Athey Kangal: 1967இல் சீட் நுனியில் அமரவைத்த திகில் கிளாசிக்! ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்த அதே கண்கள் படக்குழு!
Athey Kangal Movie: ஈஸ்ட்மெண்ட் கலரில் வந்து தமிழ் ஆடியன்ஸை அச்சத்தில் உறைய வைத்ததுடன், காமெடி, பாடல்கள் என முழுமையான கமர்ஷியல் அம்சங்களுடன் பேக்கேஜாக இப்படம் ரசிகர்களைக் கவர்ந்தது.
தமிழ் சினிமா வரலாற்றிய பட்டையைக் கிளப்பிய கிளாசிக் திகில் படமான ‘அதே கண்கள்’ (Athey Kangal) திரைப்படம் பற்றிய சுவாரஸ்யத் தகவல்களை ஏவிஎம் நிறுவனம் பகிர்ந்துள்ளது.
ஜாம்பவான் இயக்குநரின் த்ரில்லர் கிளாசிக்
ஏவிஎம் தயாரிப்பில் ஏ.சி. திருலோக்சந்தர் இயக்கத்தில் கடந்த 1967ஆம் ஆண்டு மே மாதம் 26ஆம் தேதி வெளியான கல்ட் கிளாசிக் தமிழ் திரைப்படம் ‘அதே கண்கள்’. கோலிவுட் சினிமாவின் அன்றைய ஹார்ட்த்ரோப் நாயகனாகக் கொண்டாடப்பட்ட ரவிச்சந்திரன் கதாநாயகனாக நடிக்க, கனவு நாயகி காஞ்சனா இப்படத்தில் அவருடன் ஜோடி சேர்ந்தார்.
பிரபல நடிகர்களான அசோகன், நாகேஷ், சகுந்தலா உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். திகிலுடன் நடிகர் நாகேஷின் காமெடியும் இப்படத்துக்கு கூடுதல் பலம் சேர்த்தது. தமிழ்,தெலுங்கு, இந்தி என மாறி மாறி ஹிட் கொடுத்த ஜாம்பவான் இயக்குநர் திருலோக்சந்தர் இப்படத்தினை இயக்க, வேதா எனும் வேதாச்சலம் இப்படத்துக்கு இசையமைத்தார்.
திக் திக் திருப்பங்கள்..
சிவாஜி கணேசன் நடித்த ‘அந்த நாள்’ திரைப்படம் தொடங்கி கோலிவுட்டில் க்ரைம் த்ரில்லர் படங்கள் அவ்வப்போது வந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றிருந்தாலும், ஈஸ்ட்மெண்ட் கலரில் வந்து தமிழ் ஆடியன்ஸை அச்சத்தில் உறைய வைத்ததுடன், காமெடி, பாடல்கள் என முழுமையான கமர்ஷியல் அம்சங்களுடன் பேக்கேஜாக வந்த அதே கண்கள் படத்தினை அன்றைய காலக்கட்டத்து ரசிகர்கள் கொண்டாடினர்.
ஒரு குடும்பத்துக்குள் அடுத்தடுத்து நடக்கும் கொலைகள், பிரமாண்ட வீடு, அடுத்தடுத்த திருப்பங்கள், விசாரணை என நகரும் கதையைக் கொண்ட இப்படத்தினை திரையரங்குக்கு படையெடுத்துச் சென்று ரசிகர்கள் ரசித்தனர். தமிழ் மொழியுடன் சேர்த்து ‘அவெ கல்லு’ எனும் பெயரில் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டு இப்படம் வெளியாகி ஹிட் அடித்தது.
வீடியோ பகிர்ந்த ஏவிஎம்
இன்னும் சில தினங்களில் இப்படம் வெளியாகி 57 ஆண்டுகளை நிறைவு செய்யப்போகிறது. இந்நிலையில் அதே கண்கள் படம் பற்றிய சுவாரஸ்யமான வீடியோ ஒன்றை ஏவிஎம் நிறுவனம் தன் இணைய பக்கத்தில் பகிர்ந்துள்ளது. “ஒரு தாழ்மையான வேண்டுகோள். படத்தைப் பாருங்கள், ரசியுங்கள். உங்களைப் போல் உங்கள் நண்பர்களும், மற்றவர்களும் ரசிக்க வேண்டுமல்லவா.. எனவே கதையின் முடிவை யாரிடமும் சொல்லாதீங்க” என சொல்லி அந்தக் காலத்திலேயே தொடங்கிய படம் அதே கண்கள்.
படக்குழு விடுத்த வேண்டுகோள்
நாம் இப்போ ஸ்பாய்லர் சொல்லிடாதீங்கனு சொல்றோம். ஆனால் 1967இலேயே டைட்டில் கார்டு முடிந்தவுடன் இப்படி சொல்லி வித்தியாசாகத் தொடங்கிய படம். இன்னைக்கு பார்த்தாலும் யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் மற்றும் திருப்புமுனைகளுடன் அமைந்த படம். சஸ்பென்ஸ் த்ரில்லர். மேலும் இந்தி படமான மெஹர்பான் படத்துக்காக ஏவிஎம் ஏற்கெனவே போட்ட பிரமாண்ட செட் பெரிதாக உபயோகப்படாததால் அந்த செட்டில் ஒரு த்ரில்லர் எடுக்கலாம் என முடிவெடுத்த இயக்குநர் திருலோக்சந்தர் முடிவெடுத்து. ஒரே வாரத்தில் திரைக்கதை அமைக்கப்பட்டு இப்படம் ரெடியானது” எனு தகவலுடனும் பெருமிதத்துடனும் ஏவிஎம் நிறுவனம் வீடியோ பகிர்ந்துள்ளது.
An interesting fact about Athey Kangal!
— AVM Productions (@avmproductions) May 15, 2024
🎙️: @rdeepakparamesh #AVMProductions #AVMStudios #AtheyKangal pic.twitter.com/SdFuP0gIPW
கே தொலைக்காட்சியின் இன்று ஒளிபரப்பப்பட்டாலும் சேனலை மாற்றாமல் பார்த்து ரசிக்கப்படும் இப்படத்தினை இன்றைய தலைமுறை ரசிகர்களும் திகிலுடன் பார்த்து ரசித்து வருகிறார்கள்