12 Years of 7am Arivu: போதிதர்மனாக களம் கண்ட சூர்யா.. டாங் லீயாக மிரட்டிய வில்லன்.. ஏழாம் அறிவு படம் வெளியாகி 12 வருஷமாச்சு..!
நடிகர் சூர்யா - இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவான ஏழாம் அறிவு படம் வெளியாகி இன்றோடு 12 ஆண்டுகள் நிறைவடைகிறது.
நடிகர் சூர்யா - இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவான ஏழாம் அறிவு படம் வெளியாகி இன்றோடு 12 ஆண்டுகள் நிறைவடைகிறது.
2வது முறையாக இணைந்த கூட்டணி
தீனா படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவுக்குள் எண்ட்ரீ கொடுத்த ஏ.ஆர். முருகதாஸ், ரமணா படத்தின் மூலம் கவனிக்கத்தக்க இயக்குநர்களில் ஒருவராக மாறினார். அவரின் 3வது படமாக 2005 ஆம் ஆண்டு சூர்யா நடித்த கஜினி வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதன்பிறகு தெலுங்கு, இந்தி திரையுலகம் பக்கம் சென்ற ஏ.ஆர்.முருகதாஸ் மீண்டும் 2011 ஆம் ஆண்டு தமிழில் படம் இயக்கினார். அதுதான் “ஏழாம் அறிவு”.
இந்த படத்தில் மீண்டும் சூர்யாவுடன் அவர் இணைந்தார். மேலும் ஹீரோயினாக ஸ்ருதிஹாசன் அறிமுகமானார். அதேசமயம் ட்ரீ நுயான், அபிநயா, அஸ்வின், கின்னஸ் பக்ரு, இளவரசு, சுஜாதா சிவகுமார் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் ஏழாம் அறிவு படத்துக்கு இசையமைக்க உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது.
படத்தின் கதை
பல்லவ வம்சத்தின் சிறந்த மன்னர்களில் ஒருவரான போதி தர்மன், தற்காப்பு கலை மற்றும் மருத்துவ சிகிச்சை முறைகளில் சிறந்தவர். அவர் தனது குருவால் சீனாவுக்கு அனுப்பப்படும் நிலையில், அங்கு ஒரு தொற்றுநோய் பரவுகிறது. ஆரம்பத்தில் போதிதர்மரை குறைவாக மதிப்பிடும் சீன மக்கள், அந்த நோயை குணப்படுத்தும் சக்தி இருப்பது தெரிந்ததும் கொண்டாடுகின்றனர். ஹிப்னாடிசம் திறன்கள், தற்காப்பு கலைகளை கற்றுக் கொடுக்கிறார். பின்னர் இந்தியாவுக்குத் திரும்ப நினைக்கும் போதிதர்மரை கிராம மக்கள் விஷம் கொடுத்து அங்கேயே கொன்று புதைக்கின்றனர். உண்மை தெரிந்தும் அவர் மரணிக்கிறார்.
இப்போது நவீன இந்தியாவில் கதை தொடங்குகிறது. ட்ரீ நுயான் என்னும் சீனாவை சேர்ந்த ஒருவன் இந்தியாவில் ஆபரேஷன் ரெட் எனப்படும் பயோ வாரை தொடுக்கிறான். இதனால் மக்கள் நிலைகுலைகிறார்கள். இதனை போதிதர்மாவின் டிஎன்ஏ மாதிரியை மற்றொரு டிஎன்ஏ மாதிரியுடன் பொருத்தினால் தடுக்க முடியும் என மரபியல் ஆராய்ச்சி மாணவியாக வரும் ஸ்ருதிஹாசன் கண்டுபிடிக்கிறார். அது சர்க்கஸ் கலைஞராக உள்ள சூர்யாவின் டிஎன்ஏவுடன் ஒத்துப் போகிறது.
முதலில் மறுக்கும் சூர்யா, பின் ஆராய்ச்சிக்காக தன்னை அர்ப்பணிக்க தயாராகிறார். இதனை தடுக்க ட்ரீ நுயான் முயல, இறுதியில் போதி தர்மர் மீண்டும் வந்தாரா என்பதே இப்படத்தின் கதையாகும்.
கூடுதல் தகவல்கள்
இந்தப் படம் சாந்தினி சௌக் டு சீனாவின் பாலிவுட் படத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது. மேலும் முதலில் ஸ்ருதிஹாசன் நடித்த விஞ்ஞானி கேரக்டரை சூர்யாவே பண்ணுவதாக இருந்தது. அதேபோல் வில்லனாக டாங் லீ என்னும் கேரக்டரில் ஜானி ட்ரீ நுயான் அசத்தியிருந்தார். திரையில் அவருக்கு போடப்பட்ட பின்னணி இசை ரசிகர்களை மிரள வைத்தது என்றே சொல்லலாம். ஏழாம் அறிவு படத்தில் இடம் பெற்ற ஓ ரிங்கா ரிங்கா பாடலில் 1000 கலைஞர்கள் பயன்படுத்தப்பட்டது பேசுபொருளாக மாறியது. இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல் முருகதாஸ் படத்துக்கு வரும் விமர்சனங்களும்,சர்ச்சைகளும் எழுந்தது குறிப்பிடத்தக்கது.