Kazan Khan Died: பிரபல வில்லன் நடிகர் கசான் கான் திடீர் மரணம்... சோகத்தில் ரசிகர்கள்
தமிழ் மற்றும் மலையாள மொழியில் பல்வேறு படங்களில் வில்லனாக நடித்த கசான் கான் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மற்றும் மலையாள மொழியில் பல்வேறு படங்களில் வில்லனாக நடித்த கசான் கான் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கசான் கான் மரணம்:
நடிகர் கஜன் கான் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக, மலையாள திரைப்பட தயாரிப்பாளரான என்.எம். பாதுஷா தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். இதையடுத்து அவருடன் சேர்ந்து பல படங்களில் நடித்த, மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திரமான திலீப் தனது சமூக வலைதள பக்கத்தில் கசான் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
சினிமாவில் கசான் கான்:
கேரளாவை பூர்வீகமாக கசான் கான் தமிழில் கடந்த 1992ல் வெளியான செந்தமிழ்பாட்டு என்ற படத்தின்மூலம் முதன்முறையாக நடிகராக அறிமுகமானார். இதையடுத்து தொடர்ந்து தமிழ் சினிமாக்களில் நடித்து வந்தவர், 1993ம் ஆண்டு வெளியான கந்தர்வம் எனும் படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார். பெரும்பாலும் இவர் ஏற்றுநடித்த வேடங்கள், வில்லன் வேடம்தான். சேதுபதி ஐபிஎஸ், மேட்டுக்குடி, வானத்தைப் போல, வல்லரசு, முறைமாமன் என 1990களில் வெளிவந்த முக்கிய படங்களில் இவர் நடித்துள்ளார். விஜயகாந்தின் பல படங்களில் தீவிரவாதியாக இடம்பெற்றுள்ளார். விஜயின் பிரியமானவளே படத்திலும் வில்லனாக நடித்து இருந்தார். தொடர்ந்து, 1990ம் ஆண்டு வெளியான நாகதேவதே படத்தின் மூலம் கன்னடத்திலும் நடித்து இருந்தார்.
தமிழில் கசான் கான்:
2000ம் ஆண்டு தொடக்க காலங்கள் வரையிலும் தமிழில் பல முக்கிய படங்களில், பல முன்னணி படங்களில் தொடர்ந்து நடித்து கவனம் ஈர்த்தார். சேதுபதி ஐபிஎஸ், முறைமாமன், கட்டுமரக்காரன், டூயட், கருப்பு நிலா, உள்ளத்தை அள்ளித்தா, தாயகம், மேட்டுக்குடி, மாப்பிள்ளை கவுண்டர், வல்லரசு, பிரியமானவளே, பத்ரி, நரசிம்மா உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் கடைசியாக கடந்த 2007ம் ஆண்டு வெளியான சீனா தானா படத்தில், வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
மலையாளத்தில் கோலோச்சிய கசான் கான்:
பல தமிழ் மற்றும் கன்னட திரைப்படங்களில் நடித்திருந்தாலும், கஜன், கந்தர்வம், தி கிங், வர்ணபகிட்டு, சிஐடி மூசா, தி டான், மாயாமோகினி, இவன் மரியாதராமன், ராஜாதிராஜா மற்றும் லைலா ஓ லைலா போன்ற மலையாளப் படங்களில் நடித்தது மிகவும் பிரபலமானவர். குறிப்பாக 2003ல் மலையாளத்தில் வெளிவந்த 'சிஐடி மூசா' படத்தில் கசான் கான் வில்லனாக நடித்தது நல்ல வரவேற்பைப் பெற்றது. தென்னிந்திய திரையுலகில் 13 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய நடிகராக வலம்வந்த கசான் கான் கடைசியாக 2015ல் லைலா ஓ லைலா என்ற மலையாள படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு சினிமாவில் நடிக்காமல் விலகி இருந்த கசான் கான், மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு திரை நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.