Vijayakanth: ”எனக்கு மனிதாபிமானத்தை கற்றுக் கொடுத்தவர் சூப்பர் ஸ்டார் விஜயகாந்த்” - இந்தி நடிகை நெகிழ்ச்சி பதிவு
Vijayakanth: “எனது முதல் தமிழ் ஹீரோ. அவர் எனக்கு மனிதாபிமானத்தையும், நேரத்தை கடைப்பிடிப்பதையும் கற்றுக் கொடுத்தார்" -நடிகை டெபினா பானர்ஜி இரங்கல்
Vijayakanth: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு பேரரசு படத்தில் நடித்த நடிகை டெபினா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார்.
விஜயகாந்த் மறைவுக்கு திரைபிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட திரையுலகை சேர்ந்த நடிகர்கள் தங்களின் இரங்கலை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் விஜயகாந்துடன் பேரரசு படத்தில் ஹீரோயினாக நடித்த டெபினா பானர்ஜி இரங்கல் பதிவை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட இன்ஸ்டகிராம் பதிவில், “எனது முதல் தமிழ் ஹீரோ. அவர் எனக்கு மனிதாபிமானத்தையும், நேரத்தை கடைப்பிடிப்பதையும் கற்றுக் கொடுத்தார். சூப்பர் ஸ்டார் விஜயகாந்துடன் இணைந்து நடித்ததை எப்பொழுதும் பெருமையாக கருதுகிறேன். அவரது மறைவு செய்தி கேட்டு வருத்தமடைந்தேன். அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன். எப்பொழுதும், அவருடன் இருந்த அழகான தருணங்களும், அவரது நேர்மையான தலைமை பண்பும் என்றும் மறக்காமல் நினைவில் இருக்கும்” என பதிவிட்டுள்ளார்.
2006ம் ஆண்டு உதயன் இயக்கத்தில் வெளிவந்த பேரரசு படத்தில் விஜயகாந்த், டெபினா பாஜர்ஜி, பிரகாஷ் ராஜ், சரத்பாபு, நாசர், ஆனந்த் ராஜ், பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
View this post on Instagram
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு உடல்நலப் பிரச்சனைகள் காரணமாக உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே கடந்த நவம்பர் 18 ஆம் தேதி லேசான காய்ச்சல், சளி மற்றும் இருமல் காரணமாக விஜயகாந்த் சென்னை போரூரில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கிட்டதட்ட 23 நாட்கள் சிகிச்சைக்குப் பின் அவர் கடந்த டிசம்பர் 11 ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இந்நிலையில் நேற்று முன் தினம் மீண்டும் உடல்நலக்குறைவு காரணமாக விஜயகாந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே அவர் நுரையீரல் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், மீண்டும் அவருக்கு நுரையீரல் பிரச்சனை இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இன்று காலை தேமுதிக தரப்பில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. காலை 9 மணி அளவில் மருத்துவமனை தரப்பில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் விஜயகாந்திற்கு நுரையீரல் அழற்சி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை பெற்று வந்தார் என்றும் மருத்துவர்களின் தொடர் முயற்சி இருந்த போதிலும் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.