Actor Surya: "ஐந்து ஆண்கள் செய்யும் வேலையை ஒரு பெண்ணால் செய்ய முடியும்" - நடிகர் சூர்யா ஓபன் டாக்!
ஒரு ஆண் உழைப்பதை விட 50 சதவீதம் அதிகம் உழைத்தால் தான், பெண்களுக்கு அடையாளமும், அங்கீகாரமும் கிடைக்கும் என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
Actor Surya: ஒரு ஆண் உழைப்பதை விட 50 சதவீதம் அதிகம் உழைத்தால் தான், பெண்களுக்கு அடையாளமும், அங்கீகாரமும் கிடைக்கும் என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
”பெண்களால் முடியாதது எதுவுமே இல்லை"
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் சூர்யா. இவர், அகரம் என்ற அறக்கட்டளை மூலம் பல்வேறு ஏழை மாணவ, மாணவிகளின் கல்விக்காக உதவி செய்து வருகிறார். பல ஆண்டுகளாக இவரது அகரம் அறக்கட்டளையின் உதவியுடன் ஏராளமான மாணவர்கள் தங்களது கல்வி கனவை நனவாக்கி வருகின்றனர்.
இந்தநிலையில், அகரம் அறக்கட்டளை சார்பில் பெண்களுக்கான சர்வதேச மாநாடு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா கலந்து கொண்டு பேசியுள்ளார். அவர் பேசியதாவது, "அகரம் தொடங்கி 15 ஆண்டுகளில் கிட்டதட்ட 6 ஆயிரம் மாணவ, மாணவிகள் படித்து முடித்திருக்கிறார்கள். படித்தும் வருகிறார்கள்.
அதில், 70 சதவீதம் பேர், பெண்களாகிய என் தங்கைகள் உள்ளனர். அகரம் சார்பில் ஆண்டுதோறும் 70 சதவீத பெண்கள் இருக்க வேண்டும் என்பதை ஒரு விதிகளாக பின்பற்றி வருகிறோம். இவர்கள் படித்து முடித்தபிறகு, அடுத்த கட்டமாக என்ன செய்வது என்று யோசித்தபோது, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகியவற்றை உள்ளட்டக்கிய படிப்புகளில் பெண்களுடைய பங்களிப்பு 30 சதவீதம் தான் இருக்கிறது என தெரியவந்துள்ளது.
"ஆண்களை விட 50% சதவீதம் பெண்கள் உழைக்க வேண்டும்”
நீல் ஆம்ஸ்ட்ராங் முதலில் நிலவில் கால் வைத்திருந்தாலும், அவரை அங்கு கொண்டு சேர்த்தது ஒரு பெண்தான். சிசிடிவி, டயாப்பர், வீடியோ கால், கீமோதெபி, கம்ப்யூட்டர் சாப்ட்வேர், கால் செண்டர் எனப் பலவற்றை கண்டுபிடித்தது பெண்தான். இந்தியாவின் அக்னி ஏவுகணையில் டெஸ்லி தாமஸ் என்ற பெண் மிகப்பெரிய பங்களிப்பை கொடுத்தார்.
இஸ்ரோவில் மங்கல்யான் உள்பட 14 மிஷின்களை வெற்றிகரமாக எடுத்ததில் விஞ்ஞானி நந்தினி ஹரிநாத் போன்றவர்களின் பங்களிப்பு முக்கியமானது. பெண்களின் பங்களிப்பு இந்த சமூதாயத்தில் ஏகப்பட்டது இருக்கிறது. வழக்கம்போல் அனைத்து இடங்களில் கவனிக்கப்படுகிற, பாராட்டப்படுகிற நபர்களாக ஆண்கள் மட்டும் தான் உள்ளனர். என்னை சுற்றி உள்ள பெண்கள் அனைவரும் சக்தி வாய்ந்தவர்களாக தான் இருக்கின்றனர்.
என் வீட்டில் இருந்து வேலை செய்யும் இடம் வரை அனைத்து இடத்திலும் பெண்கள் உள்ளனர். அனைத்து தடைகளையும் பெண்கள் தகர்த்துவிட்டு முன்னேற வேண்டும். ஆழ் மனதில் நாம் என்ன ஆக வேண்டும் என ஏங்கி தவிக்கிறோமோ அதுவாக கண்டிப்பாக ஆக முடியும்.
ஒரு ஆண் உழைப்பதை விட 50 சதவீதம் அதிகம் உழைத்தால் தான், பெண்களுக்கு அடையாளமும், அங்கீகாரமும் கிடைக்கும். ஆனால், ஐந்து ஆண்கள் செய்யும் வேலையை ஒரு பெண்ணால் செய்ய முடியும். அந்தளவுக்கு அவர்களிடம் சக்தி உள்ளது. அவர்கள் மேலே உயர்வதற்கு அனைவரும் சேர்ந்து உழைப்போம்