Viduthalai 2: மஞ்சு வாரியர் வரிசையில் தினேஷ்... விடுதலை 2 படத்தில் அடுத்தடுத்து இணையும் பிரபலங்கள்!
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் மஞ்சு வாரியரைத தொடர்ந்து நடிகர் தினேஷ் இணைந்துள்ளதாகத் தகவல்.
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தில் மஞ்சு வாரியர் மற்றும் நடிகர் தினேஷ் நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விடுதலை
கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதி வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் விடுதலை. விஜய் சேதுபதி , சூரி, சேத்தன், கெளதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தார்கள். இளையராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார். ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் இந்தப் படத்தை தயாரித்திருந்தார்.
நகைச்சுவை நடிகரான சூரி இந்தப் படத்தின் மூலம் உணர்ச்சிப்பூர்வமான ஒரு நடிகராக அறிமுகமானார். விடுதலை திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது இதன் இரண்டாம் பாகத்தில் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
நடிகர்கள்
#Viduthalai2 - Vetrimaaran - Manju Warrier - Attakathi Dinesh..💥 pic.twitter.com/gl2xrjjl90
— Laxmi Kanth (@iammoviebuff007) September 22, 2023
முதல் பாகத்தில் நடித்த சூரி மற்றும் விஜய் சேதுபதி முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க நடிகர் விஜய் சேதுபதியின் மகனான சூர்யா சேதுபதி இந்தப் படத்தில் நடித்து வருவது சமீபத்தில் தெரிய வந்தது. தொடர்ந்து அசுரன் திரைப்படத்தில் நடிகர் தனுஷுடன் இணைந்து நடித்த நடிகை மஞ்சு வாரியர் இந்தப் படத்தில் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் விசாரணை படத்தில் நடித்த நடிகர் தினேஷ் இந்தப் படத்தில் நடிக்க இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவருடன் இயக்குநர் வெற்றிமாறன் எடுத்து கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
வாடிவாசல்
விடுதலை படத்தைத் தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் வாடிவாசல் படத்தின் வேலைகளில் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல் என்னும் நாவலை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்தப் படம் ஜல்லிக்கட்டை கதைக்களமாக கொண்டது.
எப்போதும் லைவாகவே காட்சிகளை சித்தரிக்க விரும்பும் வெற்றிமாறனுக்கு வாடிவாசல் படத்தில் ஒரு சில சிக்கல் இருந்து வந்தது. ஓரளவுக்கு மேல் ஜல்லிக்கட்டு தொடர்பான காட்சிகளை நேரடியாக எடுப்பது மிக ஆபத்தானது என்பதால் வாடிவாசல் திரைப்படத்தில் சிஜி பயன்படுத்தி மாடு பிடிக்கும் காட்சிகளை உருவாக்கலாம் என முடிவுசெய்யப்பட்டது.
இந்த நிலையில் இந்த படத்தின் கிரஃபிக்ஸ் காட்சிகளின் வேலைகளை தொடங்குவதற்காக வெற்றிமாறன் லண்டன் சென்றுள்ளார். அவதார் படத்தின் சிஜி யில் வேலை செய்த தொழில் நுட்பக் கலைஞர்களுடன் இந்த பணிகள் நடந்து வருகின்றன. இது சூர்யா மற்றும் வெற்றிமாறனின் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளது.