AK 62: இந்த வாரமாவது வெளியாகுமா ஏகே 62 அப்டேட்..? வழிமேல் விழிவைத்து காத்திருக்கும் அஜித் ரசிகர்கள்!
ஏகே 62 அப்டேட் தான் வருகிறது என ஆசுவாசமான அமர்ந்திருந்த அஜித் ரசிகர்களின் மனதில், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய கதையாக தலைவர் 170 அப்டேட்டை வெளியிட்டு கவலைக்குள்ளாக்கியது லைகா.
துணிவு பட வெற்றிக்குப் பிறகு விக்னேஷ் சிவன் ட்விட்டர் பயோவில் ஏகே 62 பெயரை நீக்கியது தொடங்கி தற்போது வரை சமூக வலைதளத்தில் வாரந்தோறும் ட்ரெண்டாகி அஜித் ரசிகர்கள் தொடங்கி அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தி புலம்பவைத்து வரும் விஷயம் ஏகே 62 அப்டேட்.
ஏகே 62:
நடிகர் அஜித்குமாரின் அடுத்த படமான ஏகே62 படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாக அறிவிப்புகள் சென்ற ஆண்டே வெளியாகின. தொடர்ந்து இந்தப் படம் குறித்த அப்டேட்கள் ஒவ்வொன்றாக வெளிவந்த நிலையில், ஏகே 62வின் ஓடிடி உரிமையை வாங்கியுள்ளதாக நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளம் அதிகாரப்பூர்வ அறிவித்தது.
ஆனால் அதன் பின் நடந்த விஷயங்கள் அனைத்தும் கடந்த ஒரு மாதமாக கேட்டு சளித்த கதை. விக்னேஷ் சிவன் தன் ட்விட்டர் பயோவிலிருந்து ஏகே 62வை நீக்கியது, அஜித் ஃபோட்டோவை ட்விட்டர் கவரில் இருந்து நீக்கியது, லைகா நிறுவனம், அஜித் என இருவருமே விக்னேஷ் சிவனின் கதையை விரும்பாதது, அவருக்கு பதிலாக இயக்குநர் மகிழ் திருமேனியை ஒப்பந்தம் செய்தது என இணையத்தில் ஏகே 62 பற்றி கடந்த ஒரு மாதமாக காலமாக சரமாரி அப்டேட்கள் வந்த வண்ணம் உள்ளன.
மகிழ் திருமேனியா? வெங்கட் பிரபுவா?
இந்நிலையில் ஒருபக்கம் மகிழ் திருமேனி ஏகே 62 படத்தை இயக்குகிறார், இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார் என தகவல்கள் வந்தது. மறுபுறம் No Guts No Glory எனும் துணிவு பட வாசகம் பொறித்த ஷர்ட் அணிந்து வெங்கட் பிரபு புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகி, வெங்கட் பிரபுவின் மங்காத்தா 2 தான் ஏகே 62 எனும் மற்றொரு தகவலும் இணையத்தில் உலா வரத் தொடங்கியது.
ஆனால் இவை எது குறித்தும் அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளிவராத நிலையில், மார்ச் 1ஆம் தேதி லைகா நிறுவனம் ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக அறிவித்து கோலிவுட்டை பரபரப்பாக்கியது. அஜித் ரசிகர்கள் ஒருவைழியாக ஏகே 62 அப்டேட் தான் வருகிறது என ஆசுவாசமான அமர்ந்து ஆரூடம் தெரிவித்துக் கொண்டிருந்த நிலையில், அடுத்த நாள் தலைவர் 170 அப்டேட்டை வெளிட்டு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய கதையாக அஜித் ரசிகர்களை பெரும் அதிருப்தியில் ஆழ்த்தியது லைகா.
அப்டேட் வருமா?
எனினும் மற்றொருபுறம் ஏகே 62 படத்துக்கு சத்தமில்லாமல் பூஜை போடப்பட்டுவிட்டது என்றும், அஜித் தான் உலகம் முழுவதும் பைக்கில் பயணிக்கவிருந்த சுற்றுலாவை ஏகே 62 படத்துக்காக ஒத்திவைத்திருக்கிறார் என்றும் தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும் ஏகே 62 ஹீரோயின் குறித்து இன்னும் படக்குழு ஒரு முடிவுக்கு வரவில்லை என்றும், விவேகம் படத்துக்குப் பிறகு காஜல் அகர்வால் மீண்டும் இந்தப் படத்தில் அஜித்துடன் இணைவதாகவும் தகவல்கள் வெளியாகின.
லைகாவின் அறிவிப்புக்குப் பிறகு கடந்த சில நாள்களாக சோர்ந்து போய் அமைதி காத்து வந்த நிலையில், தற்போது இந்த வாரம் நிச்சயம் ஏகே 62 அறிவிப்பு வெளியாகலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த வாரமாவது எந்த ஏமாற்றுமும் இன்றி ஏகே 62 அப்டேட் சொன்னபடி வருமா? எனக் கவலையுடன் அஜித் ரசிகர்கள் எதிர்ப்பார்த்து காத்துள்ளனர்.