Surya On Ayan Song Remake | அயன் பட பாடலை ரீமேக் செய்த கேரள சிறுவர்கள்.. Loved This சொல்லி ட்வீட் செய்த சூர்யா..!
அயன் படத்தில் இடம்பெற்ற தொடக்கப்பாடலை அப்படியே மறு ஆக்கம் செய்திருந்த கேரள சிறுவர்களை நடிகர் சூர்யா பாராட்டியுள்ளார்.
சமீபகாலமாக சமூக வலைதளங்கள் மூலம் பலரும் தங்களது ஆடல், பாடல் திறமைகளை வெளிக்காட்டி வருகின்றனர். இந்த வரிசையில். திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சிறுவர்கள் அயன் படத்தின் மிகவும் புகழ்பெற்ற பளபளக்குற பகலா நீ பாடலுக்கு படத்தில் வருவது போன்றே அப்படியே நடனமாடி காட்சிகளை வடிவமைத்துள்ளனர். தற்போது, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் ட்ரெண்டாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த நடிகர் சூர்யா. சிறுவர்களின் வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
மேலும், சிறுவர்களை பாராட்டி ஒரு ஆடியோவையும் அவர்களுக்கு அனுப்பியுள்ளார். அந்த ஆடியோவில் சூர்யா கூறியிருப்பதாவது,
“ திருவனந்தபுரம் ராஜாஜி நகரில் இருக்கும் அனைத்து இளைய சகோதரர்களுக்கும் இந்த செய்தி. வணக்கம் நான் சூர்யா பேசுகிறேன். என்ன ஒரு அற்புதமான பணியை நீங்கள் செய்திருக்கிறீர்கள். முழுவதும் ரசித்தேன். அயன் படம் வெளியாகி 10 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அதை இவ்வளவு உயிர்ப்புடன் மீண்டும் உருவாக்கியதற்கு முதலில் நன்றி. அயன் குழுவில் இருந்து அனைவரும் இதைப்பார்த்து ரசித்திருப்பார்கள் என்று நம்புகிறேன்.
இந்த காணொலியை கண்டிருந்தால் கே.வி.ஆனந்தும் அதிகம் மகிழ்ந்திருப்பார். எந்தவிதமான தொழில்நுட்ப கருவிகள் இல்லாமல் இதை நீங்கள் செய்திருக்கிறீர்கள் என்று சொன்னார்கள். உங்களின் பேரார்வம் இருந்தால், பேரன்பு இருந்தால் வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியும். எதுவும் நம்மைத் தடுக்காது என்ற செய்தியை நீங்கள் பலருக்கு கொண்டு சேர்த்திருக்கிறீர்கள். உங்கள் தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்கள் பலருக்கும் முன்னுதாரணமாக இருக்கிறீர்கள்.
Loved this... too good.! Stay safe! https://t.co/kzSMpvwjRr
— Suriya Sivakumar (@Suriya_offl) July 25, 2021
உங்கள் வாழ்க்கையில் ஏதாவது செய்ய வேண்டும், சாதிக்க வேண்டும் என்று நினைத்தால் அதற்கு எந்த சாக்கும் சொல்ல வேண்டாம் என்று கருத்தையும் நீங்கள் சொல்வதை பார்க்க முடிகிறது. முழு காணொலியிலும் உங்கள் உற்சாகத்தை பார்த்தேன். மீண்டும் பழைய நினைவுகளை அசைபோடுவது நன்றாக இருந்தது. உங்கள் ஒவ்வொருவருக்கும் என் நல்வாழ்த்துக்கள். இதன் பின்னால் இருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் என் அன்பு. உங்கள் குடும்பம், நண்பர்கள், அக்கம்பக்கத்தினர் என ஆதரவளித்த அனைவருக்கும் நீங்கள் என் நன்றியைத் தெரிவியுங்கள். நீங்கள் என்ன சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதில் கண்டிப்பாக சிறந்து விளங்குவீர்கள். கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நடிகர் சூர்யா திறந்த மனதுடன் தனது ரசிகர்களாகிய சிறுவர்களை பாராட்டியதற்கு பலரும் சூர்யாவிற்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.