Samuthirakani: கழுத்தை நெறித்த கடன்.. சாமானிய மக்கள் நிலையை எண்ணி நொந்துப்போன சமுத்திரகனி
தமிழ் சினிமாவில் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், டப்பிங் கலைஞர் என பன்முக திறமை வாய்ந்த பிரபலங்களில் ஒருவர் சமுத்திரகனி.
அடுத்த சாட்டை படத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால் அதுபோன்ற படைப்புகளை எடுக்க மனம் வரவில்லை என நடிகர் சமுத்திரகனி தெரிவித்த பழைய வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், டப்பிங் கலைஞர் என பன்முக திறமை வாய்ந்த பிரபலங்களில் ஒருவர் சமுத்திரகனி. இவர் தயாரித்து நடித்த ‘அடுத்த சாட்டை’ படம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியானது. சமுத்திரகனி, தம்பி ராமையா, யுவன், அதுல்யா ரவி, கௌசிக் சுந்தரம் என பலரும் நடித்துள்ளனர். இந்த படம் 2012 ஆம் ஆண்டு வெளியான சாட்டை படத்தின் தொடர்ச்சியாகும். கல்வி முறையில் உள்ள குறைபாடுகளை மையப்படுத்திய அடுத்த சாட்டை விமர்சன ரீதியாக பாராட்டைப் பெற்றாலும் வசூல் ரீதியாக தோல்வியடைந்தது.
இந்நிலையில் இப்படத்தால் சமுத்திரகனி வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. ஒரு நேர்காணலில் பேசிய அவர், “அடுத்த சாட்டை திரைப்படம் ரிலீசாகும்போது பெரிய அளவில் மழை பெய்தது. கொட்டும் மழையில் தியேட்டருக்கு வருவதற்கு மக்கள் தடுமாறுகிறார்கள். பெரிய படத்துக்கு என்றால் குடையை பிடித்தாவது வந்து விடுவார்கள். சமுத்திரகனி படம் தானே அப்பறம் பார்த்துக் கொள்வோம் என இருந்து விட்டார்கள்.
வெள்ளிக்கிழமை படம் ரிலீசாகியிருந்தது. ஞாயிற்றுக்கிழமை என்னுடைய அலுவலகத்துக்கு படத்துக்காக கடன் கொடுத்தவர்கள் எல்லாம் வந்து விட்டார்கள். அவர்கள், “சார் உங்க படம் ஓடலை..நாங்க கொடுத்த காசை கொடுங்க” என கேட்டார்கள். படம் ஓடலைன்னு ஒரு வாரம் கழிச்சி வரக்கூடாதா?, 3வது நாளே வந்துடுவீங்களான்னு நான் கேட்டேன். மேலும், படத்துக்காக கொடுத்த காசை எல்லாம் செலவு பண்ணிட்டோம். உங்களுக்கு கொடுக்க வேண்டும் என்றால் நான் உழைத்து சம்பாதித்து தான் கொடுக்கணும்” என கூறினேன். அப்படி ஒரு அனுபவம் வாழ்க்கையில் யாருக்குமே வரக்கூடாது. எனக்கு இறைவன் நடிப்புன்னு ஒன்று கொடுத்ததால் நான் தப்பித்து விட்டேன். ஒரு சாமானிய மக்கள் மாட்டியிருந்தால் என்ன பண்ணியிருப்பார்கள். ஒருவரை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்கான முயற்சிகள் எல்லாம் எடுத்தார்கள்” என தெரிவித்துள்ளார்.
அடுத்த சாட்டை நல்ல படைப்பு, சமூகத்துக்கு தேவையான ஒரு படம். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சார்.. அடுத்த வாரம் வரை பார்க்கலாம் என சொன்னேன். ஆனால் அவர்கள் எங்களுக்கு தெரியதா? என கேட்டார்கள். அப்படியே வார்த்தைகளால் கொன்றார்கள். இதை எங்கே போய் சொல்வது. அடுத்தவாரம் தியேட்டரில் படம் தூக்கப்பட்டது. ஆனால் நான் காசை திரும்ப கொடுத்தேன். இதற்காக ஒரு இடத்தில் போய் காசு வாங்கி கொடுத்தேன். இந்த மாதிரி சம்பவங்கள் தான் அடுத்து நாம் இப்படி ஒரு படைப்பு எடுக்க தூண்டவே மாட்டேங்குது. எடுக்க மனசு வரவே இல்லை” என சமுத்திரகனி தெரிவித்திருந்தார்.