DD Returns: ‘இந்த சீனை ஏன்டா தூக்குனீங்க?’ .. டிடி ரிட்டன்ஸ் படத்தின் நீக்கப்பட்ட காட்சி வெளியீடு..
நடிகர் சந்தானம் நடித்துள்ள டிடி ரிட்டர்ன்ஸ் படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது.
நடிகர் சந்தானம் நடித்துள்ள டிடி ரிட்டர்ன்ஸ் படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது.
சின்னத்திரையில் தனது காமெடி மூலம் ரசிகர்களை கவர்ந்த சந்தானம், சிம்பு நடித்த மன்மதன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர் ஒரு கட்டத்தில் முன்னணி காமெடி நடிகராக மாறினார். அதன் பிறகு ரூட்டை மாற்றிய சந்தானம், தற்போது ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார். ஹீரோவாக அறிமுகமான சமயம், அவருக்கு திருப்புமுனையாக அமைந்த படம் “தில்லுக்கு துட்டு”.
இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால் இரண்டாம் பாகமும் எடுக்கப்பட்டது. இதுவும் வெற்றி பெற்ற நிலையில் காமெடியை மையமாக வைத்து படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். அந்த வகையில் கடைசியாக சந்தானம் நடிப்பில் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ என்ற படம் கடந்த ஜூலை 28 ஆம் தேதி வெளியானது. இது தில்லுக்கு துட்டு படத்தின் மூன்றாம் பாகம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
பிரேம் ஆனந்த் இயக்கிய டிடி ரிட்டர்ன்ஸ் படத்தில் சுர்பி, ரெடின் கிங்ஸ்லி, மாறன், பிரதீப் ராவத், மாசூம் சங்கர்,டைகர் தங்கதுரை, மொட்டை ராஜேந்திரன், முனிஷ்காந்த், பெப்சி விஜயன், தீபா என பலரும் நடித்திருந்தனர். ரோகித் ஆபிரகாம் இப்படத்திற்கு இசையமைத்த நிலையில் இந்த படம் தியேட்டரில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. முன்னதாக இப்படத்தின் டீசர், ட்ரெய்லர் இரண்டும் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இப்படத்தை பார்த்து ரசித்தனர்.
டிடி ரிட்டர்ன்ஸ் படம் கிட்டதட்ட ரூ.30 கோடி வரை வசூல் செய்ததாக தகவல் வெளியானது. தொடர் தோல்விகளை சந்தித்து வந்த சந்தானம் இப்படத்தால் கம்பேக் கொடுத்துள்ளதாக அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இப்படியான நிலையில் இப்படம் செப்டம்பர் முதல் வாரத்தில் டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. மேலும் ரஜினி நடித்த ஜெயிலர் படம் வெளியான நிலையில் திரைக்கு வந்த 2 வாரங்களிலேயே டிடி ரிட்டர்ன்ஸ் படம் தியேட்டர்களில் தூக்கப்பட்டது. இந்நிலையில் மக்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதால் மீண்டும் தியேட்டர்களில் டிடி ரிட்டர்ன்ஸ் படம் வெளியாகலாம் என கூறப்படுகிறது.
இந்நிலையில் டிடி ரிட்டர்ன்ஸ் படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் நடிகர் மொட்டை ராஜேந்திரன் நடித்த காட்சிகள் இடம் பெற்றுள்ளது.