சினிமா இப்படிதான்.. மகன் நடிக்க ஆசைப்பட்டா தடுக்கவே மாட்டேன்... மனம்திறந்த மாதவன்
”நான் திரையுலகைக் காதலிக்கிறேன். சினிமா போன்ற தொழில் வேறு எதுவும் இல்லை... ஆனால் இது மிகவும் சவாலான துறை என்பதை என் மகன் தெரிந்து கொள்ள வேண்டும்” - மாதவன்
நீச்சல் சாம்பியனாக வலம் வரும் தன் மகன் படம் நடிக்க ஆசைப்பட்டால் தான் அதைத் தடுத்து நிறுத்த மாட்டேன் என நடிகர் மாதவன் தெரிவித்துள்ளார்.
தென்னிந்தியா முதல் வட இந்தியா வரை பிரபல நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் மாதவன். சீரியலில் தன் நடிப்பு பயணத்தைத் தொடங்கி சினிமாவில் கோலோச்சி கடந்த 25 ஆண்டுகளாக அனைவராலும் விரும்பப்படும் நடிகராக வலம் வருகிறார் மாதவன். நடிப்பு தாண்டி, தன் குடும்பத்தினருடன் நேரம் செலவழிப்பது, மேலும் தன் பெற்றோர்,மகனுக்கு முக்கியத்துவம் அளிப்பது என மாதவன் தொடர்ந்து இணையத்தில் கவனமீர்த்து லைக்ஸ் அள்ளி வருகிறார்.
குறிப்பாக நீச்சல் சாம்பியனாக சாதிக்க விரும்பும் தன் மகனுக்கு உறுதுணையாக வலம் வரும் மாதவன் தொடர்ந்து சமூக வலைதளங்களில் லைக்ஸ் அள்ளி வருகிறார். அதன்படி சென்ற வாரம் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற சர்வதேச நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் மாதவனின் மகன் வேதாந்த் 5 தங்கப்பதக்கங்களை வென்ற நிலையில், இதுகுறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் மாதவன் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் தன் மகன் வேதாந்த் குறித்துப் பேசிய மாதவன், அவருக்கு சினிமாவில் நடிக்க ஆசை இருந்தால், தான் அதற்கு குறுக்கே நிற்க மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.
”நான் திரையுலகைக் காதலிக்கிறேன். சினிமா போன்ற தொழில் வேறு எதுவும் இல்லை... ஆனால் இது மிகவும் சவாலான துறை என்பதை என் மகன் தெரிந்து கொள்ள வேண்டும்... அவனுக்கு எப்படி வேண்டுமானாலும் உதவுவேன். ஏனென்றால் அது என் மகனின் கனவு" எனத் தெரிவித்துள்ளார்.
மாதவன் அடுத்ததாக சித்தார்த், நயன்தாரா ஆகியோருடன் இணைந்து டெஸ்ட் எனும் படத்தில் நடிக்க உள்ளார். சென்ற வாரம் இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி இந்தப் படம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. மற்றொருபுறம் அம்ரிக்கி பண்டிட் எனும் இந்தி படத்தில் மாதவன் நடிக்க உள்ளார். இந்தப் படத்தில் நடிகை மஞ்சு வாரியர் இணைந்து நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது
இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட ‘ராக்கெட்ரி நம்பி எஃபெக்ட்' படத்தினை இறுதியாக மாதவன் இயக்கி நடித்திருந்தார். இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Meena daughter Nainka: 'ப்ளீஸ் தப்பு தப்பா பேசாதீங்க! எங்க அம்மா அழறாங்க' மேடையிலே மீனாவின் மகள் நைனிகா வேண்டுகோள்..!