Rajinikanth: நான் சொன்னா செய்வேன்.. சிவாஜி மறைந்த நாளில் ரஜினி செய்த சம்பவம்!
25 ஆண்டுகளுக்குப் பின் படையப்பா படம் மீண்டும் டிசம்பர் 12ம் தேதி ரஜினிகாந்த் பிறந்தநாளில் ரீ-ரிலீஸ் ஆக உள்ளது. இதனை முன்னிட்டு ரஜினிகாந்த் சிறப்பு நேர்காணல் ஒன்றை அளித்துள்ளார்.

படையப்பா படத்தில் சிவாஜியை நடிக்க வைக்கும்போது நடந்த சம்பவங்களை நடிகர் ரஜினிகாந்த் நினைவுக் கூர்ந்துள்ளார்.
இதைவிட கேவலம் எதுவுமில்லை
25 ஆண்டுகளுக்குப் பின் படையப்பா படம் மீண்டும் டிசம்பர் 12ம் தேதி ரஜினிகாந்த் பிறந்தநாளில் ரீ-ரிலீஸ் ஆக உள்ளது. இதனை முன்னிட்டு ரஜினிகாந்த் சிறப்பு நேர்காணல் ஒன்றை அளித்துள்ளார். அதில், படையப்பா படத்தில் அப்பா கேரக்டருக்கு சிவாஜி கணேசனை சொன்னதும் அவர் வேண்டாம் என கே.எஸ்.ரவிகுமார் சொன்னார். காரணம் இருப்பது 4,5 சீன்கள் தான் எப்படி அவரை கொண்டு வர முடியும் என கேட்க, நான் அவர் இருந்தால் சிறப்பாக இருக்கும் என கூறினேன்.
உடனே கே.எஸ்.ரவிகுமார் சிவாஜியை சந்தித்து கதையை சொல்ல தொடங்கியுள்ளார். ஆனால் ரஜினி ஸ்டைல் பண்றதை எல்லாம் என்கிட்ட சொல்லாத, என் கேரக்டர் போர்ஷன் என்னன்னு மட்டும் சொல்லு என கூறியிருக்கிறார். அதை சொல்லவும் நான் செய்றேன் என சிவாஜி சொல்லி விட்டார். அவர் அதிக பணம் கேட்கிறார். மொத்தமே 5,6 நாட்கள் தான் ஷூட்டிங். அவர் கேட்ட சம்பளம் கொஞ்சம் அதிகமாக இருக்கிறது என கே.எஸ்.ரவிகுமார் என்னிடம் சொன்னார்.
அவர் தயாரிப்பாளர், இயக்குநராக இருந்ததால் இப்படி கூறினார். ஆனால் நாம் இதை முதலிலேயே யோசித்திருக்க வேண்டும். கதை சொல்லி, அவரும் நடிக்க ஓகே சொல்லி இப்போது சம்பள விஷயத்தால் தான் வேண்டாம் என சொன்னால் நம்மை விட கேவலமானவர்கள் யாரும் இல்லை என சொல்லி விட்டேன். மறுநாளே சிவாஜியை சந்தித்து முழு பணத்தையும் கொடுத்து விட்டு வந்தேன். அவர் நீ படம் பண்றது ரொம்ப சந்தோஷம் என கூறினார். இதன் பின்னர் சிவாஜிக்கு கரெக்டான ஜோடி என்றால் லட்சுமியை ஓகே பண்ணோம். அப்படியே ராதாரவி, மணிவண்ணன் என நடிகர் பட்டாளத்தை தேர்வு செய்தோம்.
நடிப்பில் அதீத ஆர்வம்
வாகினி ஸ்டூடியோவில் ஷூட்டிங் நடந்தது. சிவாஜி மணிவண்ணனுக்கு சொத்தை எழுதிக் கொடுக்கும் காட்சி எடுக்கவிருந்தோம். அப்போது நான் அவரை மேக்கப் ரூமில் போய் பார்க்கிறேன். அங்கு டயலாக் பேப்பரை அப்படியே மனப்பாடம் பண்ணிக் கொண்டிருந்தார். எனக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது. என்னவென்று கேட்டால், அந்த மணிவண்ணன் அடிச்சி தூள் பண்ணிருவான் டா, ரொம்ப நல்லா பண்றான், நான் அப்படி விட்டு விடக்கூடாது என சொன்னார். அதைக்கேட்டு ஆச்சரியமாக இருந்தது.
அதனைத் தொடர்ந்து மைசூரில் அந்த கோயில் செட் போட்டோம். கிட்டதட்ட 3 ஆயிரம், 4 ஆயிரம் பேர் துணை நடிகர்கள் பங்கேற்றிருந்தனர். சிவாஜி அங்கு வர பெங்களூரில் இருந்து ஹெலிகாப்டர் புக் செய்திருந்தேன். நான் காரில் தான் வருவேன் என சொல்லி விட்டார்.
சமாளித்த சிவாஜி
அந்த ஷூட்டிங்கின்போது சிவாஜிக்கு உடம்பு சரியில்லை. அதனை தெரியக்கூடாது என மேட்ச் பண்ணினார். முதல் காட்சியே வேல் கையில் வைத்துக் கொண்டு கீழே இறங்க வேண்டும். அவருக்கோ மூச்சு வாங்குகிறது. வேண்டாம் என நாங்கள் சொன்னால், நான் பண்ணுகிறேன் என கூறினார். 1000 அடி ரீல் கொண்ட சீனை ஒரே டேக்கில் செய்த மனிதர்.
பின்னர் சாப்பிடும்போது என்னை அழைத்து, நான் பிரபு ராம்குமாரிடம் எல்லாம் உன்னைப் பற்றி பேசுவேன். சம்பாதிக்கும் வயதில் இமயமலை, அமெரிக்கா, லண்டன் எல்லாம் போறான். 2 வருடத்துக்கு ஒரு படம், ஒரு வருடத்துக்கு ஒரு படம் பண்ணுறான், இவனுக்கு யாரும் சொல்ல மாட்டாங்களா என கேட்டேன். ஆனால் நீ செய்றது தான் சரி. என்னைப் பாரு, ஒரு காலம் வரை ஷூட்டிங் சென்றேன். திடீரென அதெல்லாம் இல்லை என சொன்னதும் என்ன செய்வதென்று தெரியவில்லை. நண்பர்களும் இல்லை. எனக்கு மன அழுத்தமே வந்து விட்டது. ஆனால் நீ ஷூட்டிங் இல்லையென்றால் பொழுதை எப்படி கழிக்க வேண்டும் என கற்றுக் கொண்டாய். சூப்பர் டா என பாராட்டினார்.
இதனைத் தொடர்ந்து சிவாஜி என்னிடம், நான் இறந்து விட்டால் நீ மயானம் வரை என் உடலுடன் வருவாயா என கேட்டார். என்ன இப்படி பேசுறீங்க என சொன்னேன், நான் கண்டிப்பாக வர்றேன் என கூறி அதன்படி நடந்தேன். நான் இதுவரை அப்படி செய்தது இல்லை.
அதுமாதிரி சௌந்தர்யா, மணிவண்ணன் உள்ளிட்ட சிலர் இப்போது நம்முடன் இல்லை. அவர்களுக்கெல்லாம் இந்த படத்தை சமர்ப்பிக்கிறேன்”என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.





















