Old pension scheme : ஜனவரி 6-ஆம் தேதிக்குள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துங்க.! வெளியான முக்கிய அறிக்கை
Old pension scheme : அரசு ஊழியர் அமைப்புகள் ஜனவரி 6-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கவுள்ள நிலையில், அதற்கு முன்பாகவே பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தும் அறிவிப்பை வெளியிட வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

அரசு ஊழியர்கள் போராட்டம்
அரசு ஊழியர்களின் முக்கிய கோரிக்கையாக இருப்பது பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்பதாகும். இதனை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அரசுக்கு பரிந்துரைப்பதற்காக அமைக்கப்பட்ட ககன்தீப்சிங் பேடி குழு 11 மாதங்களுக்குப் பிறகு இன்று அதன் அறிக்கையை முதலமைச்சரிடம் தாக்கல் செய்துள்ளது.
இதனையடுத்து தமிழக அரசு ஊழியர்கள் வருகிற ஜனவரி 6ஆம் தேதி காலைவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். எனவே ஜனவரி 6ஆம் தேதிக்கு முன்னதாக பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பான அறிவிப்பை வெளியிட வேண்டும் என அரசு ஊழியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பழைய ஓய்வூதிய திட்டம்- அரசு ஊழியர்கள் கோரிக்கை
இதே கோரிக்கையை வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலனில் திமுக அரசுக்கு அக்கறை இருந்திருந்தால், 55 மாதங்களுக்கு முன் ஆட்சிக்கு வந்த போதே பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்தியிருக்க வேண்டும். அதற்கான அனைத்து பரிந்துரை அறிக்கைகளும் கடந்த ஆட்சிக் காலத்திலேயே குழு அமைத்து பெறப்பட்டிருந்தன. ஆனால், கடந்த தேர்தலின் போது அரசு ஊழியர்களுக்கு அளித்த 10 வாக்குறுதிகளில் ஒரே ஒரு வாக்குறுதியை மட்டுமே நிறைவேற்றியுள்ள திமுக, பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட மீதமுள்ள 9 வாக்குறுதிகளையும் நிறைவேற்றாமல் வழக்கம் போலவே ஏமாற்றுவதற்கு தான் முயற்சி செய்தது.
ஆனால், அரசு ஊழியர்கள் போராட்ட அறிவிப்பை வெளியிட்டதால் அவர்களை திருப்திப்படுத்தும் வகையில் கடந்த பிப்ரவரி மாதம் 4-ஆம் தேதி தான் ககன்தீப்சிங் பேடி குழுவை அரசு அமைத்தது. ஆனால், அதன்பின் 6 மாதங்களுக்கு எந்த பணியையும் செய்யாமல் இந்தக் குழு உறங்கிக் கொண்டிருந்தது. அறிக்கைகள் வாயிலாகவும், மக்கள் உரிமை மீட்புப் பயணத்தின் போது நடத்தப்பட்ட பொதுக்கூட்டங்கள் வாயிலாகவும் நான் கொடுத்த தொடர் அழுத்தத்தின் காரணமாகவே கடந்த ஆகஸ்ட் 18&ஆம் தேதி முதல் கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்தியது. அப்போதும் செப்டம்பர் இறுதியில் இறுதி அறிக்கைக்கு மாற்றாக, எந்த பரிந்துரையும் இல்லாத இடைக்கால அறிக்கையை மட்டுமே ககன்தீப் சிங் பேடி குழு தாக்கல் செய்தது.
அறிக்கையை சமர்பித்த ககன் தீப்சிங்
அதன்பிறகும் ககன் தீப்சிங் குழு எந்த ஆய்வுகளையும் மேற்கொள்ளாத நிலையில், விரைந்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து நான் தான் வலியுறுத்தி வந்தேன். அதன் காரணமாகவும், வரும் ஜனவரி 6-ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்போவதாக அரசு ஊழியர் அமைப்புகள் அறிவித்திருப்பதாலும் தான் இப்போது திடீரென ககன்தீப் குழுவின் அறிக்கையை அரசு அவசரமாக பெற்றிருக்கிறது.
திமுக அரசின் கடந்த கால செயல்பாடுகளை வைத்துப் பார்க்கும் போது, ககன் தீப் குழுவின் அறிக்கையை பெற்றதும் கூட, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற அக்கறையால் அல்ல. மாறாக, வரும் 6-ஆம் தேதி முதல் அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தவிருக்கும் நிலையில், ககன் தீப் சிங் குழுவின் அறிக்கையை பெற்று விட்டோம்; விரைவில் அதன் மீது முடிவெடுப்போம் என்று ஆசை காட்டி, அவர்களின் போராட்டத்தை கைவிடச் செய்யும் ஏமாற்று வேலை தான். இப்படி ஏமாற்றுவது திமுகவுக்கு கைவந்த கலை.
ஜனவரி 6ஆம் தேதிக்குள் பழைய ஓய்வூதிய திட்டம்
திமுக அரசின் இத்தகைய மோசடிகளையெல்லாம் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் மிகவும் நன்றாக அறிவார்கள். அவர்களை இத்தகைய மோசடிகள் மூலம் ஏமாற்ற முடியாது. எனவே, அரசு ஊழியர் அமைப்புகள் ஜனவரி 6-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கவுள்ள நிலையில், அதற்கு முன்பாகவே பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தும் அறிவிப்பை திமுக அரசு வெளியிட வேண்டும்.
மீதமுள்ள கோரிக்கைகளையும் அரசு உடனடியாக நிறைவேற்றும். அவ்வாறு செய்ய மறுத்தால் அரசு ஊழியர்களும், பொதுமக்களும் அளிக்கவிருக்கும் ஜனநாயக முறையிலான தண்டனையிலிருந்து திமுக ஒருபோதும் தப்ப முடியாது என அன்புமணி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.



















