ஐஸ்வர்யா - உமாபதி காதலுக்கு பச்சைக்கொடி காட்டிய அர்ஜூன், தம்பி ராமையா... கல்யாணம் எந்த மாதம் தெரியுமா?
நடிகர் உமாபதி ராமையாவும், நடிகை ஐஸ்வர்யாவும் விரைவில் காதல் திருமணம் செய்துக் கொள்ள உள்ளதாக சொல்லப்படும் நிலையில் திருமணம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் உமாபதி ராமையாவும், நடிகை ஐஸ்வர்யாவும் விரைவில் காதல் திருமணம் செய்துக் கொள்ள உள்ளதாக சொல்லப்படும் நிலையில் திருமணம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் அர்ஜூன் மகள் ஐஸ்வர்யா
1984 ஆம் ஆண்டு நன்றி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் நடிகர் அர்ஜூன். நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர் என பன்முக திறமைக் கொண்ட அர்ஜூன் தமிழில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 90களின் காலக்கட்டத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்த அவர், தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று பல மொழிகளில் நடித்து உள்ளார்.
மேலும் அர்ஜூன் படங்களில் ஆக்ஷன் காட்சிகள் களைக்கட்டும். அவர் தமிழ் சினிமாவின் புரூஸ்லி எனக்கூட ரசிகர்களால் அழைக்கப்படுவார். அப்படியான அர்ஜூன் நிவேதிதா என்ற நடிகையை திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஐஸ்வர்யா, அஞ்சனா என இரு மகள்கள் உள்ளனர். இவர்களில் ஐஸ்வர்யா, விஷால் நடித்த பட்டத்து யானை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும் சொல்லி விடவா என்னும் தமிழ் படத்தில் நடித்துள்ளார். அதன்பிறகு சினிமாவில் நடிக்காமல் இருந்து வருகிறார்.
இப்படியான நிலையில் ஐஸ்வர்யா, நடிகர் தம்பி ராமையாவின் மகனான உமாபதியை காதலித்து வருவதாக ஒரு தகவல் ஒன்று கடந்த சில தினங்களாகவே காட்டுத்தீயாய் பரவியது. உமாபதி தமிழில் ஒரு கூடை முத்தம், மணியார் குடும்பம், திருமணம், தண்ணி வண்டி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். மேலும் 2021 ஆம் ஆண்டு நடிகர் அர்ஜூன், ஜீ தமிழில் தொகுத்து வழங்கிய ‘சர்வைவர்’ நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார்.
திருமணம் எப்போது தெரியுமா?
இந்த நிகழ்ச்சியின் போது தான் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்த ஐஸ்வர்யாவுடன் உமாபதிக்கு சந்திப்பு ஏற்பட்டதாகவும், இது காதலாக மாறியதாக சொல்லப்படுகிறது. இவர்களது காதலுக்கு அர்ஜூனும், தம்பி ராமையாவும் பச்சைக்கொடி காட்டியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் ஆஞ்சநேயர் கோவில் ஒன்றில் இரு குடும்பத்தினரும் சந்தித்து பேசியுள்ளனர். உமாபதியின் பிறந்தநாளான நவம்பர் 8 ஆம் தேதி திருமண தேதி வெளியாகும் என தம்பி ராமையா தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தான் திருமணம் நடைபெறும் எனவும் சொல்லப்படுவதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.