Ritika Singh: தமிழ் படங்களில் நடிப்பதை குறைத்துவிட்டது ஏன்? நடிகை ரித்திகாசிங் சொன்ன பதில் இதுதான்..!
”எனக்கு நிறைய தமிழ் படங்கள் பண்ண வேண்டும் என்று ஆசை இருக்கிறது. ஆனால் படங்களைத் தேர்வு செய்து நடிக்கிறேன். நல்ல கதை அமைந்தால் நிச்சயமாக மீண்டும் நடிப்பேன்” - ரித்திகா சிங்
இன்பாக்ஸ் பிக்சர்ஸ் - ஸ்டுடியோ கிரீன் கே.இ.ஞானவேல்ராஜா வழங்கும் அஞ்சும் குரேஷி தயாரித்து இயக்குநர் ஹர்ஸ் வரதன் இயக்கத்தில் நடிகை ரித்விகா சிங் நடிக்கும் படம் 'இன் கார்'. இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை, சாலிகிராமம் பிரசாத் லேப்பில் நடைபெற்றது.
இன் கார்:
அப்போது இன் கார் படத்தின் இயக்குநர் ஹர்ஸ்வரதன் பேசியதாவது: ”இந்தப் படம் கடத்தல் தொடர்பான த்ரில்லர் கதை. டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட கதை இது. பாலியல் வன்கொடுமைகள் இங்கே பெண்களுக்கு நடந்து கொண்டு தான் இருக்கிறது.
இந்தக் கதையின் முக்கியத்துவம், அது எதை நோக்கி செல்கிறது, ஒரு ஆணின் உணர்வுகள் எப்படி இருக்கிறது என்பதை இந்தப் படத்தின் ட்ரெய்லர் மூலம் பார்த்திருப்பீர்கள். இது நமது நாடு. நல்லது, கெட்டது என்று எதுவாக இருந்தாலும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார். “நமது உடம்பை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. அது இயற்கை தான்” எனவும் கூறினார்.
பாலியல் வன்கொடுமைகள்:
”இந்தியாவில் நிறைய இடங்களில் பாலியல் வன்கொடுமைகள் நடந்துகொண்டு தான் இருக்கிறது. இதற்கு அதிகபட்சமாக என்ன தண்டனை கொடுப்பீர்கள்?” என்ற கேள்விக்கு ”இதை நினைக்கும்போது கோபமாக வருகிறது. சிறிய குழந்தைகளை கூட விடுவதில்லை. இந்தப் படத்துக்காக சென்சார் வாங்கியாச்சு" என்றார்.
”தமிழ்நாட்டில் இது மாதிரியான படங்களில் என்னைக்கொன்று போட்டாலும் விட்டு விடு என்று சொல்வார்கள். ஆனால் இந்த ஹீரோயின் வேறு மாதிரி சொல்கிறாரே” என்ற கேள்விக்கு, ”இது டிரெய்லர் தான். படத்தின் முழு கதையையும் பார்த்தால் தான் தெரியும். எல்லாமே கதைக்குள் தான் இருக்கிறது. இது டில்லி மட்டும் அல்லாமல் மும்பை உள்ளிட்ட பல இடங்களிலும் நடக்கும் கொடுமைகள் குறித்து படத்தில் பேசியுள்ளது” என்றார்.
தமிழ் படங்கள் குறைந்தது ஏன்?
இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகை ரித்விகா சிங், ”இந்த படம் கடத்தல் தொடர்பானது. படப்பிடிப்பு நடந்த காலம் ரொம்ப சவாலானதாக இருந்தது. இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. நிறைய உண்மையான விஷயங்களை இந்தப் படத்தில் காட்டியுள்ளனர்” என்றார்.
”இறுதிச்சுற்று, ஆண்டவன் கட்டளை உள்ளிட்ட படங்களுக்குப் பிறகு தமிழ் படங்களில் நடிப்பது குறைந்து விட்டதே?” என்ற கேள்விக்கு ”எனக்கு நிறைய தமிழ் படங்கள் பண்ண வேண்டும் என்று ஆசை இருக்கிறது. ஆனால் படங்களைத் தேர்வு செய்து நடிக்கிறேன். நல்ல கதை அமைந்தால் நிச்சயமாக மீண்டும் நடிப்பேன்.
எனக்கு காமெடி படம் ரொம்ப பிடிக்கும். நன்றாக இருக்கும். அதே மாதிரி சண்டை, ஆக்ஷன் கதாபாத்திரமும் வந்தாலும் நன்றாக தான் இருக்கும்” என்றார்.
படம்பிடித்தால் ஓகே:
”நீங்கள் நேஷனல் அவார்டு வின்னர். இந்தப் படத்துக்காக உங்களுக்கு அவார்டு கிடைக்குமா” என்ற கேள்விக்கு, ”அவார்டு கிடைக்குமா என்று தெரியாது. அதைப்பற்றி நான் எதுவும் யோசிக்கவில்லை. படம் எல்லோருக்கும் பிடித்தால் ஓகே தான்” என்றார்.