Bigg Boss 6 Tamil: பார்வையாளர்களுக்கு ஏமாற்றத்தை பரிசளித்த “பிக்பாஸ் சீசன் 6” ... எங்கே தவறு நடந்தது?
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி நாளை நிறைவடையவுள்ள நிலையில், முந்தைய சீசன்களை விட இந்த சீசன் ஏன் பார்வையாளர்களை கவர தவறியது என்பது குறித்து காணலாம்.
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி நாளை நிறைவடையவுள்ள நிலையில், முந்தைய சீசன்களை விட இந்த சீசன் ஏன் பார்வையாளர்களை கவர தவறியது என்பது குறித்து காணலாம்.
பிக்பாஸ் நிகழ்ச்சி
கடந்தாண்டு அக்டோபர் 9 ஆம் தேதி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் ஒளிபரப்பாக தொடங்கியது. தொடர்ந்து 6வது சீசனாக கமல் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நிலையில் கடந்த இரண்டு சீசன்களாகவே இந்நிகழ்ச்சி கொஞ்சம் போர் அடிக்க தொடங்கியது என சொல்லலாம். காரணம் போட்டியாளர்கள் ஆர்வமில்லாமல் விளையாடியதா அல்லது ஆக்ரோஷமாக வார்த்தை மோதலில் ஈடுபட்டதா என தெரியாத அளவுக்கு பிக்பாஸின் வரவேற்பு கொஞ்சம் குறைந்தே இருந்தது.
ஆனால் இம்முறை ஜிபி முத்து, திருநங்கை ஷிவின் கணேசன், அசல் கோலார், நிவாஷினி, குயின்ஸி, சாந்தி, விஜே மகேஸ்வரி, அஸிம், ராபர்ட் மாஸ்டர், ஏடிகே, அஸிம், ஜனனி, கதிரவன் ,மணிகண்டா , ரச்சிதா,ஆயிஷா, ஷெரின் ஷாம், டிக்டாக் பிரபலம் தனலட்சுமி,ராம் ராமசாமி, மற்றும் விக்ரமன் ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் வைல்ட் கார்டு எண்ட்ரீயாக மைனா நந்தினி உள்ளே வந்தார்.
எல்லா புகழும் ஜிபி முத்துவுக்கே
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை அனைவரும் பார்க்க காரணமாக அமைந்த ஒருவர் டிக்டாக், தனது வீடியோக்கள் மூலம் பிரபலமான “ஜிபி முத்து”. அவரே முதல் வார கேப்டனாகவும் ஆனார். ஆனால் தனது மகனின் உடல்நலத்தால் தன்னால் மன ரீதியாக இங்கே விளையாட முடியவில்லை எனக்கூறி வெளியேறினார். அதன் பின்னர் காமெடியாக தொடங்கிய நிகழ்ச்சி சண்டை படமாக மாற தொடங்கியது.
அஸிம் - ஆயிஷா மோதல்
டாஸ்க் ஒன்றின் மோது அஸிமிற்கு ஆயிஷா மற்றும் விக்ரமனுடன் கடும் மோதல் ஏற்பட்டது. இதில் அஸிம் மரியாதைக்குறைவாக பேச, ஆயிஷா செருப்பால் அடிப்பேன் என கொந்தளித்தார். இந்த சண்டை கடும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில் இப்படி சுவாரஸ்யமாக செல்லும் நிகழ்ச்சியில் நிகழ்ந்த அதிரடி மோதல் பார்வையாளர்களுக்கு கடுப்பை ஏற்படுத்தியது.
