Ajith kumar Characters: ரெண்டே கேரக்டர்களில் 17 வருடங்களாக நடிக்கும் ”ஏகே” அஜித்குமார்.. நியாயமா தல இது?
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் ஒருவரான அஜித் குமார், கடந்த 17 ஆண்டுகளாக வெறும் இரண்டே கதாபாத்திரங்களில் மாறி மாறி நடித்து வருவது குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் ஒருவரான அஜித் குமார், கடந்த 17 ஆண்டுகளாக வெறும் இரண்டே கதாபாத்திரங்களில் மாறி மாறி நடித்து வருவது குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
”ஏகே” எனும் அஜித்குமார்:
எந்தவித சினிமா பின்புலமும் இன்றி தனது தனிப்பட்ட உழைப்பால், அஜித்குமார் தமிழ் திரையுலகின் முன்னணி நாயகராக உருவெடுத்துள்ளார். தமிழ் சினிமாவின் அடுத்த முன்னணி நடிகர் யார் என்பதில் அஜித் குமாருக்கும், விஜய்க்கும் இடையே தான் கடும் போட்டி நிலவி வருகிறது. இவர்களது படங்கள் வெளியாகும் போது திரையரங்குகள் விழாக்கோலம் கொள்வதோடு, சமூக வலைதளங்கள் போர்க்களமாக மாறியிருக்கும். இந்த இரு நடிகர்களும் அந்த அளவிற்கு பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளனர். இதனிடையே, அஜித் என்றாலே ஒரு காட்ஃபாதர் எனும் ஒரு பிம்பம் தமிழ் சினிமாவில் உள்ளது. ஆனால், கடந்த 17 ஆண்டுகளாக அஜித் வெறும் இரண்டே கதாபாத்திரங்களில் மட்டுமே மாறி மாறி நடித்து வருவது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.
அந்த இரண்டு கதாபாத்திரங்கள்:
கடந்த 2007ம் ஆண்டு வெளியான பில்லா படத்தில் தொடங்கி, அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு படம் வரையில் அவர் நடித்த அத்தனை படங்களுமே வெறும் இரண்டு கதாபாத்திரங்களை மட்டுமே மையமாக கொண்டுள்ளது. அதில் ஒன்று டான் மற்றொன்று காவல்துறை அதிகாரி. அதற்கான முழு பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
படங்கள் | கதாபாத்திரம் |
பில்லா (2007) | டான் |
ஏகன் (2008) | காவல்துறை அதிகாரி |
அசல் (2010) | டான் |
மங்காத்தா (2011) | காவல்துறை அதிகாரி |
பில்லா 2 (2012) | டான் |
ஆரம்பம் (2013) | காவல்துறை அதிகாரி |
வீரம் (2014) | டான் |
என்னை அறிந்தால் ( 2015 ) | காவல்துறை அதிகாரி |
வேதாளம் (2015) | டான் |
விவேகம் (2017) | காவல்துறை அதிகாரி |
விஸ்வாசம் (2019) | டான் |
வலிமை (2022) | காவல்துறை அதிகாரி |
துணிவு | டான் |
மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து படங்களிலும் அஜித் உள்ளூர் கிராமத்தை சேர்ந்த பெரிய தலகட்டு என்பது போன்ற தூக்குதுரை கதாபாத்திரம் தொடங்கி, சர்வதேச அளவில் பெரும் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களை செய்யும் டார்க் டெவில் போன்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அப்படியே மற்றொருபக்கம் பார்த்தால் ஏகன் படத்தில் உள்ளூர் காவல்துறை சிவா எனும் கதாபாத்திரம் தொடங்கி, சர்வதேச அளவிலான பிரச்னைகளுக்கு தீர்வு காணும் இண்டர்போல் அதிகாரியான அஜய் குமார் போன்ற கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.
அதேநேரம், இந்த 17 ஆண்டுகளில் டான் மற்றும் காவல்துறை அதிகாரி கதாபாத்திரங்கள் இன்றியும் அஜித்குமார் இரண்டு படங்களில் நடித்துள்ளார். அதில் ஒன்று ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான இங்கிலிஸ் விங்கிலிஷ். அதில் அஜித்குமார் கவுர தோற்றத்தில் மட்டுமே நடித்து இருப்பார். 2019ம் ஆண்டு வெளியான நேர்கொண்ட பார்வை படத்தில் வழக்கறிஞராக நடித்து இருப்பார். ஆனால், அந்த படம் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
வசூலில் சளைக்காத அஜித்குமார்:
என்ன தான் அஜித்குமார் இரண்டே கதாபாத்திரங்களில் மாறி மாறி நடித்து வந்தாலும், அவரது படங்கள் வசூல் ரீதியாக தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றன. அவரது ரசிகர்களும் இந்த படங்களை கொண்டாடி வருகின்றனர். இதனிடையே, அஜித்குமார் அடுத்ததாக மகிழ் திருமேனி இயக்கத்தில், விடாமுயற்சி எனும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் அவர் நடிப்பது டான் கதாபாத்திரமா அல்லது காவல்துறை அதிகாரி கதாபாத்திரமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.