ரீமேக்கிலேயே போனி பண்ணும் போனி கபூர்: அடுத்தது மம்மூட்டியின் ஒன்..!
அட போனிகபூர் ரீமேக்கிலேயே போனி பண்ணுவார் போலவே என்று ஆச்சர்யப்படும் அளவுக்கு மனிதர் ரீமேக் படங்களாக எடுத்துக் குவிக்கிறார்.
அட போனிகபூர் ரீமேக்கிலேயே போனி பண்ணுவார் போலவே என்று ஆச்சர்யப்படும் அளவுக்கு மனிதர் ரீமேக் படங்களாக எடுத்துக் குவிக்கிறார். பிங்க் ரீமேக் தமிழில் அஜித்தை வைத்து கல்லா கட்ட தெலுங்கு ரீமேக்கை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனமும், போனி கபூரும் இணைந்து தயாரித்தனர்.
இப்போது மலையாளத்தில் மம்மூட்டி நடிப்பில் வெளியான ஒன் என்ற படத்தை இந்தியில் ரீமேக் செய்யத் திட்டமிட்டிருக்கிறார் போனி கபூர். மலையாள திரையுலகின் ‘மெகாஸ்டார்’ மம்மூட்டி, நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டு வெளியான அரசியல் படம் ஒன் (One). மலையாள அரசியலை மையப்படுத்திய ‘ஒன்’ என்ற படத்தில், மம்மூட்டி கேரள முதல்வர் பினராயி விஜயனாக நடித்திருந்தார். ‘சிறகொடிஞ்ச கினாவுகள்’ படத்தை இயக்கிய சந்தோஷ் விஸ்வநாத் இந்தப்படத்தை இயக்கியிருந்தார். விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் இப்படம் பெற்றது. படம் வெளியாவதற்கு முன்பே நல்ல எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருந்தது. பினராயி விஜயனாக மம்முட்டி நடிக்கும் படத்தின் போஸ்டர் இணையத்தில் வெளியாகி வைரலானது. அதில் பினராயி விஜயன் போன்ற கெட்-அப்பில், கம்யூனிஸ்ட் கொடிகள் பின்புலத்தில், மம்மூட்டி சிரிப்பது போன்று இடம் பெற்ற புகைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. ‘மிரட்டலும், பேரமும் எங்களிடம் நடக்காது’ என்ற வாசகமும், ‘பினராயிலே சகாவ் பேரு விஜயன்’ என்ற தலைப்பு வாசகமும் இடம்பெற்று பட்டையைக் கிளப்பியது.
இந்நிலையில் இந்தப் படத்தின் இந்தி ரீமேக் உரிமையைப் பெற்றிருக்கிறார் போனி கபூர். போனியின் நண்பர் பரஸ் பப்ளிசிட்டியின் உரிமையாளர் ராஜேஷ் வசானியின் ஆலோசனையின் பேரிலேயே போனி இந்தப் படத்தைத் தயாரிக்கிறாராம்.
இப்போது அஜய் தேவ்கான் நடிப்பில் மைதான் படத்தின் படப்பிடிப்பில் போனி கபூர் படு பிஸியாக இருக்கிறார். அதை முடித்துக் கொண்டு 2019ல் வெளியான ஹெலன் என்ற மலையாளப் படத்தை தனது மகள் ஜான்வி கபூரை லீட் நடிகராகக் கொண்டு ரீமேக் செய்கிறார். அதனைத் தொடர்ந்து 2019ல் தமிழில் வெளியான கோமாளி படத்தை ரீமேக் செய்கிறார். இந்தப் படத்தில் ஜெயம் ரவி நடித்த பாத்திரத்தில் போனி கபூரின் மகன் அர்ஜூன் கபூர் நடிக்கவிருக்கிறார். இந்த வரிசையில் விரைவில் மம்மூக்காவின் ஒன் திரைப்படமும் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போனியின் அடுத்தடுத்த ப்ராஜக்டுகள் குறித்து அவரது நன்பர் வசானி கூறும்போது, "போனி கபூர் தென்னிந்திய சினிமாவைக் கைப்பற்றிவிட்டார் என்றே சொல்ல வேண்டும். பிங்க் ரீமேக் தமிழிலும் நேர்கொண்ட பார்வையாக வெற்றி கண்டது. தெலுங்கிலும் அதனை பவன் கல்யாணைக் கொண்டு வக்கீல் சாபாக வெற்றிப் படமாக்கியிருக்கிறார். இதுதவிர இந்தியில் ஆயுஷ்மான் கொரானா நடிப்பில் வெளியான ஆர்ட்டிக்கிள் 15 படத்தை தமிழில் உதயநிதி ஸ்டாலின் கொண்டு ரீமேக் செய்துவருகிறார். அடுத்தபடியாக அஜித்தின் வலிமை திரைப்படத்துக்கும் சில திட்டங்களை வைத்திருக்கிறார்.இப்படியாக தென்னிந்திய சினிமாவில் போனி கபூர் தனக்கென தனி முத்திரை பதித்திருக்கிறார்" என்றார்.