M.N.Nambiyar : ரீலில் வில்லன்... ரியலில் குழந்தை ... நடிகர் நம்பியாரின் நினைவு தினம் இன்று...
M.N. Nambiyar :தனது 50 ஆண்டுகால திரைப்பயணத்தை வெகு சிறப்பாக ஆத்மார்த்தமாக பயணித்த எம்.என் நம்பியார் 15வது நினைவு தினம் இன்று.
திரைப்படங்களில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் பல வில்லன்களை நாம் சந்தித்து இருப்போம் ஆனால் வில்லன்களுக்கு எல்லாம் வில்லனாக வில்லாதி வில்லனாக கொண்டாடப்பட்ட நடிகர் நம்பியார். திரையில் எந்த அளவிற்கு முரட்டுத்தனமான வில்லனாக இருக்கிறாரோ நிஜ வாழ்க்கையில் அப்படியே நேர் எதிர் குணாதியசம் கொண்ட காலத்தால் அழியாத ரியல் லைஃப் ஹீரோ நம்பியாரின் 15ம் ஆண்டு நினைவு தினம் இன்று.
நாடகக்குழு பயணம் :
கேரளாவை பூர்வீகமாக கொண்ட நம்பியார் பிறந்தது வளர்ந்தது எல்லாம் மலைகளின் ராணி ஊட்டியில் தான். 13 வயதிலேயே நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் நாடக குழுவில் இணைந்தார். ஆனால் அங்கு அவருக்கு கொடுக்கப்பட்ட வேலை என்னவோ சமையல்காரர். படிப்படியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அன்று அவருக்கே கூட தெரியாது அவர் பிற்காலத்தில் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்க போகிறார் என்பது.
ஆஸ்தான வில்லன் :
முதலில் நடிகர் நம்பியார் அரிதாரம் சூட்டி நடித்தது பெண் வேடத்தில் தான். பின்னர் நகைச்சுவை, நெகட்டிவ் கேரக்டர் என வளர்ச்சி கண்டு பின்னர் முழுக்க முழுக்க ஆஸ்தான வில்லனானார். திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்த போதிலும் அவரின் திரையுலக பயணத்திற்கு அஸ்திவாரமாய் அமைந்தது வேலைக்காரி படத்திற்கு பிறகு தான். உள்ளங்கைகளை அவர் தேய்ப்பதை பார்த்தாலே ரசிகர்கள் பீதி அடைவார்கள். வில்லன் கேரக்டரில் சர்வாதிகாரியாக திகழ்ந்த நம்பியாரை கொடூரமாக பார்த்தார்கள் ரசிகர்கள். காரணம் பெரும்பாலும் அவர்கள் கொண்டாடும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் வில்லனாக நம்பியார் தான் இருப்பார். ஆனால் உண்மையில் அவர்கள் இருவரும் மிக மிக நெருங்கிய நண்பர்கள்.
குணசித்திர நடிகர் :
பின்னர் தன்னுடைய பயணத்தை வில்லனாக மட்டுமே கடந்து விடாமல் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் கலக்கினார். பாக்யராஜ், ரஜினி, விஜய் என பலரின் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில், நகைச்சுவையில் கலக்கினார். தனது 50 ஆண்டுகால திரைப்பயணத்தை வெகு சிறப்பாக ஆத்மார்த்தமாக பயணித்தவர். எந்த அளவுக்கு வில்லத்தனத்தை நடிப்பில் கொப்பளித்தாரோ அந்த அளவிற்கு குழந்தை மனம் படைத்தவர் நம்பியார். அதீத கடவுள் நம்பிக்கை கொண்ட நம்பியார் தொடர்ந்து 65 ஆண்டுகள் சபரிமலை ஐயப்பனுக்கு குருசாமியாய் இருந்து பலரை வழி நடத்தியுள்ளார். அந்த பலரில் ரஜினிகாந்த், சிவாஜி, இளையராஜா உள்ளிட்ட பிரபலங்களும் அடங்குவார்கள்.
சிறந்த முன்னோடி :
ஹீரோவாக நடிக்கும் அனைவருக்கும் ஒரு ஹீரோவுக்கான பண்புகள் இருந்து விடாது. ஆனால் ஒரு வில்லனாக நடித்திருந்தாலும் ஒரு ஹீரோவுக்கான அத்தனை தகுதியும் பிறவியிலேயே பெற்றவர் நம்பியார். எந்த அளவிற்கு ஒரு சிறந்த நடிகராக விளங்கினாரோ அதே அளவிற்கு மிக நல்ல கணவராகவும் தந்தையாகவும் இருந்தவர். குடும்பத்துடன் நேரம் ஒதுக்க தவறாதவர். இப்படி ஒரு மனிதனை போல தான் வாழ வேண்டும் என அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமாக வாழ்ந்தார் நல்லுள்ளம் படைத்த மாமனிதர் நம்பியார். அவர் நினைவு தினத்தில் மட்டுமின்றி என்றுமே நினைவில் இருப்பவர்.