Captain Miller: கேப்டன் மில்லர் எப்படி இருக்கும்? - நடிகை விஜி சந்திரசேகர் சொன்ன தகவல்.. எகிறும் எதிர்பார்ப்பு
சத்யஜோதி நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் “கேப்டன் மில்லர்”. அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இந்த படத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்துள்ளார்.
கேப்டன் மில்லர் படத்தில் தான் நடிக்க என்ன காரணம் என்பதை நடிகை விஜி சந்திரசேகர் ஏபிபி நாடு சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
சத்யஜோதி நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் “கேப்டன் மில்லர்”. அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இந்த படத்தில் தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், சந்திப் கிஷன், நிவேதிதா சதீஷ் , காளி வெங்கட், ஜெயப்பிரகாஷ், அதிதி பாலன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இந்த படத்துக்கு இசையமைத்துள்ள நிலையில் இந்த படத்தின் ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. கேப்டன் மில்லர் படம் பொங்கல் வெளியீடாக நாளை (ஜனவரி 12 ஆம் தேதி) ரிலீசாகவுள்ளது.
இதனிடையே கேப்டன் மில்லர் படத்துக்கான டிக்கெட் முன்பதிவு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தமிழ்நாடு அரசு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதியளித்து விட்ட நிலையில் கேப்டன் மில்லர் தனுஷூக்கு 2024 ஆம் ஆண்டின் முதல் வெற்றிப்படமாக அமையுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனிடையே கேப்டன் மில்லர் பட ப்ரோமோஷனுக்காக அதில் நடித்த பிரபலங்கள் நேர்காணல்களில் பங்கேற்று வருகிறார்கள். அந்த வகையில் ஏபிபி நாடு சேனலுக்கு நடிகை விஜி சந்திரசேகர் பேட்டியளித்துள்ளார். அதில் கேப்டன் மில்லர் படம் தொடர்பான பல தகவல்களை தெரிவித்துள்ளார்.
அதாவது, “கேப்டன் மில்லர் படத்தில் நடிக்க சத்யஜோதி நிறுவனத்தில் இருந்து போன் வந்தது. இப்படி ஒரு தயாரிப்பு நிறுவனத்தில் நடிப்பது வரப்பிரசாதம் தான். அருண் தான் இயக்கப்போவதாக சொன்னபோது, எங்கேயோ கேட்ட பெயர் மாதிரி இருக்குதே என யோசித்துவிட்டு ராக்கி படம் பண்ணவரா? என கேட்டேன். ஆமாம் என சொன்னார்கள். ராக்கி படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவரோட படம் என சொன்னபோது நான் நடிக்க ஆர்வமாக இருந்தேன். இது பழைய கால கதை என சொன்னதும் பிடித்துவிட்டது. தனுஷ் ஹீரோவாக நடிக்கப்போகிறார் சொன்னது அதை எப்படி மறுக்க முடியும்?
ஆனால் அருண், என்னிடம் இது ஒரு சின்ன கேரக்டர் தான். இதில் உங்களை தான் நினைத்து கேரக்டரை உருவாக்கியுள்ளேன் என சொன்னதும் நான் உடனடியாக ஓகே சொல்லிவிட்டேன். மேலும் கேப்டன் மில்லர் படத்துக்காக நான் எந்த ஒத்திகையும் பார்க்கவில்லை. ஒரு கலைஞன் அப்படி செய்யவும் கூடாது. காரணம் இயக்குநர்கள் நம்மை அந்த கேரக்டராக மாற்றுவதற்காக தான் இருக்கிறார்கள். எனக்கு கேரக்டர் லுக் டெஸ்ட் கூட எடுக்காமல் நேராக ஷூட்டிங் சென்று விட்டேன். அருண் என்னை பார்த்துவிட்டு நான் நினைத்த மாதிரியே இருக்கிறீர்கள் என சொன்னார்.
எந்த ஒரு நல்லா கதையாக இருந்தாலும் அதில் சரியான நடிகர்கள் கேரக்டருக்கு பொருந்தவில்லை என்றால் அது வீண் தான். அதேபோல் ஷூட்டிங்கில் கொஞ்சம் கூட சௌகரியமான நிலை இல்லை. இருந்தாலும் அருண் மாதேஸ்வரன் செம கூலாக அனைவரையும் கையாண்டார். கேப்டன் மில்லர் ஆர்.ஆர்.ஆர்., பாகுபலி படம் மாதிரி பிரமாண்டமாக இருக்கும். இப்படம் தமிழ்நாட்டுக்கு சரியான சர்க்கரை பொங்கலாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.