HBD Y.G.Mahendran | ‛தலைவரே... தலைவரே...’ 80-களில் முதல், இன்றும் பேசப்படும் ஒய்.ஜி.மகேந்திரன்!
இதுவரையில் 100-க்கும் அதிகமான நாடகங்களை அரங்கேற்றி 8,000-க்கும் அதிகமான மேடைகளைக் கண்டிருக்கிறார் ஒய்.ஜி.மகேந்திரன்.
நாடக நடிகர் , திரைப்பட நடிகர் , எழுத்தாளர் , அரசியல்வாதி என பன்முக திறமை கொண்ட ஒய்.ஜி.மகேந்திரன் பிறந்தநாள் இன்று. அவர் கடந்து வந்த பாதை குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
பிறப்பு :
தமிழகத்தில் முதன் முதலில் நாடக கலைகளை அமைத்து , கலைகளை வளர்த்த முன்னோடிகளுள் ஒருவர்தான் ஒய். ஜி. பார்த்தசாரதி. இவரது மகன்தான் மகேந்திரன். கடந்த 1950 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் தேதி , பார்த்த சாரதி - ராஜலட்சுமி தம்பதிகளுக்கு மகனாக பிறந்த ஒய்.ஜி.எம். மகேந்திரனின் தாயார் ராஜலட்சுமி பத்ம சேஷாத்ரி குழும பள்ளிகளின் நிறுவனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கல்வி :
புகழ்பெற்ற டான் பாஸ்கோ பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்த ஒய்.ஜி.மகேந்திரன் வேதியல் துறையில் பட்டம் பெற்றவர். அதன் பிறகு எம்பிஏ மேற்படிப்பிலும் பட்டம் பெற்றார். பள்ளி , கல்லூரி நாட்களிலேயே மேடை நாடகங்களில் அசத்தியவர் ஒய்.ஜி.மகேந்திரன். குறிப்பாக நகைச்சுவை கதாபாத்திரத்தின் மீது அவருக்கு அதீத ஈடுபாடாம் .
குடும்பம் :
ஒய்.ஜி.மகேந்திரன் சுதா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.இவருக்கு மதுவந்தி மற்றும் ஹர்ஷவர்தனா என்னும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். மதுவந்தி பா.ஜ.க கட்சி பிரமுகராக உள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதாவும் , ஒய்.ஜி.மகேந்திரனின் மனைவி சுதாவும் சகோதரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
நாடக குழு:
ஒய்.ஜி.மகேந்திரன் பிறந்த இரண்டே ஆண்டுகளில் அவரது தந்தை பார்த்தசாரதி ‘யுனைடெட் அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட்ஸ்’ என்னும் நாடக குழுவை நிறுவினார். இதன் மூலம் சினிமாவிற்கு பல சிறந்த நடிகர்களை உருவாக்கி கொடுத்தனர் . சிறு வயதிலேயே நாடக குழுவோடு ஒன்றி வளர்ந்ததாலோ என்னவோ , ஒய்.ஜி.மகேந்திரனுக்கு நடிப்பின் மீதும் கலைத்துறை மீதும் மிகுந்த ஈடுபாடு வர தொடங்கிவிட்டது. இளம் வயதிலேயே தந்தையின் நாடக குழுவில் முக்கிய பங்காற்றினாராம் ஒய்.ஜி.மேகேந்திரன். இதுவரையில் 100-க்கும் அதிகமான நாடகங்களை அரங்கேற்றி 8,000-க்கும் அதிகமான மேடைகளைக் கண்டிருக்கிறார் ஒய்.ஜி.மகேந்திரன். அவரின் தனித்துவமான நடிப்பு திறமை அவருக்கான சினிமா அங்கீரத்தையும் பெற்றுத்தந்தது.
சினிமா எண்ட்ரி:
கடந்த 1971 ஆம் ஆண்டு பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான நவக்கிரகம் என்னும் திரைப்படம் மூலமாக சினிமா துறையில் காலடி எடுத்து வைத்தார் ஒய்.ஜி.மகேந்திரன். முதல் படத்திலேயே வித்தியாசமான வசன உச்சரிப்பால் அதிக கவனம் பெற்றார். மகேந்திரன் மூக்கால் பேசும் வித்தியாசமான வசன உச்சரிப்பு , பலருக்கும் பிடித்துப்போனது. சிறு வயதில் இருந்தே நடித்து பழகியவருக்கு நடிப்பு என்பது பழக்கப்பட்ட ஒன்றுதான் என்றாலும் , அவர் தனக்கென தனி பாணியை உருவாக்கினார். அதன் பிறகு கதாநாயகனாக ஒரு சில படங்களில் நடித்தவர், சிறந்த துணை காதாபாத்திரம், குணச்சித்திர கதாபாத்திரம் , காமெடி என பன்முக வேடங்களில் நடித்து அசத்தினார். குறிப்பாக ரஜினிகாந்த், கமல்ஹாசன் , சிவாஜி கணேசன், ஜெய் சங்கர் என பல ஜாம்பவான்களோடு நடித்து அசத்தியிருந்தார். இதுவரையில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் ஒய்.ஜி.மகேந்திரன். இறுதியாக சிம்புவின் மாநாடு திரைப்படத்தில் அரசியல்வாதியாக நடித்திருந்தார்.இது தவிர 10 க்கும் மேற்பட்ட சீரியல்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் ஒய்.ஜி.மகேந்திரன்.
