GOAT: பாக்காதவங்க பாத்துடுங்க! நெட்ஃப்ளிக்சில் ரிலீசானது விஜய்யின் தி கோட் - ரசிகர்கள் ஹேப்பி
Goat On Netflix: நடிகர் விஜய் நடிப்பில் கடந்த மாதம் வெளியான தி கோட் படம் நெட்ஃப்ளிக்ஸில் நேற்று நள்ளிரவு ரிலீசானது.
தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக உலா வருபவர் நடிகர் விஜய். தமிழக வெற்றிக் கழகம் கட்சியைத் தொடங்கிய அவர் திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து விலகுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களில் மட்டும் நடிக்க உள்ளதாகவும் தனது அறிவிப்பில் ஏற்கனவே கூறியிருந்தார்.
நெட்ஃப்ளிக்ஸில் தி கோட் ரிலீஸ்:
இதையடுத்து, அவரது நடிப்பில் உருவாகிய அவரது கடைசி படத்திற்கு முந்தைய படமான கோட் கடந்த மாதம் வெளியானது. ரசிகர்களின் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் விஜய்யின் மாறுபட்ட நடிப்பால் கோட் படம் வசூலை வாரிக்குவித்தது. மொத்தம் ரூபாய் 400 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்த கோட் படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்ஃப்ளிக்ஸ் தளம் கைப்பற்றி இருந்தது.
கோட் படம் ஓடிடி தளத்தில் அக்டோபர் 3ம் தேதி ரிலீசாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், நேற்று நள்ளிரவு நெட்ப்ளிக்ஸில் கோட் படம் வெளியானது. 3 மணி நேர திரைப்படமான கோட் நேற்று நள்ளிரவு நெட்ஃப்ளிக்சில் வெளியானதைத் தொடர்ந்து திரையரங்கில் பார்க்காத ரசிகர்கள் நெட்ஃப்ளிக்சில் கண்டு ரசித்து வருகின்றனர்.
ரசிகர்கள் மகிழ்ச்சி:
வெங்கட்பிரபு இயக்கியுள்ள தி கோட் படத்தில் நடிகர் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், 80 மற்றும் 90 களில் தமிழ் சினிமாவில் கலக்கலான ஹீரோவாக உலா வந்த மோகன் வில்லனாக நடித்து தமிழ் சினிமாவில் கம்பேக் தந்துள்ளார். நாயகிகளாக சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி ஆகியோர் நடித்துள்ளனர்.
மேலும், ஹீரோ மற்றும் வில்லன் என இரு தோற்றத்தில் விஜய் நடித்துள்ள இந்த படத்தில் மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்தின் காட்சி ஏஐ தொழில்நுட்பத்துடன் பயன்படுத்தப்பட்டு இருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஜினிகாந்தின் படையப்பா பின்னணி இசை, தோனியின் காட்சி, அஜித்தின் மங்காத்தா பிஜிஎம், தல என்ற வாசகம் போன்ற பலவற்றுடன் வழக்கமான தந்தை, மகன் மசாலா படமாக விஜய் ரசிகர்கள் கொண்டாடும் விதமாக இந்த படம் அமைந்தது.
விரைவில் வெளியாகும் நீக்கப்பட்ட காட்சிகள்:
மேலும், கோட் படத்தில் இடம்பெற்ற நீக்கப்பட்ட காட்சிகளை விரைவில் வெளியிட தயாரிப்பாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இயக்குனர் வெங்கட்பிரபு தெரிவித்திருப்பது விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் லியோ படத்திற்கு நெட்ஃப்ளிக்சில் வரவேற்பு கிடைத்தது போல கோட் படத்திற்கும் வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் நெட்ஃப்ளிக்சில் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியிலும் வெளியாகி இருக்கிறது.