HBD Sivakumar : தன்னிகரில்லா கலைஞன்... மனம் கவர்ந்த மார்க்கண்டேயன் சிவகுமாரின் 82வது பிறந்தநாள்!
HBD Sivakumar : எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை எளிமையாகவும், நேர்த்தியாகவும் வெளிப்படுத்தக்கூடிய திறமையான நடிகர் சிவகுமாரின் 82வது பிறந்தநாள் இன்று
தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ஜெய்சங்கர் என மிக பெரிய ஜாம்பவான்கள் ராஜாங்கம் செய்து கொண்டு இருந்த காலகட்டத்தில் ஒரு துணை கதாபாத்திரமாக அவ்வப்போது வந்து போன ஒரு நடிகர் எட்டு ஆண்டு கால போராட்டத்திற்கு பிறகே கதாநாயகனாக அங்கீகரிக்கப்பட்டார். அவர் தான் தமிழ் சினிமாவில் என்றென்றும் மார்கண்டேயன் என கொண்டாடப்படும் நடிகர் சிவகுமார். இந்த பன்முக கலைஞன் இன்று தனது 82வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
சிறந்த ஓவியர் :
கோவை மவவட்டத்தில் உள்ள ஒரு எளிய கிராமத்தில் இருந்து ஓவியக் கல்லூரியில் படிப்பதற்காக சென்னை மாநகரை நோக்கி பயணித்த ஒரு கலைஞன் கலை மீது இருந்த தீராத காதலால் தனது திறமையை கூர்மையுடன் மென்மேலும் வளர்த்து கொண்டு 'ஸ்பாட் பெயிண்டிங்’ ஓவியங்களில் திறமையானவராக விளங்கினார். அதனை தொடர்ந்து தான் அவரின் திரைப்பயணம் தொடங்கியது.
எழுத்தின் மீது கொண்ட ஆர்வம் :
ஒரு நடிகர், ஓவியர் என்ற திறமைகளை தாண்டியும் ஒரு தலைசிறந்த எழுத்தாளராகவும் விளங்கினார் சிவகுமார். கல்லூரி மாணவர்களுக்கே அவர் எழுதிய எழுத்து படமாக அமைக்கப்பட்டது என்பது காலத்தின் அதிசயம். திருமலை நாயக்கர் மஹால், தஞ்சை பெரிய கோயில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் என அவரின் ஓவியங்கள் எந்த அளவிற்கு இன்றளவும் பேசப்படுகிறோதோ அதே போல அவரின் எழுத்தின் உன்னதத்தை போற்றும் விதமாக விளங்குகிறது அவர் எழுதிய "நான் ராஜபாட்டை அல்ல" புத்தகம். அதுமட்டுமின்றி சிவகுமார் ஒரு சிறந்த மேடைப் பேச்சாளரும் கூட. மகாபாரத இதிகாசத்தை மிகவும் ஸ்வாரஸ்யமாக தொடர்ந்து சொற்பொழிவாற்றிய பெருமைக்குரியவர். இன்றளவும் யோகா கலை, மூச்சு பயிற்சி என பல ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றி வருவதோடு அதை பலருக்கும் வழங்கி அதன் மூலம் மற்றவர்களையும் பயனடைய செய்யும் கூடிய சிறந்த மனிதர்.
எளிமையான நடிகர் :
1965ம் ஆண்டு வெளியான 'காக்கும் கரங்கள்' படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை எளிமையாகவும், நேர்த்தியாகவும் வெளிப்படுத்த கூடிய திறமைசாலி. சரஸ்வதி சபதம், கந்தன் கருணை, உயர்ந்த மனிதன், வண்டி சக்கரம், ரோசாப்பூ ரவிக்கைக்காரி, சிந்து பைரவி, அக்னி சாட்சி, அன்னக்கிளி என பொற்காலத்தில் துவங்கிய சிவகுமாரின் பயணம் இன்றைய புத்துயிர் காலம் வரை சிறப்பாக பயணிக்கிறது.
சினிமா துறையில் இருப்பவர்கள் முன்ன பின்ன தான் இருப்பார்கள் என்ற பொதுவான கருத்துக்கு விதிவிலக்காக விளங்கியவர். தான் மட்டுமின்றி தனது வாரிசுகளையும் அதே ஒழுக்கத்தோடு வளர்த்த பெருமைக்குரியவர். எஜிகேஷனல் ட்ரஸ்ட் ஒன்றை அமைத்து அதன் மூலம் ஏராளமான ஏழை குழந்தைகளின் கல்விக்கு உதவி கரம் நீட்டி வருகிறார்கள்.
ஏராளமான பிலிம்பேர் விருதுகளை வென்றுள்ள சிவகுமாருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. திரையுலகமே வியந்து உற்றுநோக்கும் தன்னிகரில்லா கலைஞனாக திகழ்கிறார் பெருமைக்குரிய நடிகர் சிவகுமார்.