39 years of Nassar: மிரட்டல் வில்லன், தனித்துவ நடிகர், இயக்கம்.. 39 ஆண்டுகால திரைப்பயணத்தை நிறைவு செய்த நாசர்!
39 years of Nassar : 'கல்யாண அகதிகள்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் அறிமுகமான நாசர் இன்றுடன் 39 ஆண்டுகால திரைப்பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.
சினிமா உலகம் ஹீரோக்களை சுற்றியே அமைக்கப்படுவது வழக்கமான ஒன்று. அப்படியான சூழலில் நடிப்பு, காட்சியமைப்பு, கதைக்களம் என ஒரு சில அடிப்படைகளின் பெயரில் சினிமாவை அடுத்த கட்ட நிலைக்கு தன்னுடைய நடிப்பால் நகர்த்தி செல்லும் ஒரு சில நடிகர்களின் வரிசையில் இடம் பிடித்தவர் நடிகர் நாசர். ஒரு நாடக நடிகராக தனது திரைப்பயணத்தை தொடங்கி 1985ஆம் ஆண்டு வெளியான 'கல்யாண அகதிகள்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அவரின் இந்த திரைப் பயணம் கடந்த 39 ஆண்டுகளாக இன்று வரை சிறப்பாக மேல் நோக்கி பயணித்து வருகிறது.
ஹீரோ, ஹீரோயின்கள், நகைச்சுவை நடிகர்கள் அதிகம் கவனிக்கப்படும் சினிமாவில் வில்லன்களுக்கும் ஒரு முக்கியமான இடம் உள்ளது. ஆனால் வில்லன் என்ற ஒரு குறிப்பிட்ட வலைக்குள் சிக்கி கொள்ளாமல் குணச்சித்திரம், நகைச்சுவை, ஹீரோ என அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் தனது நடிப்பால் சிம்மாசனத்தை இன்று வரை தக்கவைத்து வருபவர்.
கமல்ஹாசனின் ஆஸ்தான நடிகர் நாசர் என்றால் அது மிகையல்ல. அந்த அளவுக்கு இருவரும் இணைந்து பணியாற்றிய படங்கள் ஏராளம். நாயகன் படத்தில் தொடங்கிய அந்த பந்தம் தேவர் மகன், அவ்வை சண்முகி, குருதிப்புனல் உள்ளிட்ட ஏராளமான படங்களில் தொடர்ந்தது. வில்லத்தனத்தை மட்டுமே கொப்பளிக்கும் வில்லன்களுக்கு மத்தியில் ஹீரோவுக்கு நிகரான ஒரு வில்லனாக கலக்கியவர் நடிகர் நாசர்.
நெகட்டிவ் கதாபாத்திரங்களில் மட்டுமின்றி நகைச்சுவை கலந்த அப்பாவித்தனமான கதாபாத்திரங்களிலும் மனதிற்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர். ஆரம்பக் காலகட்டத்தில் அவரின் தோற்றத்தை வைத்து பல பட வாய்ப்புகள் மறுக்கப்பட்டது. பின்னர் அதையே அவர் பலப்படுத்தி வாய்ப்புகள் அவரை தேடி ஓடிவரும் அளவுக்கு தன்னை முன்னேற்றி கொண்டார்.
பாம்பே, தேவர் மகன், ரோஜா, இருவர், மின்சாரக் கனவு, ஜீன்ஸ், எம் மகன்,பாகுபலி, சைவம் உள்ளிட்ட படங்கள் நாசரின் நடிப்புத் திறமையை வெளிச்சம் போட்டு காட்டிய முக்கியமான திரைப்படங்கள். ஒரு நடிகராக மட்டுமின்றி ஒரு இயக்குநராகவும் பரிணாமம் எடுத்த நாசர் இயக்கிய முதல் திரைப்படம் அவதாரம். அதைத் தொடர்ந்து தேவதை, மாயன், பாப்கார்ன் உள்ளிட்ட படங்களை இயக்கி இருந்தார். நல்ல கலைஞர்கள் பலரையும் அறிமுகப்படுத்தியுள்ளார். தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்தியிலும் ஏராளமான படங்களிலும் நடித்துள்ளார். எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் தன்னுடைய தனித்துமான மேனரிஸத்தை வெளிப்படுத்தி வித்தியாசம் காட்ட கூடியவர். அழுத்தமான கதாபாத்திரங்கள் மட்டுமின்றி கமர்ஷியல் படங்களிலும் நடித்துள்ளார்.
ஆரம்பக் காலகட்டத்தில் சினிமாவில் வாய்ப்புக்காக அலைந்து திரிந்து ஓடிய நாசர் தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தில் தலைவராக இருந்து வருகிறார் என்றால் அது அவர் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் என்றே சொல்ல வேண்டும்.
மனைவி மற்றும் மூன்று மகன்களுடன் வசித்து வரும் நாசரின் மூத்த மகன் ஃபைசல் சில ஆண்டுகளுக்கு முன்னர் விபத்தில் சிக்கி மூளையின் செயல் திறன்கள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு வீல்சேரில் முடங்கிப் போக வேண்டிய சூழல் ஏற்பட்டது. இப்படி தனிப்பட்ட வாழ்க்கையில் பல இன்னல்களையும் துயரங்களையும் சந்தித்து வந்த போதிலும் தன்னுடைய திரைப்பயணம் எந்த ஒரு இடத்திலும் தொய்வு அடைந்து விடாமல் மிகவும் சுறுசுறுப்பாக செல்லப்பட்டு வருகிறார் நடிகர் நாசர். அவரின் இந்த திரிப்பயணம் பல ஆண்டு காலம் சிறப்பாக செயல்பட வாழ்த்துகள்.