‛ஆன் லைனில் லேப்டாப் வாங்கி... விடிய விடிய விமானத்தில் கம்போசிங்...’ விமானிகளை அலற வைத்த ஹாரிஸ் ஜெயராஜ்!
‛‛நான் ஜெர்மனி சென்றுகொண்டிருந்தேன். நாளன்னைக்கு பெரிய படத்தின் டீசர் வருது, நாம ரிலீஸ் செய்தாக வேண்டும். ஒரு நிமிஷ டீசர் ரிலீஸ் பண்ணா அது படத்துக்கு ரொம்ப உதவியா இருக்கும் என்றார்’’
ரோஜா படத்தில் தடம் பதித்த ரஹ்மானைப்போல, தனது முதல் படத்திலேயே தான் யார் என்பதை நிரூபித்திருப்பார் ஹாரிஸ் ஜெயராஜ். மின்னலே படத்தின் ஆல்பமே ஒரு கம்ப்ளீட் பேக்கேஜ்-ஆக இருக்கும். மாஸ் இன்ட்ரோ பாடல், துளிர்க்கும் காதல், ஊடல், மென் காமம், காதல் தோல்வி, என எல்லா ஜானரையும் அடித்து துவைத்திருப்பார். ஐம்பது படங்களை தாண்டி இசையமைத்துக்கொண்டிருக்கும் அவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இரு தினங்கள் முன்பு பிறந்தநாள் கொண்டாடிய அவருக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்தனர். சமூக வலைதளமெங்கும் அவரது பாடல்களால் நிரம்பி இருந்தன. அதோடு அவர் பேசிய மேடைபேச்சுக்களில் சில படங்களுக்கு இசை அமைத்த அனுபவங்கள் ஆன்லைனில் வைரலாகிவந்தன. அதில் ஒன்றில் இருமுகன் திரைப்படத்தின் டீசருக்கு இசையமைத்த அனுபவத்தை கூறினார்.
On the Sky's above European continent...Time to sleep but music doesn't allow you to 😄. Sic pic.twitter.com/zEQC95cqrf
— Harris Jayaraj (@Jharrisjayaraj) April 7, 2016
இருமுகன் டீசர் குறித்து அவர் கூறுகையில்,"நான் ஜெர்மனிக்கு இசை கருவிகள் வாங்க கிளம்பிக்கொண்டிருக்கிறேன். ஒரு வாரத்திற்கு ஊரில் இருக்கமாட்டேன். ஆனந்த் ஷங்கர எனக்கு முன்னாடியே தெரியும். ஏழாம் அறிவு, துப்பாக்கில எல்லாம் ஒர்க் பண்ணிருக்காரு. அவருடைய முந்தின படம் அரிமா நம்பி நான், ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகருக்காக பார்த்தேன். அவர் என் நண்பர். ரொம்ப புடிச்சுது அந்த படம். அப்புறம் இந்த படத்துக்காக கேட்டாரு, பண்ணோம். நான் ஊருக்கு கிளம்பும் நேரத்தில் ஷிபு தமீன்ஸ் போன் பண்ணி, நீங்க சொன்னிங்க இல்லையா, இது ரொம்ப பெரிய படம் அப்டின்னு, அது நமக்கு தெரியும். ஆனா விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள், ரசிகர்களுக்கு தெரியணும். படத்துக்கு எதிர்பார்ப்பு வரணும் என்றார். அதுக்காக ஒரு நிமிஷ டீசர் ரிலீஸ் பண்ணா அது படத்துக்கு ரொம்ப உதவியா இருக்கும், என்றார். நான் ஜெர்மனி சென்றுகொண்டிருக்கிறேன் என்றேன். இல்லை நாளை மறுநாள் பெரிய படத்தின் டீசர் வருகிறது. நாமும் ரிலீஸ் செய்தாக வேண்டும் என்றார்.
நானும் அப்படியே உடனடியாக ஒரு சிறிய கீபோர்டை ஆன்லைனில் வாங்கிக்கொண்டு. லேப்டாப்பை எடுத்துக்கொண்டு பிளைட் ஏறிவிட்டேன். பத்தரை மணி நேர பயணம். இரவு முழுவதும் பிளைட்டில் இருக்க வேண்டும். ஏறும்போதே எனக்கு யுபிஎஸ் வேண்டும், சார்ஜர் வேண்டும், என்று அமர்கள படுத்தி தான் ஏறினேன். இரவு முழுவதும் வேலை செய்ததால் விமான பணிப்பெண்கள் பைலட்டை கூட்டி வந்துவிட்டார்கள். அப்படியே இசையமைத்து முடித்தேன். அதுதான் லவ் கதாபாத்திரத்தின் தீம் மியூசிக். அதை முதலில் கேட்டது அந்த பிளைட்டின் பைலட்டும், ஏர் ஹோஸ்டர்களும்தான், கேட்டுவிட்டு எல்லோரும் வாவ் என்று சொல்லி என்னோடு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அந்த புகைப்படம் இன்னும் ட்விட்டரில் உள்ளது",என்றார்.