ராபர்ட்டின் அன்பு மழை
பொதுவாக பிக்பாஸில் முந்தைய சீசன்களில் நிகழ்ந்த காதல், ஒருதலைக் காதல் கதைகளை அறிந்திருப்போம். இந்த சீசனில் போட்டியாளரான ராபர்ட் மாஸ்டர், சக போட்டியாளரான ரச்சிதாவிடம் அன்பு மழையை பொழிந்தார். ஆனால் ரச்சிதா, அப்படி ஒரு எண்ணத்தில் ராபர்ட்டிடம் பழகவில்லை என சொல்லும் அளவுக்கு அவரை தவிர்க்க தொடங்கினார். இதனால் எமோஷனல் பிளாக்மெயில் உள்ளிட்ட பல விஷயங்களை கையிலெடுத்த ராபர்ட் மாஸ்டர் வெளியே வந்த பிறகு, ரச்சிதா மீது தான் அப்படி ஒரு எண்ணத்தில் இல்லை என கூறினார்.
கோளாறை உண்டாக்கிய அசல் கோலார்
பாடகரான அசல் கோலார் சக பெண் போட்டியாளர்களிடன் அநாகரிகமாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை வீடியோ ஆதாரத்துடன் பலர் சொன்னாலும் பிக்பாஸ் முதலில் கண்டுக்கொள்ளாமலேயே இருந்தார். ஆனால் சீக்கிரமே அசல் கோலார் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
வாரா வாரம் பஞ்சாயத்து
மற்ற நாட்களில் நிகழ்ச்சியை பார்க்காதவர்கள் சனி, ஞாயிறுகளில் கமலுக்காக டிவி முன் உட்காருவார்கள். ஆனால் அஸிம் ஒவ்வொரு வாரமும் செய்த கலவரத்தினால் அவரது தவறுகளுக்கு பஞ்சாயத்து செய்வதே வேலையாக அமைந்தது. பிக்பாஸ் முழுக்க முழுக்க அஸிம் கண்டெண்டுகளால் பல நாட்கள் நிறைந்திருந்தது.
ஏமாற்றத்தை உண்டாக்கிய வைல்ட் கார்டு எண்ட்ரீ
முதல் சீசனில் பிந்து மாதவி, சுஜா வரூணி, ஹரிஷ் கல்யாண், காஜல் பசுபதி ஆகியோர் வைல்ட் கார்டு எண்ட்ரியாக உள்ளே வந்தனர். 2வது சீசனில் நடிகை விஜயலட்சுமியும், 3வது சீசனில் நடிகை மீரா மிதுன், கஸ்தூரியும் உள்ளே வந்தனர். இதேபோல் 4வது சீசனில் நடிகை அர்ச்சனா, பாடகி சுசித்ரா, 5வது சீசனில் நடிகர் அமீர், நடிகர் சஞ்சீவ் வெங்ட் ஆகியோர் உள்ளே நுழைந்தனர். ஆனால் இந்த சீசனில் மைனா நந்தினி மட்டுமே வந்தார். இதனால் 100 நாட்களும் அதே போட்டியாளர்கள் இருந்ததால் நிகழ்ச்சி போரடித்தது.
கெஸ்ட் ரோல் கொடுத்த ஏமாற்றம்
6வது சீசனில் சுரேஷ் சக்கரவர்த்தி,திவ்யதர்ஷினி, பிரியங்கா மற்றும் மாகாபாஆனந்த் உட்பட சூப்பர் சிங்கர் போட்டியாளர்கள், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், பட புரோமோஷன்களுக்காக நடிகை அஞ்சலி, சந்தோஷ் பிரதாப் ஆகியோர் வந்தாலும் சுவாரஸ்யமாக நிகழ்ச்சி செல்லவேயில்லை.
சுவாரஸ்யமில்லாமல் போன டாஸ்க்
இன்றைக்கும் பிக்பாஸின் முதல் 5 சீசன்களிலும் ஏதாவது ஒரு டாஸ்க் பார்வையாளர்களை சுவாரஸ்யப்படுத்தி நினைவில் வைத்திருக்கும். ஆனால் இந்த சீசனில் வெறும் சண்டை மட்டுமே சென்ற நிலையில் டாஸ்க்கை யாரும் விறுவிறுப்பாக கொண்டு செல்லவில்லை. இதுபற்றி ஒவ்வொரு வாரமும் போட்டியாளர்களை கமல் கண்டித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.