நான் படிக்காதவன் தான்.. கோயிலுக்கு எதிரானவன் இல்லை... சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சூரி
நடிகர் சூரி, சூர்யாவின் அகரம் அறக்கட்டளையை குறிப்பிட்டு ஆயிரம் கோயில்கள்.அன்னச்சத்திரங்கள் கட்டுவதை விட ஒருவனுக்கு கல்வி கொடுப்பது பல ஜென்மம் பேசும் என தெரிவித்திருந்தார்.
விருமன் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் சூரி தெரிவித்த கருத்து சர்ச்சையை கிளப்பிய நிலையில் அவர் விளக்கமளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் கிராமத்து கதைக்களத்தை கையில் எடுத்து படமாக்கும் இயக்குநரில் ஒருவரான முத்தையா அடுத்ததாக இயக்கியுள்ள படம் விருமன். இந்த படத்தில் நடிகர் கார்த்தி ஹீரோவாகவும், இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஹீரோயினாகவும் நடிக்கின்றர். மேலும் பிரகாஷ்ராஜ், ராஜ்கிரண்,சரண்யா பொன்வண்ணன், நடிகர் சூரி ஆகியோரும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த ஆகஸ்ட் 3 ஆம் தேதி மதுரையில் உள்ள ராஜா முத்தையா மன்றத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா, இயக்குநர் ஷங்கர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். இதில் பேசிய நடிகர் சூரி, சூர்யாவின் அகரம் அறக்கட்டளையை குறிப்பிட்டு ஆயிரம் கோயில்கள், அன்னச்சத்திரங்கள் கட்டுவதை விட ஒருவனுக்கு கல்வி கொடுப்பது பல ஜென்மம் பேசும் என தெரிவித்திருந்தார். அவரின் இந்த கருத்து சர்ச்சையில் சிக்கியது. இந்து அமைப்பை சேர்ந்த பலரும் சூரியின் இந்த கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
.@sooriofficial Sir talks about #Viruman & shares his experiences working in the movie!
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) August 8, 2022
In theatres from August 12th#VirumanPressMeet #VirumanFromAug12@Karthi_Offl @Suriya_offl @dir_muthaiya @thisisysr @AditiShankarofl @rajsekarpandian @prakashraaj #Rajkiran @sooriofficial pic.twitter.com/nzUsMJJQFK
இதனிடையே விருமன் படம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி ரிலீசாகவுள்ளதை முன்னிட்டு சென்னையில் இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் சூரி, விருமன் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கருத்துக்கு விளக்கமளித்துள்ளார். அன்றைக்கு நான் யதார்த்தமாக பேசிய விஷயம் இப்படி ஆகிவிட்டது. எல்லாருக்கும் தெரியும். நான் எந்த விஷயத்தைப் பேசினாலும் மதுரை மீனாட்சியம்மனை வணங்கி விட்டு தான் தொடங்குவேன். யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் அன்றைக்கு கோயில் பற்றி தவறாக பேசவில்லை. கோயிலுக்கு எதிரானவன் நான் இல்லை..சாமி கும்பிடுபவன் தான்...மீனாட்சியம்மனின் தீவிர பக்தன்..என்னுடைய ஹோட்டல் பெயர் அனைத்துமே அம்மன் என்று தான் வைத்துள்ளேன்.
ஆடியோ வெளியீட்டு விழாவில் நான் சொன்னதை தப்பாக சிலர் புரிந்து கொண்டார்கள். நான் படிக்காதவன் என்பதால் நிறைய இடங்களில் மனது புண்படும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறேன். அதனால் தான் கல்வியோடு முக்கியத்துவத்தை உணர்த்தவே ரசிகர்கள் முன்னிலையில் அப்படி சொன்னேன் என தெரிவித்துள்ளார். இதன்மூலம் சூரி மீதான சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.