Covid-19 Vaccination: பணியாளர்களுக்கு தடுப்பூசி ஏற்பாடு செய்த அல்லு அர்ஜுனுக்கு குவியும் பாராட்டு!
கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்த நடிகர் அல்லு அர்ஜுன், தனது பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்து தந்ததை பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
45 வயதிற்கு மேற்பட்ட தனது பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள நடிகர் அல்லு அர்ஜுன் ஏற்பாடு செய்துள்ளார்.
கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு ஓராண்டு கடந்த நிலையிலும், தொற்று பரவல் குறையாமல் அதிகமாகி வருகிறது. தற்போது, பல நாடுகளில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை கோரதாண்டவம் ஆடி வருகிறது. மகாராஷ்டிரா, டெல்லி, உத்திரப்பிரதேசம் மாநிலங்களில் பாதிப்பு குறைந்து வரும் நிலையில், தென் மாநிலங்களான கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அத்துடன் தடுப்பூசிகள் போடப்படும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
கொரோனா தொற்றால் திரைப்பட பிரபலங்களும் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சமீபத்தில்தான் அதில் இருந்து மீண்டு வந்தார். தனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டவுடன் தன்னை 15 நாட்களாக தனிமைப்படுத்திகொண்டார் அவர். அதன்பிறகு, தொற்றில் இருந்து மீண்ட அவர், தனது வீட்டுக்கு சென்று குழந்தைகளை பார்த்தவுடன் கட்டி தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதுதொடர்பான வீடியோவும் வெளியாகி வைரலாகியது.
இந்நிலையில், நடிகர் அல்லு அர்ஜுன் தன்னிடம் பணிபுரிந்து வரும் 45 வயதிற்கு மேற்பட்ட பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள ஏற்பாடு செய்துள்ளார். நாட்டில் கொரோனா இரண்டாவது அலை கோரத்தாண்டம் ஆடி வரும் நிலையில், ஆக்சிஜன் படுக்கை வசதி, தடுப்பூசி பற்றாக்குறை போன்றவை ஒரு பக்கம் வாட்டி வதைக்கிறது. இந்நிலையில், இந்த ஏற்பாடுகளை செய்துள்ளதாக அல்லு அர்ஜுன் அறிவித்துள்ளார். அவரின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். இதேபோல, மற்ற நடிகர்களும் செய்ய வேண்டும் என்று சினிமா ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
அல்லு அர்ஜுன் கொரோனா முதல் அலையின்போது தமிழ்நாட்டிற்கு நிதி கொடுத்திருந்தார். இதேபோல், 2015 சென்னை வெள்ளத்தில் சிக்கி தவித்தபோதும், நிவாரண நிதி அளித்திருந்தார். மேலும், பல்வேறு உதவிகளையும் அவர் செய்துள்ளார். அல்லு அர்ஜுன் தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வந்தாலும், அவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது, சுகுமார் இயக்கத்தில் ‘புஷ்பா’ படத்தில் அவர் நடித்து வருகிறார். சமீபத்தில் இந்தப்படத்தின் அவரது அறிமுக டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் விரைவில் வெளியாக இருக்கும் ‘புஷ்பா’ படத்தை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.
பொதுமக்கள் முககவசம் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுவது, தேவையில்லாமல் வெளியில் செல்லாமல் இருப்பது, சமூக இடைவெளியை முறையாக கடைபிடிப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக கையாண்டால் கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்.