Dangal Actress Passes Away: அமீர் கான் மகளாக நடித்த தங்கல் பட நடிகை உயிரிழப்பு: அதிர்ச்சியில் பாலிவுட்!
Dangal Actress Suhani Bhatnagar: தங்கல் திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக ஏராளமான ரசிகர்களைப் பெற்ற சுஹானி, இளம் வயதில் இப்படி உயிரிழந்துள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நடிகர் அமீர் கான் நடிப்பில் கடந்த 2016ஆம் ஆண்டு மல்யுத்தத்தை அடிப்படையாக வைத்து வெளியாகி, பாலிவுட் தாண்டி நாடு முழுவதும் சக்கைபோடு போட்ட திரைப்படம் ‘தங்கல்’.
இப்படத்தில் தன் பெண் பிள்ளைகளுக்கு மல்யுத்தப் பயிற்சி சொல்லித்தரும் ஸ்ட்ரிக்ட்டான அப்பாவாக நடிகர் அமீர் கான் நடித்திருப்பார். அமீர் கானைத் தாண்டி இப்படத்தின் அவரது மகள்களாக நடித்த ஃபாத்திமா சனா சேக், சான்யா மல்ஹோத்ரா ஆகிய நடிகைகள் ஸ்கோர் செய்து பெரும் ரசிகர் பட்டாளத்தைப் பெற்றனர்.
இப்படத்தில் சான்யா மல்ஹோத்ரா நடித்த பபிதா போகட் கதாபாத்திரத்தில், சிறுமியாக நடித்தவர் நடிகை சுஹானி பட்நகர். 2016ஆம் ஆண்டு இப்படத்தின் மூலம் தான் இவர் சினிமாவில் அறிமுகமானார். தனது க்யூட்டான நடிப்பின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த சுஹானி பட்நகர் (Suhani Bhatnagar), இன்று காலை உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
19 வயது நிரம்பிய சுஹானி தான் உட்கொண்ட மருந்தின் எதிர்வினையால் உடல்நிலை பாதிக்கப்பட்டதாகவும், இதன் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் சிகிச்சைப் பலனின்றி இன்று காலை சுஹானி உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தங்கல் திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக ஏராளமான ரசிகர்களைப் பெற்ற சுஹானி இளம் வயதில் இப்படி உயிரிழந்துள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இணையத்தில் அவருக்கு ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.