Prakash Raj: ‘கலைஞரை ரொம்ப மிஸ் பண்றேன்.. அந்த ஒரு நிகழ்வு மறக்க முடியல’ .. பிரகாஷ்ராஜ் உருக்கம்..!
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியுடனான தனது மறக்க முடியாத தருணத்தை நடிகர் பிரகாஷ் ராஜ் நேர்காணல் ஒன்றில் வெளிப்படுத்தியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியுடனான தனது மறக்க முடியாத தருணத்தை நடிகர் பிரகாஷ் ராஜ் நேர்காணல் ஒன்றில் வெளிப்படுத்தியுள்ளார்.
ஊடக நேர்காணலில் பிரகாஷ்ராஜிடம், ‘கருணாநிதியுடைய நூற்றாண்டு விழா கொண்டாடி கொண்டும் இருக்கும் நிலையில், இருவர் படத்தில் அவருடைய கேரக்டரில் நீங்கள் நடிச்சிங்களே. அந்த அனுபவம் எப்படி இருந்தது?’ என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‘முதலில் இது கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டுன்னு சொல்றதை விட இந்த நூற்றாண்டின் கலைஞர் அவர்’ என சொல்லலாம்.
அவரை நான் ரொம்ப மிஸ் பண்றேன். கருணாநிதி இருந்த வரை சாதி, மத வன்முறை பற்றியெல்லாம் பேச வேண்டிய அவசியம் நமக்கு இருந்தது இல்லை. அவரின் இழப்பு எனக்கு தனிப்பட்ட முறையிலான இழப்பு மாதிரி இருக்கு. நாங்கள் இருவரும் ‘இருவர்’ படத்திற்கு முன்னால் சந்தித்து இல்லை. இயக்குநர் மணிரத்னம், ‘கருணாநிதி - எம்ஜிஆர்’ ஆகிய 2 மனிதர்களை வைத்து நேரடியாக இல்லாமல் ஒரு கதை சொன்னார். எனக்கு அப்போது இவ்வளவு தமிழ் எல்லாம் பேச தெரியாது.
எம்ஜிஆர் கேரக்டரில் நடித்த மோகன்லால், அவரின் சில விஷயங்களை எடுத்துக் கொண்டு அவரை மாதிரி நடித்தார். ஆனால் நான் முழுவதுமாக கருணாநிதி மாதிரி நடிக்கல. காரணம் எனக்கு அப்படி நடிக்க தெரியல. அதேசமயம் சம்பந்தப்பட்ட காட்சிக்கு தேவையான உணர்வு, சூழல் எல்லாம் கொண்டு வந்துவிடுவேன். குறிப்பாக கருணாநிதியின் இலக்கியம், நகைச்சுவைத் தன்மை ஆகியவற்றை எல்லாம் எடுத்துக்கிட்டேன்.
நாங்கள் இருவரும் முதல்முறையாக கல்கி படத்திற்கு எனக்கு மாநில விருது கொடுத்த நிகழ்ச்சியில் தான் சந்தித்தோம். அந்த மாநில விருது வழங்கும் விழா நடித்துக் கொண்டிருக்கும்போது நான் ‘இருவர்’ படத்தில் கருணாநிதி கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்தேன். அவர் எனக்கு விருது கொடுத்தபோது, அரங்கமே கலகலப்பாக மாறியது.உடனடியாக அனைவர் முன்னிலையிலும் பேசிய கருணாநிதி, ‘பிரகாஷ்ராஜூக்கு விருது கொடுத்தபோது சபையில் சின்ன கலகலப்பு இருந்தது. அதற்கு காரணம் எனக்கும், அவருக்கும், எங்கள் ‘இருவர்’க்கும் தெரியும்’ நகைச்சுவை உணர்வுடன் சொன்னார். அந்த தருணம் என்னால் மறக்க முடியாது.
இதன்பிறகு நிறைய முறை அவரை சந்தித்துள்ளேன். அபியும் நானும் பட விழாவுக்கு நேரில் சந்தித்து, நீங்களும், கனிமொழியும் அப்பா, மகளா வந்து இந்த படத்தை வெளியிடணும் என கேட்டேன். உடனடியாக சம்மதம் சொன்னார். அதேபோல் காஞ்சிபுரம் படத்துக்காக தேசிய விருது பெற்ற போது கருணாநிதியைப் போய் பார்த்தேன். புத்தகங்கள் கொடுப்பார், என் குழந்தைகளுடன் பேசுவார். அவருக்கு என்னை தெரியும்ன்னு சொல்றது எனக்கு ரொம்ப சந்தோஷம்’ என தெரிவித்துள்ளார்.