Trisha: இதோட நிறுத்திக்கோங்க... சியர்ஸ்.. திருமண வதந்திகளுக்கு லியோ பட பாணியில் ஃபுல்ஸ்டாப் வைத்த த்ரிஷா!
தனக்கு திருமணம் என வதந்தி கிளப்பியோருக்கு பதிலடி தரும் வகையில் நடிகை த்ரிஷா பதிவிட்டுள்ளார்.
கோலிவுட், டோலிவுட் என தென்னிந்திய சினிமாக்களில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேல் கொடிகட்டி பறந்து வருபவர் த்ரிஷா. க்யூட் பப்ளி ஹீரோயினாகவும் அனைவரில் விருப்பமான தமிழ் நடிகையாகவும் வலம் வரும் த்ரிஷா, தன் சமீபத்திய ஹிட் படமான 'பொன்னியின் செல்வன்' தன் அடுத்த ரவுண்டுக்குத் தயாராகியுள்ளார்.
வரிசைகட்டும் பெரிய படங்கள்
தற்போது நடிகர் விஜய்யுடன் ‘லியோ’ படத்தின் மூலம் பல ஆண்டுகளுக்கு மீண்டும் ஜோடி சேர்ந்துள்ள த்ரிஷா, கமல்ஹாசன் - மணிரத்னம் இணையும் அடுத்த படம், அஜித்துடன் விடாமுயற்சி என அடுத்தடுத்து பெரிய படங்களில் நடிக்கவிருப்பதாகத் தகவல்கள் பரவி வருகின்றன. இதனால் த்ரிஷா ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
மற்றொருபுறம் த்ரிஷா விரைவில் மலையாள தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக கடந்த சில தினங்களாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஏற்கெனவே சில ஆண்டுகளுக்கு முன் தயாரிப்பாளர் வருண் மணியனுடன் த்ரிஷாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், எதிர்பாராதவிதமாக இறுதி நேரத்தில் அந்தத் திருமணம் நின்றுபோனது.
மீண்டும் கிளம்பிய வதந்தி
ஆனாலும் இதற்கெல்லாம் தளர்ந்துபோகாத த்ரிஷா, ஹேப்பி சிங்கிளாகவும், முன்னணி நடிகையாகவும் தமிழ் சினிமாவில் வலம் வந்தபடி உள்ளார். இந்நிலையில் தனக்கு மலையாள திரைப்படத் தயாரிப்பாளருடன் திருமணம் என மீண்டும் எழுந்துள்ள வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் த்ரிஷா தற்போது பதிவிட்டுள்ளார்.
எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ள த்ரிஷா, “நீங்கள் யார் உங்கள் டீம் யார் என்று உங்களுக்குத் தெரியும்.. அமைதியாக இருங்கள்.. வதந்தியைப் பரப்புவதை நிறுத்துங்கள்.. சியர்ஸ்!” என நறுக்கென தெரிவித்துள்ளார்.
DEAR “YOU KNOW WHO YOU ARE AND YOUR TEAM”,
— Trish (@trishtrashers) September 21, 2023
“KEEP CALM AND STOP RUMOURING”
CHEERS!
கடந்த சில தினங்களாக லியோ பட போஸ்டர்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் “அமைதியாக இரு சண்டையைத் தவிர், அமைதியாக இரு போருக்குத் தயாராகு” எனும் வாசகங்கள் இடம்பெற்று கவனமீர்த்தன. இச்சூழலில் லியோ பட ப்ரொமோஷன் பாணியில் த்ரிஷா தன் திருமணம் பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது கவனமீர்த்துள்ளது.
லியோ
த்ரிஷா - விஜய் நடிப்பில் வரும் அக்டோபர் 19ஆம் தேதி லியோ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் வரும் செப்டெம்பர் 30ஆம் தேதி லியோ படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா, சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த சில தினங்களாக லியோ பட போஸ்டர்கள், அப்டேட்களாக வரிசையாக வெளியாகி வருகின்றன. போஸ்டர்களே கதை சொல்லும் வகையில் அமைந்துள்ளதால் ரசிகர்கள் பெரிதும் படத்தை எதிர்பார்த்துக் காத்துள்ளனர். விஜய் இடம்பெற்றிருக்கும் போஸ்டர்களே இதுவரை வரிசையாக வெளியாகி வருகின்றன. விரைவில் லியோ படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.