Rajkiran in Marumalarchi 2: மீண்டும் ஹீரோ அவதாரம் எடுக்கும் ராஜ்கிரண்!
சென்னை: மறுமலர்ச்சி 2 திரைப்படத்தில் கதாநாயகனாக ராஜ்கிரண் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
மெகா ஸ்டார் மம்மூட்டி, தேவயானி நடிப்பில் பாரதி இயக்கிய திரைப்படம் ‘மறுமலர்ச்சி’. 1998ஆம் ஆண்டு வெளியான இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக தங்கர்பச்சானும், இசையமைப்பாளராக எஸ்.ஏ. ராஜ்குமாரும் பணியாற்றினர். அப்போது இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
அதுமட்டுமின்றி, இப்படத்தில் இடம்பெற்ற, “நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு” பாடல் இப்போதுவரை பலரது ப்ளே லிஸ்ட்டில் இருக்கிறது.
தற்போது, மறுமலர்ச்சி படத்தை இயக்கிய பாரதி, மறுமலர்ச்சி 2 படத்தை இயக்கவிருக்கிறார். இதனை க்ரவுட் ஃபண்டிங் முறையில் அவரே தயாரிக்கவும் செய்கிறார். இப்படத்திற்கு எஸ்.ஏ. ராஜ்குமாரே இசையமைக்கிறார். இப்படத்திற்காக அவர் ஏற்கனவே ஒரு பாடலையும் இசையமைத்து முடித்துவிட்டார்.
இந்நிலையில் இப்படத்தின் கதாநாயகனாக நடிக்க இயக்குநரும், நடிகருமான ராஜ்கிரண் ஒப்பந்தமாகியுள்ளார். இதனை இயக்குநர் பாரதி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இப்படத்தில் ராஜ்கிரண் கதிர்வேல் படையாச்சியார் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் சோழன் என்ற கதாபாத்திரத்தில் ராஜ்கிரணின் மகனாக நடிக்க முன்னணி ஹீரோவிடம் பேச்சுவார்த்தை நடந்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கஸ்தூரி ராஜா இயக்கத்தில் வெளியான ’என் ராசாவின் மனசிலே’ படம் மூலம் ராஜ்கிரண் கோலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமாகி அந்தப் படத்தை அவரே தயாரிக்கவும் செய்தார். மேலும் அவர் நடிகர் ராமராஜன் நடிப்பில் வெளியான ராசாவே உன்ன நம்பி படத்தையும் தயாரித்துள்ளார்.
தயாரிப்பு மட்டுமின்றி அரண்மனைக் கிளி என்ற படத்தையும் ராஜ்கிரண் இயக்கியிருக்கிறார். முக்கியமாக வைகை புயல் வடிவேலுவை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியது ராஜ்கிரண் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக இவர் நடிகர் தனுஷ் இயக்கிய “பவர் பாண்டி” படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: அடுத்த பஞ்சாயத்து... சிம்பு மீது தயாரிப்பாளர் புகார்: விசாரணைக்கு செல்லும் விவகாரம்!
‛என் மகனை பேய் படங்கள் பார்க்க அனுமதிப்பதில்லை’ - பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஷ்மி!
விஸ்வாசம்-அண்ணாத்த: அச்சு மாறாத ஒரே ட்ரெய்லர்... இயக்குனர் சிவா சொன்ன விளக்கம் இது தான்!