“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
சென்னையில் பிராமண சமூகத்தினர் சார்பில் கடந்த 3ஆம் தேதி கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் நடிகை கஸ்தூரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்
தெலுங்கு பேசும் பெண்களை ஆபாசமாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரிக்கு எழும்பூர் நீதிமன்றம் நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்கியது. இந்நிலையில் புழல் சிறையில் இருந்து கஸ்தூரி வெளியே வந்துள்ளார்.
சென்னையில் பிராமண சமூகத்தினர் சார்பில் கடந்த 3ஆம் தேதி கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் நடிகை கஸ்தூரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது தெலுங்கு பேசும் பெண்கள் குறித்து நடிகை கஸ்தூரி ஆபாசமாக பேசியதாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இதையடுத்து காவல்நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகக்கோரி கஸ்தூரிக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் கஸ்தூரி தலைமறைவானதாக தகவல் வெளியானது. இதையடுத்து கஸ்தூரியை பிடிக்க இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டது.
அதன்படி தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் சினிமா தயாரிப்பாளர் ஒருவர் வீட்டில் இருந்ததாக தகவல் வெளியானது. தகவலின் பேரில் போலீசார் அங்கு விரைந்து கஸ்தூரியை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
இதனிடையே கஸ்தூரி முன் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், கைதுக்கு பிறகு ஜாமின் கோரி நடிகை கஸ்தூரி மனுத்தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து அவர் புழல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
தொடர்ந்து சிறைக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த நடிகை கஸ்தூரி, “அரசியல் வித்தியாசம் இன்றி எனக்கு ஆதரவு தெரிவித்த தலைவர்கள் நண்பர்களுக்கு நன்றி. எனக்காக வாதாடியை வழக்கறிஞர்களுக்கு நன்றி. சிறு குரலாக இருந்த என்னை சீறும் புயலாக மாற்றிய அனைவருக்கும் மிகப்பெரிய நன்றி. என்னை உயிருக்கு உயிராக நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி. ஆந்திரா, தெலங்கானா மக்களுக்கு மிகப்பெரிய நன்றி. புழல் சிறையில் என்னை நன்றாக நடத்திய அனைவருக்கும் நன்றி. ” எனத் தெரிவித்தார்.