Vanangaan First Look: வெறித்தனமான கம்பேக் தரவிருக்கும் பாலா.. நாளை வெளியாகும் வணங்கான் ஃபர்ஸ்ட் லுக்!
சில காரணங்களுக்காக வணங்கான் படத்தில் இருந்து சூர்யா விலகுவதாகவும், அவரது நன்மைக்காக இந்த முடிவை எடுத்ததாகவும் பாலாவே அறிக்கை வெளியிட்டார்.
Vanangaan First Look: பாலா இயக்கத்தில் உருவாகி வரும் ‘வணங்கான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை காலை 10 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அப்டேட் தந்த படக்குழு
வி ஹவுஸ் ப்ரோடக்ஷன்ஸ் மற்றும் பி ஸ்டூடியோஸ் தயாரிக்கும் வணங்கான் படத்தை பாலா இயக்குகிறார். முதலில் இந்தப் படத்தில் சூர்யா நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் படத்தில் இருந்து சூர்யா விலகியதும், அடுத்த ஹீரோவாக பாலாவுடன் அருண் விஜய் இணைந்தார். அவருக்கு ஜோடியாக ரோஷினி பிரகாஷ் இணைந்துள்ளார். இவர்களுடன் இயக்குநர் மிஷ்கின் முக்கியக் காட்சிகளில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில் நாளை ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
வணங்கான் படப்பிடிப்பு கன்னியாகுமரி, திருவண்ணாமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்து வரும் நிலையில் இறுதிக்கட்ட பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது. படத்தை விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளதால் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரசிகர்கள் உற்சாகம்
சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி, தாரை தப்பட்டை, நாச்சியார் உள்ளிட்ட படங்களை எடுத்து தேசிய விருது வரை பெற்ற பாலா, தனக்கே உரிய பாணியில் செயல்படும் தனி இயக்குநராக வலம் வருகிறார். கலைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் அவரது படைப்புகள் சினிமா உலகில் தனித்துவம் மிகுந்ததாகவே பார்க்கப்படுகிறது.
நடிகர்களை அந்த கேரக்டருக்கு ஏற்ப வாழ வைத்து படம் எடுப்பதில் பாலாவுக்கு நிகர் அவர் தான் என்ற அளவுக்கு படத்தின் காட்சிகளை செதுக்குவார். பாலாவிடம் வேலை பார்ப்பது கஷ்டம் என்று ஒதுங்கிய நடிகர்களும் உள்ளனர். எனினும், பிதாமகன் படத்தின் மூலம் விக்ரமுக்கு தேசிய விருது வாங்கிக் கொடுத்த பெருமை பாலாவையே சேரும். இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாலா இயக்கும் வணங்கான் படம் படம் குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்தது. அதுவும் பாலாவுடன் இணைந்து மீண்டும் சூர்யா நடிப்பார் என்பதும் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.
அருண் விஜய் நடிப்பு
எனினும், சில காரணங்களுக்காக வணங்கான் படத்தில் இருந்து சூர்யா விலகுவதாகவும், அவரது நன்மைக்காக இந்த முடிவை எடுத்ததாகவும் பாலாவே அறிக்கை வெளியிட்டார். இந்த நிலையில் அடுத்த ஹீரோ யாராக இருக்கும் என்ற கேள்விகள் எழுந்த நிலையில் வணங்கான் படத்தில் அருண் விஜய் இணைந்தார். தனித்துவமான கதை, அசத்தலான நடிப்பு என திரைக்கு வர இருக்கும் பாலாவின் வணங்கான் படத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
மேலும் படிக்க: Leo: லியோ இசை வெளியீடு விவகாரம்; ஒரே ட்வீட்டில் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த தயாரிப்பு நிறுவனம்
Viduthalai 2: மஞ்சு வாரியர் வரிசையில் தினேஷ்... விடுதலை 2 படத்தில் அடுத்தடுத்து இணையும் பிரபலங்கள்!