Andhra Pradesh Corona Management: ஆக்சிஜன் வங்கி தொடங்கினார் நடிகர் சிரஞ்சீவி
தனது ரத்த தான வங்கி அலுவலகத்தில் ஆக்சிஜன் வங்கிகளை தொடங்கி வைத்த நடிகர் சிரஞ்சீவி, ஆக்சிஜன் பற்றாக்குறையால் இனி மரணங்கள் ஏற்படக்கூடாது என்று கூறினார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கை வசதி கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ள நிலையில், பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி தனது மகன் ராம் சரணுடன் இணைந்து ஆக்சிஜன் வங்கியை தொடங்கியுள்ளார்.
தனது சிரஞ்சீவி சாரிட்டபிள் டிரஸ்ட் மூலம் சிரஞ்சீவி பல உதவிகளை செய்து வருகிறார். இவர், பல வருடங்களுக்கு முன்பு தொடங்கிய கண் மற்றும் ரத்த தான வங்கி மூலம் இன்றும் பலரும் பலனடைந்து வருகின்றனர். இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால், ஆக்சிஜன் பற்றாக்குறையும் இருந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து, சிரஞ்சீவி தனது சாரிட்டபிள் டிரஸ்ட் மூலம் ஆந்திராவின் அனந்தபூர் மற்றும் குண்டூர் மாவட்டங்களில் ஆக்சிஜன் வங்கிகளை தொடங்கி வைத்தார். இவரும், இவரது மகனும், நடிகருமான ராம் சரண் தேஜா ஆகியோர் இணைந்து இதனை தொடங்கியுள்ளனர்.
ஐதராபாத்தின் ஜூப்பிளி ஹில்ஸ் பகுதியில் உள்ள தனது ரத்த தான வங்கி அலுவலகத்தில் இதனை தொடங்கி வைத்த சிரஞ்சீவி, ஆக்சிஜன் பற்றாக்குறையால் இனி மரணங்கள் ஏற்படக்கூடாது என்று கூறினார்.மேலும், ஆக்சிஜன் தேவைப்படுவோர் நேரடியாக வந்து பெற்றுக்கொள்ளலாம் என்று சிரஞ்சீவி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். சிரஞ்சீவியின் இந்த செயலுக்கு பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். சிரஞ்சீவி மற்றும் அவரது ராம் சரண் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, சிரஞ்சீவி நடிகர் பொன்னம்பலத்தின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக ரூ. 2 லட்சம் நிதியுதவி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, சிரஞ்சீவிக்கு காணொலி வாயிலாக நடிகர் பொன்னம்பலம் நன்றி கூறினார்.
அந்த காணொலியில் சிரஞ்சீவி அண்ணனுக்கு வணக்கம் என்றும், ஜெய் ஸ்ரீராம் என்று தனது பேச்சைத் தொடங்கியுள்ள அவர், “ரொம்ப நன்றி அண்ணே! என்னுடைய சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு நீங்கள் அளித்த ரூ.2 லட்சம், மிகவும் உதவியாக இருந்தது” எனக் கூறினார். மேலும் இந்த உதவியை நான் உயிருள்ளவரை மறக்க மாட்டேன் என்றும் அண்ணனுக்கு என் மனமார்ந்த நன்றி என கூறியுள்ளார். இதோடு உங்கள் பெயரைக் கொண்ட ஆஞ்சநேயர் என்றும் உங்களை சிரஞ்சீவியாக வைத்திருப்பார். நன்றி அண்ணே" என்று பொன்னம்பலம் நெகிழ்ச்சியுடன் பேசினார்.
நடிகர் சிரஞ்சீவி, இயக்குநர் கொரட்டாலா சிவா இயக்கத்தில் ‘ஆச்சார்யா’ படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இந்தப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. பொதுமக்கள் முககவசம் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுவது, தேவையில்லாமல் வெளியில் செல்லாமல் இருப்பது, சமூக இடைவெளியை முறையாக கடைபிடிப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக கையாண்டால் கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்.