15 Years of Seval: கம்பேக் கொடுத்த சிம்ரன்.. ஹீரோயினான பூனம் பாஜ்வா.. “சேவல்” படம் ரிலீசாகி 15 வருஷமாச்சு..!
கமர்ஷியல் இயக்குநர் ஹரி இயக்கத்தில் பரத் நடித்த சேவல் படம் வெளியாகி இன்றோடு 15 ஆண்டுகள் நிறைவடைகிறது.
கமர்ஷியல் இயக்குநர் ஹரி இயக்கத்தில் பரத் நடித்த சேவல் படம் வெளியாகி இன்றோடு 15 ஆண்டுகள் நிறைவடைகிறது.
பரத்துடன் கூட்டணி சேர்ந்த ஹரி
பிரஷாந்த், விக்ரம், சூர்யா, விஷால் ஆகியோருடன் இணைந்த ஹரி முதல்முறையாக பரத்துடன் இணைந்த படம் தான் “சேவல்”. இப்படத்தில் பூனம் பாஜ்வா ஹீரோயினாக அறிமுகமானார். மேலும் சில வருடங்களாக நடிக்காமல் இருந்த சிம்ரன் இப்படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். மேலும் சம்பத் ராஜ், ராஜேஷ், வடிவேலு,பிரேம், ஒய்.ஜி.மகேந்திரன், மனோ பாலா என பலரும் நடித்திருந்தார். ஜி.வி.பிரகாஷ்குமார் இப்படத்துக்கு இசையமைத்திருந்தார்.
படத்தின் கதை
பாளையங்கோட்டை மத்திய சிறையிலிருந்து பரத் விடுதலை செய்யும் காட்சியோடு படம் தொடங்கும். சொந்த ஊருக்கு ரயிலில் செல்லும் போது பிளாஷ்பேக் காட்சிகளோடு கதை ஆரம்பமாகும். தென்காசி அருகே உள்ள சிவசைலம் கிராமத்தில் அவர் ஒரு கட்டுக்கடங்காத இளைஞனாக வலம் வரும் பரத்துக்கு அஹ்ரகாரத்து பெண்ணான பூனம் மீது காதல் ஏற்படுகிறது. முதலில் மறுக்கும் அவர் பின்னர் காதலிக்க தொடங்குகிறார். இதனிடையே பிரேம் உடன் திருமணம் நடந்து குழந்தை பெற்றுக் கொண்ட நிலையில் பூனம் பாஜ்வாவின் அக்கா சிம்ரன் கேன்சர் நோயால் இறந்து போகிறார். இதனால் பிரேமுக்கு பூனத்தை இரண்டாவது திருமணம் செய்து வைக்கிறார்கள்.
அதேசமயம் ஊர் பெரியவராக வலம் வரும் சம்பத் ராஜ், பூனம் மீது ஆசைப்படும் நிலையில் அவமானப்படுத்தப்படுகிறார். இதற்கிடையில் பரத்தை கொல்ல நினைத்து சம்பத் ராஜின் ஆள் செய்யும் தவறால் பிரேம் கொல்லப்படுகிறார். ஏற்கனவே பரத்துடனான காதல் தெரிந்த நிலையில், தான் அவமானப்படுத்தப்பட்ட ஆத்திரத்தில் மூட நம்பிக்கைகளை கூறி பூனத்துக்கு மொட்டையடித்து பழி தீர்த்து கொள்கிறார். இந்த கொடுமையில் இருந்து பூனத்தை பரத் எப்படி காப்பாற்றுகிறார் என்பதே இப்படத்தின் கதையாகும்.
கூடுதல் தகவல்கள்
சேவல் படம் சிம்ரனுக்கு கம்பேக் படமாக அமைந்ததால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் முந்தைய ஹரி படங்களில் இருந்த வேகம், இப்படத்தில் இல்லாதது ஏமாற்றமளித்தது. படத்திற்கு மிகப்பெரிய பலமாக வடிவேலு காமெடி அமைந்தது. தபால்காரர் தங்கவேலுவாக அசத்தியிருப்பார். அதுவே ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது. மூட நம்பிக்கைக்கு எதிராக கருத்து சொல்லியிருந்தாலும் அதை உரக்க சொல்லாமல் இருந்ததால் இந்த “சேவல்” படம் கூவாமலே போனது.