Manjummel Boys: கண்டுகொள்ளாத தமிழ் சினிமா.. கைகொடுத்த மலையாளம்.. மஞ்சுமெல் பாய்ஸால் சாதித்த விஜயமுத்து!
Manjummel Boys : எங்களுக்குள்ளும் நடிப்பு திறமை இருக்கிறது. ஆனால் ஏன் தமிழ் சினிமாவில் வாய்ப்பு கொடுக்க மாட்டேங்குகிறார்கள் என தெரியவில்லை.
Manjummel Boys : சினிமாவில் இந்த இடத்தை அடைய 32 வருடமாகி விட்டது என மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் நடித்த விஜயமுத்து தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்களில் துணை வேடங்களில் நடித்தவர் விஜய முத்து. இவர் தற்போது மலையாளத்தில் வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். இந்த படத்தை மலையாள சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாது தமிழ் சினிமா ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் நடித்த அத்தனை பேருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய விஜயமுத்து, “மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை பார்க்கும்போது எனக்கு அழுகையே வந்து விட்டது. எல்லாரும் படிச்சிட்டு சினிமா கனவுல வர்றாங்க.நான் 12 வயசுல கண்ட கனவு இது. ரொம்ப போராட்டம், நிறைய இழந்திருக்கிறேன். தமிழில் நான் பார்க்காத இயக்குநர்கள் இல்லை, வேலை செய்யாத இயக்குநர்கள் இல்லை. எல்லார்கிட்டேயும் கெஞ்சி கூட என்னை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்லும் நல்ல கேரக்டர் தர யாரும் வாய்ப்பு கொடுக்கவில்லை. ஆனால் எங்கிருந்தோ வந்த மலையாள இயக்குநர் வாய்ப்பு கொடுத்து என்னை காப்பாற்றியதற்கு அத்தனை கேரள மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த படம் பார்த்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். எனக்கு சம்பாதியத்தை விட மரணிக்கும் தருவாயில் கூட நல்ல நடிகனாக இருக்க வேண்டும் என்பது தான் ஆசை. சினிமா தான் என் குழந்தைகளுக்கு கல்வியை கொடுத்தது. ஆனால் என்ன கனவோட வந்தேனோ அதை இன்னும் அடையவில்லை. இந்த இடத்தை அடைய 32 வருடமாகி விட்டது. சொல்ல முடியாத அளவுக்கு வலி, இழப்பு உள்ளது. அதைப்பற்றி பேசினாலே உணர்ச்சி வசப்பட்டு விடுவேன்.
இந்த படத்தில் எனக்கு அறம் படத்தின் நடிகரால் தான் கிடைத்தது. இந்த படத்தில் என்னுடன் நடித்தவர்கள் எல்லாம் வறுமையின் உச்சத்தில் வாய்ப்பு கொடுக்காமல், ஜி.பி.முத்து உள்ளிட்டவர்களுக்கு எல்லாம் வாய்ப்பு கொடுக்கிறார்கள். என்னை பார்த்தால் ரவுடியாக தெரிகிறதா? எங்களுக்குள்ளும் நடிப்பு திறமை இருக்கிறது. ஆனால் என் தமிழ் சினிமாவில் வாய்ப்பு கொடுக்க மாட்டேங்குகிறார்கள் என தெரியவில்லை.
மஞ்சுமெல் பாய்ஸ் படத்திலும் ஆரம்பத்தில் நெகட்டிவ் கேரக்டராக காட்டினாலும் அது கடைசி காட்சியில் மாற்றம் கண்டதாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். இயக்குநர் மணிரத்னம் என்னை சிறந்த நடிகர் என பாராட்டுவார். அதேபோல் விக்ரம் என்னை பாராட்டுவார். கார்த்திக் சுப்பராஜ் மகான் படத்தில் என்னை நன்றாக பயன்படுத்தினார். நான் நிறைய பேசுவேன். அதுவே எனக்கு எதிராக அமைந்து விட்டதோ என தோன்றும்” என விஜயமுத்து தெரிவித்துள்ளார்.