Jai Bhim Issue: ‛உயர்த்தி பேசுங்கள்...யாரையும் தாழ்த்தி பேசாதீங்க...’ ஜெய் பீம் விவகாரத்தில் நடிகர் சந்தானம் கருத்து!
நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான 'ஜெய் பீம்' பட விவகாரம் குறித்து நடிகர் சந்தானம் கருத்து தெரிவித்துள்ளார்.
நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த தீபாவளிக்கு அமேசான் ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் 'ஜெய் பீம்' . இந்த திரைப்படம் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 'ஜெய் பீம்' படம் வெளியான நாள் முதல் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தையும், ஒரு குறிப்பிட்ட நபரையும் அவமானம் செய்யப்பட்டுள்ளதாக குற்றசாட்டுகள் எழுந்தது.
மேலும், இதற்கான விளக்கத்தை நடிகர் சூர்யா தரவேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதி இருந்தார். இந்நிலையில், நடிகர் சூர்யாவும் இதற்கான பதில் அறிக்கையை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
அதில், ”மதிப்புக்குரிய மாநிலங்களவை உறுப்பினர் திரு.அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு, வணக்கம். தங்கள் கடிதத்தை சமூக ஊடகங்களின் வாயிலாகப் படித்தேன். என் மீதும் எனது குடும்பத்தார் மீதும் தாங்கள் காட்டியிருக்கும் அன்பிற்கு நன்றி. நீதிநாயகம் சந்துரு அவர்கள் வழக்கறிஞராக இருந்தபோது நடத்திய ஒரு வழக்கில், 'அதிகாரத்தை எதிர்த்து சட்டப் போராட்டம் மூலம் நீதி எவ்வாறு நிலைநாட்டப்பட்டது' என்பதே ஜெய்பீம் படத்தின் மையக்கரு. பழங்குடியின மக்கள் நடைமுறையில் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளையும் படத்தில் பேச முயற்சித்திருக்கிறோம்.
கடிதத்தில் நீங்கள் குறிப்பிட்டுள்ளதைப் போல, எந்தவொரு குறிப்பிட்ட தனிநபரையோ, சமுதாயத்தையோ அவமதிக்கும் நோக்கம் ஒருபோதும் எனக்கோ, படக்குழுவினருக்கோ இல்லை. சிலர் சுட்டிக்காட்டிய பிழையும், உடனடியாகத் திருத்தி சரி செய்யப்பட்டதைத் தாங்கள் அறீவிர்கள் என நினைக்கிறேன்.
ஒருவரைக் குறிப்பிடுவதாக நீங்கள் சொல்லும் அந்தக் கதாபாத்திரத்தின் பெயர், வேறொருவரையும் குறிப்பதாக ஒரு பத்திரிகையாளர் குறிப்பிடுகிறார். எதிர்மறைக் கதாபாத்திரங்களுக்கு எந்தப் பெயர் வைத்தாலும் அதில் யாரேனும் மறைமுகமாக குறிப்பிடப்படுவதாக கருதப்படுமேயானால், அதற்கு முடிவே இல்லை. அநீதிக்கு எதிராக ஒன்றிணைய வேண்டிய போராட்டக் குரல், 'பெயர் அரசியலால்' மடைமாற்றம் செய்யப்பட்டு நீர்த்துப் போகிறது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், 'ஜெய் பீம்' பட விவகாரம் தொடர்பாக அமேசான் ஓடிடி தளத்திற்கு நேற்று வன்னியர் சங்கம் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியது. அதில், படத்தில் இடம் பெற்றிருந்த அக்னி குண்டத்தை அகற்ற வேண்டும் என்றும், ஏழு நாட்களுக்குள் ₹5 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் தெரிவித்திருந்தனர். மேலும், வன்னியருக்கு எதிராக தவறான தகவல்களை இனிமேல் பரப்ப கூடாது என்று தெரிவித்து படக்குழு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் சபாபதி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சந்தானத்திடம் செய்தியாளர்கள் 'ஜெய் பீம்' பட விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த நடிகர் சந்தானம், எதை பற்றி வேண்டுமானாலும் உயர்த்தி பேசுங்கள், ஆனால் யாரையும் தாழ்த்தி பேசாதீர்கள். மக்கள் அனைவரும் சாதி, மதம், இனம், மொழி என அனைத்தையும் மறந்து தியேட்டருக்கு வருவதே, தங்கள் கவலைகளை மறந்து மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்கு தான் என்றார்.
மேலும், இனி வரும் தலைமுறை இயக்குனர்கள் மக்களுக்கு நல்ல படங்களை தர வேண்டும். ஒரு குறிப்பிட சமுதாயம், மதத்தை தாழ்த்தி அவர்களின் மனதை காயப்படுத்த வேண்டாம் என்றும் கேட்டு கொண்டார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்