”275 நாட்கள் ஓடியிருக்க வேண்டிய திரைப்படம்; அஜித்தால் விட்டுவிட்டேன்” - இயக்குநர் VZ துரை
"கதை ரசிகர்களுக்கு மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால் மகிழ்ச்சியான கிளைமேக்ஸாக இல்லை என விநியோகஸ்தர்கள் தரப்பில் கூறினர்,"
தமிழ் சினிமாவில் முகவரி , ரமணா, நேபாளி , தொட்டி ஜெயா , இருட்டு என சில படங்களை இயக்கியவர் VZ துரை. குறிப்பாக இவர் இயக்கிய முகவரி திரைப்படம் இன்றைக்கும் பலரின் விருப்ப தேர்வுகளில் ஒன்றாக இருக்கிறது. இந்த திரைப்படம்தான் இயக்குநர் துரை அவர்களுக்கு அறிமுகப்படம் என்றாலும், முதிர்ச்சி பெற்ற இயக்குநரை போல அத்தனை நேர்த்தியாக ஒவ்வொரு ஃபிரேமையும் செதுக்கியிருப்பார். திறமை மிக்க இசை கலைஞர் ஒருவர் எப்படி தன் வாழ்க்கையில் ஜெயிக்க போராடுகிறான் என்பதை எதார்த்தம் கலந்த உண்மையோடு பேசிய படம்தான் முகவரி. படத்தில் நாயகனாக அஜித் நடிக்க , அவருக்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருப்பார். மேலும் ரகுவரன் அஜித்தின் அண்ணனாக நடித்து மாஸ் காட்டியிருப்பார். கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் 100 நாட்கள் கடந்தும் ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் படம் உருவான சமயத்தில் நடந்த சில சுவாரஸ்ய நிகழ்வுகளை நேர்காணல் ஒன்றில் பகிர்ந்திருக்கிறார் இயக்குநர் VZ துரை.
அதில் “ முகவரி படம் ஓக்கே ஆனதும், எனக்கு அஜித்தான் வேண்டும் என பிடிவாதமாக இருந்தேன். அஜித்திடம் கதை சொன்னதும் அவருக்கு மிகவும் பிடித்து போனது, படம் உருவாவதற்கு முன்னதாகவே தனது மனைவி ஷாலினியை அழைத்து “ஷாலு நான் இயக்குநருக்கு கார் ஒன்றை பரிசாக அளிக்க விரும்புகிறேன் “ என தெரிவித்திருந்தார். அதன் பிறகு நான் சார் படம் வெளியாகட்டும் பார்த்துக்கொள்ளலாம் என்றேன். படத்தின் ஒவ்வொரு சீனும் 22 வருடங்கள் கழித்து இன்றும் பேசப்படுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. படத்தின் கிளைமேக்ஸை பார்த்த இயக்குநர்கள் பலரும் , “ 200 நாட்கள் கடந்து ஓட வேண்டிய திரைப்படத்தை கிளைமேக்ஸால் 100 நாட்களுக்கு மேல் ஓட வைத்துவிட்டீர்கள். “ என்றார்கள்.
கதை ரசிகர்களுக்கு மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால் மகிழ்ச்சியான கிளைமேக்ஸாக இல்லை என விநியோகஸ்தர்கள் தரப்பில் கூறினர், உடனே கே.எஸ் .ரவிக்குமார் சாரை ஒப்பந்தம் செய்து சில கிளைமேக்ஸ் ஆட் ஆன் காட்சிகளை எடுத்தோம். ஆனால் அஜீத் மாற்றங்கள் செய்ய வேண்டாம் சார், ஓடும் வரையில் ஓடட்டும் , இந்த கதைத்தானே நம்மை எல்லாம் கவர்ந்த கதை என்றார். அதன் பிறகு விநியோகஸ்தர்கள்தான் அவர்களுக்கு ஏற்ற மாதிரியாக தியேட்டரிலேயே சில ஆண்டுகளுக்கு பிறகு என எடிட் செய்து படத்தை வெளியிட்டனர். அப்போது திரையரங்குகளில் எடிட் செய்துக்கொள்ள முடியும். இப்போது அந்த வசதிகள் கிடையாது. அதன் பிறகு படம் ரிலீஸாவதற்கு முன்னதாகவே அஜித் எனக்கு கார் ஒன்றினை பரிசளித்தார். கார் வாங்க செல்லும் சமயத்தில் இந்த படம் 10 கார்களுக்கு சமம் என்றாலும் ஒரு காரை பரிசாக வழங்க விரும்புகிறேன் என்றார். அந்த காரை படத்தின் 50 வது நாளில்தான் ரிப்பன் பிரித்து ஓட்ட துவங்கினேன் “ என பல சுவார்ஸ்யங்களை பகிர்ந்திருக்கிறார் VZ துரை.