(Source: ECI/ABP News/ABP Majha)
11 years of Kumki: ஹீரோவாக அறிமுகமான விக்ரம் பிரபு.. யானையை கொண்டாடிய மக்கள்.. கும்கி ரிலீசான நாள் இன்று..!
Kumki : மலைப்பிரதேசத்தின் அழகையும், மலைவாழ் மக்களின் வாழ்வியலையும் அழகாய் படம் பிடித்த 'கும்கி' திரைப்படம் வெளியான நாள் இன்று.
யானைகளை முக்கியமான பாத்திரமாக வைத்து அதற்குள் ஒரு அழகான ஒரிஜினல் காதல் கதையை பொருத்தி பின்னணியில் கண்களுக்கு குளுமையாக பசுமையான பச்சைப்பசேல் மலைப்பிரதேசத்தையும் அருவி சாரலையும் தெறிக்க விட்டு காட்சிகள் மூலம் பார்வையாளர்களை மூழ்கடிக்க செய்த அருமையான படம் தான் 'கும்கி'. இப்படம் வெளியாகி இன்றுடன் 11 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
கதை சுருக்கம் :
திருப்பதி பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், பிரபு சாலமன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், தம்பி ராமையா நடிப்பில் வெளியான இப்படத்தில் முக்கிய பங்காற்றியது கொம்பன் யானையும், கும்கி யானையும் தான். ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியை வாழும் மலைவாழ் கிராம மக்கள் தங்களின் விவசாய நிலத்தில் அறுவடை செய்யும் சமயமாக பார்த்து கொம்பன் யானை வந்து பயிர்களை எல்லாம் நாசமாக்கி அட்டகாசம் செய்யும் காட்டு யானை.
டூப்ளிகேட் கும்கியின் வருகை :
பொறுமை இழந்த கிராம மக்கள் காட்டுயானையை விரட்ட ஒரு கும்கி யானையை ஏற்பாடு செய்ய அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக கோயில் யானையை டூப்ளிகேட் கும்கி யானையாக கிராமத்துக்கு அழைத்து வருகிறார்கள். அதன் பாதுகாவலனாக விக்ரம் பிரபு எண்ட்ரியாக அங்கே ஊர் பெரியவரின் மகள் லட்சுமி மேனன் மீது காதல் கொள்கிறார். டூப்ளிகேட் கும்கி யானையை ஊர்மக்கள் அனைவரும் தெய்வமாய் வணங்குகிறார்கள்.
வந்திருப்பது கும்கி யானை அல்ல கோயில் யானை என தெரியவந்தால் என்ன நடக்கும் என பதட்டம் ஒரு பக்கம் இருக்க காதல் ஜோடிகளின் காதல் விவகாரம் ஊர்மக்களுக்கு தெரிந்தால் அனைவரும் சேர்ந்து கொன்றே விடுவார்கள் என்ற பயம் மறுபக்கம். இந்த பிரச்சினைகளை எல்லாம் ஹீரோ எப்படி சமாளிக்கிறார்? கோயில் யானை கொம்பனை விரட்டியதா? காதலர்களின் காதல் கைகூடியதா? என்பது தான் படத்தின் கிளைமாக்ஸ்.
ரம்மியமான பின்னணி :
திரைக்கதை பெரிய அளவில் ஈர்க்கவில்லை என்றாலும் அந்த கதையை சுற்றி இருந்த ரம்மியமான சூழல் பார்வையாளர்களை கவர்ந்தது. விக்ரம் பிரபுவுக்கு முதல் படம் என்பதால் சில இடங்களில் சற்று தடுமாறினாலும் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். லட்சுமி மேனன் மலைவாழ் கிராம மக்களின் வாழ்வியலோடு கலந்துவிட்டார்.
இமானின் இசை :
சீரியஸாக நகர்ந்த கதைக்களத்தில் தம்பி ராமையாவின் காமெடி கொஞ்சம் பார்வையாளர்களை இலகுவாக்கியது. இமானின் பின்னணி இசையும், பாடல்களும் படத்தை தூக்கி நிறுத்தியது. ஒளிப்பதிவாளர் சுகுமாருக்கு தான் மொத்த பாராட்டுகளும் போய் சேரும். அந்த அளவிற்கு அழகாக காட்சிப்படுத்தி இருந்தார். கிளைமாக்ஸ் காட்சிக்காக மிகவும் ஆவலுடன் காத்திருந்த மக்களுக்கு ஏமாற்றமும் சோகமும் தான் மிஞ்சியது.