Etharkkum Thunindhavan :கடலூர்: மிரட்டும் பாமக: அடிவாங்கும் எதற்கும் துணிந்தவன்? நாளுக்குநாள் குறையும் தியேட்டர் எண்ணிக்கை!
எதற்கும் துணிந்தவன் திரைப்படக்குழு பாமகவிடம் அடிபணிந்ததா என்ற கேள்வியுடன், கடலூரில் நாளை படம் வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் மார்ச் 10ம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. 'பசங்க-2' படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக பாண்டிராஜ் மற்றும் சூர்யா ஒன்றாக இணைந்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார்.
மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி, எம்.எஸ்,பாஸ்கர் ஆகியோர் நடித்துள்ளனர். சூர்யாவின் கடைசி இரண்டு படங்களான சூரரை போற்று மற்றும் ஜெய் பீம் போன்ற படங்கள் ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இருப்பினும் சூர்யா ரசிகர்களுக்கு படத்தை திரையரங்கில் பார்க்க முடியவில்லையே என்ற வருத்தம் இருந்தது. இதனை போக்கும் விதமாக எதற்கும் துணிந்தவன் படம் தியேட்டர்களில் நாளை வெளியாகி ரசிகர்களுக்கு விருந்து படைக்க காத்திருக்கிறது.
இந்தநிலையில், கடலூர் மாவட்டத்தில் சூர்யா நடிப்பில் நாளை வெளியாகயுள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் கடலூரில் வெளியாகுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இதற்கு காரணம் பாமகவின் மிரட்டலே என்று கூறப்படுகிறது.
முன்னதாக, இது குறித்து பாமக வெளியிட்டுள்ள அறிக்கையில், “ திரைபட நடிகர் சூர்யா நடித்து கடந்த 2021 நவம்பர் 02ம் தேதியில் வெளியான திரைப்படம் ஜெய்பீம். டி. ஜெ. ஞானவேல் இயக்கிய இந்தப்படத்தை 2D Entertainment நிறுவனம் ( சூர்யாவின் தயாரிப்பு நிறுவனம்) தயாரித்த இந்தப்படத்தில் நடிகர் சூர்யா நடித்தார். இருளர் சமுதாய மக்களின் வாழ்க்கையை கொண்டுள்ள உண்மை சம்பவ அடிப்படையில் எடுக்கப்பட்டது இந்தத் திரைப்படம். அதில் வழக்கறிஞர் சந்துரு அதே பெயரில் இருக்க, கதாபாத்திரத்தில் வந்த அனைவரும் அதே பெயரில் இருக்க, S அந்தோனிசாமி என்ற தலித் கிருத்துவர் கதாபாத்திரம் மட்டும் குருமூர்த்தி என்ற கதாபாத்திரத்தில் வன்னியராக சித்தரிக்கப்பட்டுள்ளது.
காவல் உதவி ஆய்வாளராக நடித்தவர் ஒரு ஜாதி வெறியர் போல சித்தரித்து வன்னியர்களின் அடையாளமான அக்கினி கலசத்தை, அவர் வீட்டில் காட்சிப்படுத்தி காயல் உதவி ஆய்வாளரை வன்னியர் சமுதாயத்தை சார்ந்தவர் என்றும் ஒட்டு மொத்த வன்னிய சமுதாய மக்கள் ஜாதி வெறி உள்ளவர்கள் போன்றும் போல காட்டியுள்ளனர். சகோதரத்துவமாக உள்ள இருளர், வன்னியர் சமுதாயத்தில் ஜாதி வன்மத்தை தூண்டும் விதமாக இத்திரைப்படம் எடுத்திருப்பது வன்னியர்களை கொச்சப்படுத்தும் விதமாகவும், வன்முறையாளர்களாகவும் தொடர்ந்து சித்தரித்து வரும் நடிகர் சூர்யாவின் திரைப்படத்தை அவர் வன்னியர் மக்களிடம் பொதுமன்னிப்பு கேட்காத வரை கடலூர் மாவட்டத்தி ஒளிப்பரப்ப அனுமதிக்க கூடாது என பாட்டாளி மக்கள் சார்பாகவும், வன்னியர் சங்கம் சார்பாகவும் கேட்டுக்கொள்கிறோம்.” என்று அறிக்கையில் தெரிவித்திருந்தனர்.
இந்தநிலையில், நேற்றைய தினகரன் (8-3-22) நாளிதளில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் கடலூரில் நியூ சினிமா, கிருஷ்ணாலாயா மற்றும் வேல்முருகன் தியேட்டர்களில் வெளியாக இருந்தது.
ஆனால், இன்று தினத்தந்தி (9-3-22) நாளிதளில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் கடலூரில் நாளை ஒரே ஒரு தியேட்டரில் மட்டுமே வெளியாகும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, எதற்கும் துணிந்தவன் திரைப்படக்குழு பாமகவிடம் அடிபணிந்ததா என்ற கேள்வியுடன், கடலூரில் நாளை படம் வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்