Ramesh Kanna: முத்து படத்தில் ஜமீன்தார் ரஜினிக்கு டூப் போட்ட ரமேஷ் கண்ணா.. எந்த சீன் தெரியுமா?
முத்து படத்தில் ரஜினி அப்பா, மகன் என இரண்டு வேடத்தில் நடித்திருப்பார். இதில் அப்பா கேரக்டர் ஜமீன்தாராக இருப்பது நம் அனைவருக்குமே தெரியும்.
முத்து படத்தில் ரஜினி கேரக்டருக்கு தான் டூப் போட்ட தகவலை நடிகரும், இயக்குநருமான ரமேஷ் கண்ணா நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் காரைக்குடி நாராயணன், பாண்டியராஜன், கோடி ராமகிருஷ்ணா, விக்ரமன், கே.எஸ்.ரவிகுமார் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் ரமேஷ் கண்ணா. தமிழில் 1999ல் நடிகர் அஜித்தை வைத்து தொடரும் என்ற படத்தை இயக்கினார். ஆனால் 1998ல் வெளியான உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் படத்தில் முக்கியமான கேரக்டரில் ரமேஷ் கண்ணா நடித்தார். அந்த படம் அவரை முழுநேர நடிகனாக மாற்றியது.
ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா என அத்தனை முன்னணி நடிகர்களின் படங்களிலும் காமெடி மற்றும் குணச்சித்திர கேரக்டரில் ரமேஷ் கண்ணா நடித்துள்ளார்.
இதனிடையே நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், முத்து படத்தில் ரஜினிக்கு தான் டூப் போட்ட கதையை தெரிவித்துள்ளார். அதில், “முத்து படத்தில் ரஜினி அப்பா, மகன் என இரண்டு வேடத்தில் நடித்திருப்பார். இதில் அப்பா கேரக்டர் ஜமீன்தாராக இருப்பது நம் அனைவருக்குமே தெரியும். மைசூர் அரண்மனையில் ஷூட்டிங் நடைபெற்றது. ரஜினி குதிரை வண்டியில் வருவது போல காட்சி இருக்கும்.
ஷூட்டிங்கை பொறுத்தவரை பெரும்பாலும் சண்டை காட்சிகளுக்கு தான் டூப் பயன்படுத்துவோம் என்பதால் அதற்கான ஆடைகளை இரண்டாக வாங்கி வைப்போம். ஆனால் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாருக்கு அதைப் பற்றி எல்லாம் கவலை கிடையாது. திடீரென ஒருநாள் குதிரை வண்டி தூரத்தில் இருந்து வருவது போல எடுக்க வேண்டும். நீ போய் ஜமீன்தார் டிரஸ் அணிந்து கொண்டு வா என சொல்லி எடுத்தார்.
பின்னர் குளோஸ்-அப் ஷாட் எடுக்க வேண்டும். ரஜினிக்கு டிரஸைக் கொடுத்து உட்கார வை என சொன்னார். நான் உதவி இயக்குநர் என்பதால் அங்கும் இங்கும் ஓடி வேலை செய்த நிலையில் அந்த டிரஸை அணிந்ததால் முழுவதும் வியர்வையாகி விட்டது. இப்படியான நிலையில் நான் என்ன செய்வதென்று தெரியாமல் டிரஸ்ஸை காய வைக்குமாறு சொல்லி பதறி கொண்டிருந்தேன்.
இதனையெல்லாம் பின்னால் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ரஜினி அதெல்லாம் ஒன்றும் தேவையில்லை என சொல்லி வியர்வையாக இருந்த அந்த டிரஸை அணிந்து கொண்டது எனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது” என ரமேஷ் கண்ணா தெரிவித்துள்ளார்.