Beast Release Date: குதூகலத்தில் ரசிகர்கள்... பீஸ்ட் ரிலீஸ் தேதி அறிவிப்பு
முதற்கட்டமாக படத்தின் போஸ்டர், புகைப்படங்கள் வெளியாகி வைரலான நிலையில், படம் அடுத்த மாதம் வெளியாகும் என்ற அறிவிப்பும் வெளியானது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் விஜய், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் (Beast) படத்தில் நடித்துள்ளார். பீஸ்ட் படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளதாக தகவல் வெளியானது. திரையரங்குகளில் காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
படத்தின் ப்ரொமோஷன் வேலைகளில் ஒரு பகுதியாக, முதல் பாடல் கடந்த மாதம் 14-ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டது. சிவகார்த்திகேயன் பாடல் வரிகள் எழுதி அனிருத் இசையமைத்துள்ள அரபிக்குத்து பாடல் பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து ஹிட் அடித்து இருக்கிறது. இந்நிலையில், படம் ஏப்ரல் 13-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.
#BeastFromApril13@actorvijay @Nelsondilpkumar @anirudhofficial @hegdepooja @selvaraghavan @manojdft @Nirmalcuts @anbariv #Beast pic.twitter.com/htH6dTPX2q
— Sun Pictures (@sunpictures) March 22, 2022
முன்னதாக, பீஸ்ட் படத்திற்கு 'யு' அல்லது 'யு/ஏ' சான்றிதழ் வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது, சென்சார் முடிந்ததும் 'பீஸ்ட்' படத்தின் ரிலீஸ் தேதி சிறப்பு போஸ்டருடன் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதே போல, இன்று படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதையும் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வழக்கமாக விஜய் படத்தின் வெளியீட்டிற்கு முன்பு ஆடியோ வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடத்தப்படும். இந்த நிலையில், பீஸ்ட் படத்தின் ஆடியோ லாஞ்ச் பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளது. பீஸ்ட் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறாது என்ற தகவல் வெளியானது. அடுத்த மாதம் படம் வெளியாக இருப்பதால், கடைசி நிமிட தயாரிப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக படக்குழு தெரிவித்திருக்கிறது. மேலும், படத்தில் இரண்டு பாடல்களே இருப்பதாக தெரிகிறது. அதனால், ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சி வேண்டாம் என படக்குழு திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.
மேலும், இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்கு பதிலாக பீஸ்ட் படத்தின் ப்ரொமோஷன் பணிகளை புதுவிதமாக செய்ய படக்குழு திட்டமிட்டிருக்கிறது. எனினும் ரசிகர்கள் ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சியை எதிர்ப்பார்த்து உள்ளனர். பீஸ்ட் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் என்ன பேசப்போகிறார் என்று அவரது ரசிகர்கள் எதிர்ப்பார்த்து உள்ளனர். இதனால், ரசிகர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில், விஜயின் பிரத்யேக நேர்காணல் ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகும் என தகவல் கிடைத்திருக்கிறது. சன் டிவியில் இந்த நேர்காணல் ஒளிபரப்பாகும் என தெரிகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்