4 ஆண்டுகள் நான் பாலியல் சில்மிஷத்துக்கு ஆளாக்கப்பட்டேன்: நடிகை சுனைனா பட்ட சித்ரவதை
என் சிறுவயதில் 4 ஆண்டுகள் நான் பாலியல் சில்மிஷத்துக்கு ஆளாக்கப்பட்டேன் என நடிகை சுனைனா கூறியுள்ளார்.
என் சிறுவயதில் 4 ஆண்டுகள் நான் பாலியல் சில்மிஷத்துக்கு ஆளாக்கப்பட்டேன் என நடிகை சுனைனா கூறியுள்ளார்.
கோலிவுட்டில் பூகம்பம் போன்ற அதிர்வலைகளை ஏற்படுத்தியது மீ டூ சர்ச்சை. அந்த சர்ச்சையை ஒட்டி சுனைனா அளித்தப் பேட்டி ஒன்று கவனம் பெற்றுள்ளது.
அந்தப் பேட்டியில் அவர், "என் சிறுவயதில் 4 ஆண்டுகள் நான் பாலியல் சில்மிஷத்துக்கு ஆளாக்கப்பட்டேன். இது என் பெற்றோருக்குத் தெரியாது. நான் யாரிடமும் சொல்லவில்லை. ஆனால் இன்று வெளிப்படையாக சொல்கிறேன். அந்த ஆட்டோக்காரரைப் பார்த்தால் நேருக்கு நேர் நியாயம் கேட்பேன். இதெல்லாம் நான் வளர்ந்துவிட்டேன் என்ற மனப்பக்குவத்தால் வரும் துணிச்சல். ஆனால் அப்போது நான் ரொம்ப சின்னப்பொண்ணு. என்னால் எனக்கு நடப்பதை உணர முடிந்தது.
ஆனால் அதை எப்படி எதிர்ப்பது என்று தெரியவில்லை. மேலும், எனக்கு நடக்கும் துன்பதுக்கு நான் தான் காரணமோ என்றெல்லாம் நினைத்திருக்கிறேன். அதற்குக் காரணம் இந்த சமூகம் தான். குழந்தைகளுக்கு இதைப் பற்றியெல்லாம் பெற்றோரோ, ஆசிரியர்களோ சொல்லித் தருவதே இல்லை. இன்னொன்று எல்லோருமே இதுபோன்ற நம் பிள்ளைகளுக்கு நடக்காது என்று நினைத்துவிடுகின்றனர். ஆனால் ஆண் குழந்தைகள், பெண் குழந்தைகள் என எல்லோருக்கும் இது நடக்கிறது. எப்போதும் போல எனக்கும் நடந்த தொந்தரவு தெரிந்த நபராலேயே நடந்தது. என் ஆட்டோக்காரர் என் குடும்பத்திற்கு நன்கு அறிமுகமானவர். அதனால் என்னால் அதை வீட்டில் எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. பெற்றோரும் நம்பிக்கை தர வேண்டும், சமூகமும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக பள்ளி, கல்லூரிகளில் இது பற்றி நிச்சயமாக சொல்லித் தர வேண்டும். இதை நாம் தவிர்க்கக் கூடாது. சொல்லிக் கொடுத்திருந்தால் இன்று நான் சொல்வதை அன்றே சொல்லியிருப்பேன்.
அது மட்டுமல்ல மீ டூ புகார் பற்றி கேட்கிறீர்கள். ஒருவர் சொல்லிவிட்டதால் எல்லோரும் சொல்ல வேண்டும் என்பதில்லை. ஒவ்வொரு தனி நபருக்கும் எதை எப்போது சொல்ல வேண்டும் எனத் தோன்றுகிறதோ அப்போது சொல்லும் உரிமை இருக்கிறது. அவரவருக்கான ஸ்பேஸை நாம் கொடுக்க வேண்டும். சிலருக்கு தங்களுக்கு நேர்ந்த கொடூரத்தைச் சொல்ல தகுந்த நேரம் வர வேண்டும்.
இதுபோன்ற சமூக அவலங்கள் நேராமல் இருக்க வீட்டில் குழந்தைகளுக்கு பாலின சமத்துவம், பாலியல் கல்வி கற்றுக் கொடுக்க வேண்டும். பள்ளிகளில் கட்டாயமாக இதை பாடமுறையாக கொண்டு வர வேண்டும்.
மேலும் பெண்களுக்கு இங்கு பெண்களே எதிரியாக இருக்கின்றனர். நிறைய பெண்களே, அந்தப் பெண்ணின் ஆடையால் பழக்கவழக்கத்தால் அவளுக்கு இப்படி நேர்ந்தது என்றெல்லாம் கூறுவதைக் கேட்டிருக்கிறேன். ஆண், பெண் என்றெல்லாம் இல்லாமல் மனித மனநிலை மாற வேண்டும். அனைவரையும் சமமாக நடத்த வேண்டும்” என சுனைனா கூறியுள்ளார்.