Prithviraj: படப்பிடிப்பின்போது காயம்.. பிரபல நடிகர் பிரித்விராஜுக்கு காலில் இன்று அறுவை சிகிச்சை..
காலில் ஏற்பட்ட காயம் காரணமாக நடிகர் பிரித்விராஜிற்கு இன்று கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது.
மலையாள திரையுலகின் பிரபல நடிகர் பிரித்விராஜ். இயக்குனர், நடிகர் என்று பன்முகம் கொண்ட இவர் மலையாளம் மட்டுமின்றி தமிழிலும் பிரபல நடிகர் ஆவார். இவருக்கு மலையாளத்தில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் தற்போது விளையாட் புத்தா என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார்.
பிரித்விராஜிற்கு காயம்:
இந்த படத்தின் படப்பிடிப்பு இடுக்கி மாவட்டம் தேவிகுளம் தாலுகாவிற்கு உட்பட்ட மரையூரில் நடைபெற்றது. மரையூர் பேருந்து நிலையத்தில் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டது. மரையூர் பேருந்து நிலையத்தில் கேரள போக்குவரத்திற்கு சொந்தமான பேருந்தின் உள்ளே படப்பிடிப்பு காட்சி படமாக்கப்பட்டு கொண்டிருந்தது. சண்டை காட்சிகளை படமாக்கியபோது நடிகர் பிரித்விராஜிற்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, நடிகர் பிரத்விராஜ் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் இடுக்கியில் இருந்து கொச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். கொச்சியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் பிரத்விராஜ் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், படப்பிடிப்பில் காயம் அடைந்த பிரித்விராஜிற்கு இன்று காலில் அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. சிகிச்சை நடைபெற உள்ள நிலையில், அவர் விரைவில் உடல்நலம் தேறி வர வேண்டும் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.
இன்று அறுவை சிகிச்சை:
பிரித்விராஜ் தற்போது நடித்து வரும் விளையாட் புத்தா திரைப்படம் சந்தனக்கடத்தல் பற்றியை கதையை மையமாக கொண்ட திரைப்படம் ஆகும். இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாகவே மரையூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்று வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பிரித்விராஜ் 2002ம் ஆண்டு மலையாளத்தில் நந்தனம் என்ற படம் மூலமாக நாயகனாக அறிமுகமானார். மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். தமிழில் கனா கண்டேன் என்ற படம் மூலமாக அறிமுகமானார். பிரித்விராஜ் தற்போது சலார் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.
நடிகராக மட்டுமின்றி இயக்குனர், திரைப்பட தயாரிப்பாளர், திரைப்பட விநியோகஸ்தர், பின்னணி பாடகர் என்று பன்முகத்திறமை கொண்டவராக திகழ்பவர் பிரித்விராஜ் சுகுமாறன். இவரது சகோதரர் இந்திரஜித் சுகுமாறனும் நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Dhanush : ராஞ்சனாவில் தனுஷ் முதல் சாய்ஸ் இல்லை... முதலில் சாய்ஸாக இருந்த பாலிவுட் நடிகர் யார்?
மேலும் படிக்க: அப்போ, இவங்க இன்னும் பிரியலையா? சந்தேகத்தில் ரசிகர்கள்… வைரலாகும் ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா வீடியோ..