை மட்டும் மாற்றுங்கள்” என்றார்கள். “படத்தில் சில காட்சிகள் மட்டுமே வருகிற துணை கதாபாத்திரத்தின் பெயர்தான் ‘நந்தன்’. படத்தில் கதாநாயகனை மையப்படுத்தி தலைப்பு வைப்பதுதான் வழக்கம். சசிகுமார் சார் இதற்கு எப்படி ஒப்புக்கொண்டார்?” என்றார்கள்.
ஜெயஹே:
படத்தின் ஓ.டி.டி மற்றும் ஸாட்டிலைட் விஷயங்களுக்கான பேச்சுவார்த்தையில், ‘நந்தன் தலைப்பை மாற்றி ‘ஜெயஹே’ என வைத்தால் இந்திய அளவில் கவனத்தைத் திருப்பும்’ என்றார்கள்.
‘நந்தன்’ தலைப்பில் நான் மிக உறுதியாக நின்றேன். நூற்றாண்டுகள் கடந்தும் தகிக்கிற தலைப்பு அது. குறிப்பாக, தம்பி யுவராஜ் ‘நந்தன்’ தலைப்பையும் வடிவமைப்பையும் செய்த விதம் என்னை இன்னும் உறுதியாக்கியது.
இரவு ஒரு மணிக்கு க்யூப்பில் படத்தைப் பார்க்கப் பறந்தோடி வந்தேன். படத்தின் எல்லா காட்சிகளும் சிறப்பாக இருந்த நிலையில், டைட்டில் மட்டும் ஓப்பனாகவில்லை. ‘நந்தன்’ என்கிற எழுத்துகளே திரையில் தெரியவில்லை. டி.ஐ.யில் செக் பண்ணினால், ‘இங்கே டைட்டில் தெரியுதே…’ என்றார்கள். மறுபடி க்யூப்புக்கு வந்தால், அங்கே தலைப்பு ஓபனாகவில்லை. அங்கேயும் இங்கேயுமாகப் பறக்க, தியேட்டர்களுக்கு கன்டன்ட் அனுப்ப தாமதமானது. பல தரப்பிலிருந்தும் நெருக்கடி.
தலைப்பே இல்லாமல் தியேட்டருக்கு சென்ற நந்தன்:
முதலில் கன்டன்ட் அனுப்பிவிட்டு பிறகு ஒவ்வொரு தியேட்டருக்கும் தனியே டைட்டிலை சரி செய்து அனுப்ப எவ்வளவு செலவாகும் எனக் கேட்டேன். தோராயமாக இரண்டரை லட்சமாகும் என்றார்கள். எங்கிருந்து தைரியம் வந்ததோ… ‘நந்தன்’ என்கிற தலைப்பு இல்லாமலே அனைத்து தியேட்டர்களுக்கும் கன்டன்ட் அனுப்பச் சொல்லிவிட்டேன்.
அடுத்த சில மணி நேரங்களில் ‘நந்தன்’ டைட்டில் க்யூப்பில் சரியானது. பிறகு அனைத்து தியேட்டர்களுக்கும் திருத்தம் அனுப்பப்பட்டது. அப்படியும் எனக்கு திக்கென்றுதான் இருந்தது. அடுத்த நாள் செப்டம்பர் 20-ம் தேதி அனைத்து தியேட்டர்களிலும் ‘நந்தன்’ டைட்டில் தெரிகிறதா என விசாரித்து உறுதி செய்த பிறகே உயிர் வந்தது.
‘நந்தன்’ வெற்றிகரமாக வெளியாகி, ஒரு வருடமாகிறது. இன்றைக்கும் ‘நந்தன்’ குறித்த விவாதம், விமர்சனம், விழா என ஏதோவொன்று நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஓர் எளிய படைப்பை இந்தளவுக்குப் பேசுபொருளாக்கி, நிஜ நந்தன்களாக வாழும் அத்தனை பேருக்குமான விடிவாக, தீர்வாக மாற்றுகிற எல்லோருக்கும் நன்றி.
‘நந்தன்’ நன்றிக்குரியவன்!
இவ்வாறு உணர்ச்சிகரமாக பதிவிட்டுள்ளார்.
குவிந்த பாராட்டு:
ஊரின் பஞ்சாயத்து தலைவராக தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் இருக்க வேண்டும் என்று தொகுதி வரையறுக்குள் வருவதால், அந்த ஊரில் பல காலமாக பஞ்சாயத்து தலைவராக இருக்கும் மாற்று சமூகத்தைச் சேர்ந்தவரும், அவரது ஆட்களும் இணைந்து தலித் சமூகத்தைச் சேர்ந்த சசிகுமார் மீதும், அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மீது நடத்தும் தாக்குதலே நந்தன் ஆகும்.
சமூகத்தில் சமகாலத்திலும் நடக்கும் அவலங்களை அப்படியே நந்தனின் காட்டியிருப்பார்கள். இந்த படத்தில் சசிகுமாருடன் சுருதி பெரியசாமி, மாதேஷ், மிதுன் போஸ், பாலாஜி சக்திவேல், சமுத்திரகனி, கட்டெறும்பு ஸ்டாலின், ஞானவேலு, ஜிஎம்குமார், சித்தன் மோகன், சரவண சக்தி ஆகியோர் நடித்திருப்பார்கள்.






