டப்பிங் :
கமல்ஹாசன் நடிப்பில் தெலுங்கில் வெளியான இரு நிலவுகள் படம் தமிழில் டப் செய்யப்பட்டது. அந்த படத்தில் கமல்ஹாசனுக்கு முதன் முதலில் குரல் கொடுத்திருந்தார் ஒய்.ஜி.மகேந்திரன். அதன் பிறகு தெலுங்கில் புகழ்பெற்ற காமெடி நடிகர் பாபு மோகனின் தமிழ் டப்பிங்கை ஒய்.ஜி.மகேந்திரன் கொடுத்துவந்தார். இது தவிர கூடுதல் சுவாரஸ்யம் என்னவெற்றால் புகபெற்ற அனிமேஷன் திரைப்படமான தி லைன் லிங் படத்தில் டிமோன் கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்தார். இந்த படம் 1994 ஆம் ஆண்டு வெளியானது குறிப்பிடத்தக்கது.
அங்கீகாரம் :
நாடகம் , சினிமா என அசத்தியிருந்தாலும் ஒய்.ஜி.மகேந்திரன் தனக்கான அங்கீகாரம் முறையாக கிடைக்கவில்லை என பல நேர்காணல்களில் குறிப்பிட்டுள்ளார். தனக்கு அந்த எண்ணம் வரும் பொழுதெல்லாம் கண்ணதாசன் வரிகளை நினைத்துக்கொள்வாராம் “உனக்கும் கீழே உள்ளவர் கோடி..நினைத்து பார்த்து நிம்மதி நாடு “ என்பதுதான் அது. சிவாஜி மீது மிகுந்த பற்றுக்கொண்ட மகேந்திரன் அவருடன் நெருக்கமான நாட்கள், அவரின் குடும்ப பிண்ணனி குறித்த புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். சிஜாவி சாருக்கே உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை..நானெல்லாம் எம்மாத்திரம் என பிரபல பத்திரிக்கை ஒன்றின் பேட்டியில் தெரிவித்துள்ளார் ஒய்.ஜி.மகேந்திரன்.
அரசியலும் சர்ச்சையும் :
பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவாளராக கருதப்படுபவர் ஒய்.ஜி.மகேந்திரன் . அவ்வபோது சர்ச்சையாக பேசி கவனம் பெற்று வருகிறார். குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராக மாணவர்கள் போராடிய பொழுது அவர்கள் பெண்களை சைட் அடிக்கவும் , ஒரு நாள் விடுமுறை கிடைக்கும் என்றுதான் போராடுகிறார்கள் என பேசிய கருத்து பலரின் கண்டனத்திற்கு உள்ளானது. அதேபோல கடந்த 2019 ஆம் ஆண்டும் பாஜக மேடைக்கூட்டத்தில் கலந்துக்கொண்ட ஒய்.ஜி.மகேந்திரன் , செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் "தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் திராவிட இயக்கங்களுக்கு சாதகமான சூழல் இருந்ததுபோல், தற்போது பாஜகவுக்கு சாதகமான சூழல் அமையும் என எதிர்பார்க்கிறேன்.” என தெரிவித்திருந்தார். அது மிகப்பெரிய விவாதத்தையே கிளப்பியது. அதன் பிறகு சென்னை கே.கே. நகரில் இருக்கும் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு சொந்தமான பி.எஸ்.பி.பி பள்ளியின் ஆசிரியர் ஒருவர் பாலியல் விவகாரத்தில் சிக்கினார். அப்போது இந்த சம்பவம் குறித்து விளக்கம் கேட்ட பொழுது, எனக்கும் எனது மகளுக்கும் இதில் சம்பந்தமில்லை. நாங்கள் பள்ளியின் ட்ரெஸ்டிதான் என கூறினார். இது பொறுப்பற்ற பதில் என பலரும் சமூக வலைத்தளங்களில் ஒய்.ஜி.மகேந்திரனின் பதிலை விமர்சித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.