AR Rahman: 'அவரை தப்பு சொல்லாதீங்க’ .. ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவு தெரிவிக்கும் பிரபலங்கள்.. ரசிகர்களுக்கும் வேண்டுகோள்..!
மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மீது கடுமையான விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகிறது. இதனிடையே திரையுலக பிரபலங்கள் அவருக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மீது கடுமையான விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகிறது. இதனிடையே திரையுலக பிரபலங்கள் அவருக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
ரசிகர்களால் மறக்க முடியாத “மறக்குமா நெஞ்சம்”
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஆதித்யா ராம் பேலஸ் சிட்டியில் ‘மறக்குமா நெஞ்சம்’ என்ற பெயரில் கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடத்தினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்த ACTC events நிறுவனம் செய்திருந்தது. முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி நடப்பதாக இருந்த இசை நிகழ்ச்சி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து மாற்று தேதியாக கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் முன்னேற்பாடுகள் பலமாக செய்யப்பட்டிருந்ததாக சொல்லப்பட்ட நிலையில், ஆர்வமுடன் வந்த ரசிகர்கள் மீண்டும் கடும் ஏமாற்றமே மிஞ்சியது.
ஒரே நேரத்தில் ஏராளமான ரசிகர்கள் கூடியதால் சில்வர், கோல்டு, பிளாட்டினம் உள்ளிட்ட பிரிவுகளில் முறைப்படி டிக்கெட் பெற்றவர்களால் கூட நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு செல்ல முடியவில்லை. மேலும் அடிப்படை வசதிகள் தொடங்கி பார்க்கிங் கட்டணம், அளவுக்கதிகமாக டிக்கெட் விற்பனை செய்தது, ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கியவர்கள் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு செல்ல முடியாமல் போனது, மக்கள் கூட்டம் மற்றும் போக்குவரத்தை சரி செய்ய தவறியது என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் இந்நிகழ்ச்சி மீது முன்வைக்கப்பட்டது. சமூக வலைத்தளங்கள் முழுக்க ‘இது ஒரு மோசமான இசை நிகழ்ச்சி’ என விமர்சிக்கப்பட்டது.
வருத்தம் தெரிவித்த ரஹ்மான்
இதனால் ACTC events நிறுவனம் ரசிகர்களிடம் மன்னிப்பு கோரியது. தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மானும், வருத்தம் தெரிவிப்பதை வேறுவிதமாக கூறியிருந்தார். அவரது பதிவில், ‘இந்த நேரத்தில் அனைவரும் விழித்துக்கொள்ள நான் பலி ஆடு ஆகிறேன். சென்னையில் இதுபோன்ற நிகழ்வுகளை நடந்த உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு மலர வேண்டும்’ என கேட்டுக் கொண்டார். மேலும் ஊடகம் ஒன்றிற்கு ஏ.ஆர்.ரஹ்மான் அளித்த பேட்டியில், ‘ஒரு இசையமைப்பாளராக, ரசிகர்களுக்கு ஒரு அற்புதமான நிகழ்ச்சியை வழங்குவதே எனது வேலை. மற்ற ஏற்பாடுகளை நிகழ்ச்சி ஏற்பாட்டுகள் கவனித்து கொள்வார்கள் என நினைத்து விட்டேன் எனவும் கூறியிருந்தார்.
ஆதரவு தெரிவிக்கும் பிரபலங்கள்
இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா இருவரும் பதிவு ஒன்றை வெளியிட்டனர். அதில், முழுக்க முழுக்க இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு காரணம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தான் காரணம் என தெரிவித்தனர்.
இப்படியான நிலையில் நடிகர் கார்த்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “நாம் ஏ.ஆர்.ரஹ்மானை 3 தசாப்தங்களுக்கும் மேலாக அறிந்திருக்கிறோம், நேசிக்கிறோம். இசை நிகழ்ச்சியின் போது இதுபோன்று நடந்தது துரதிர்ஷ்டவசமானது. இருந்தாலும், இந்த நிகழ்வுகளால் அவர் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பார். இத்தகைய குழப்பங்களுக்கு மத்தியில் எனது குடும்பத்தினரும் இசை நிகழ்ச்சியில் இருந்தனர் . ஏ.ஆர்.ரஹ்மான் எப்போதும் தனது அன்பை அனைவருக்கும் கொடுப்பதால் வெறுப்பை விட, அவர் மீது அன்பை செலுத்துமாறு அனைத்து ரசிகர்களையும் கேட்டுக்கொள்கிறேன்” என கூறி தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
இதேபோல் நடிகை குஷ்பூ வெளியிட்ட பதிவில், “சென்னை இசை நிகழ்ச்சியில் ரசிகர்கள் எதிர்கொண்ட பெரும் குழப்பம் மற்றும் சிரமங்களைப் பற்றி கேள்விப்பட்டேன் . ஏ.ஆர்.ரஹ்மான் எப்போதும் தனது ரசிகர்கள் ஏமாற்றமடையாமல் பார்த்துக் கொள்கிறார். ஆனாலும் மக்கள் எதிர்கொள்ளும் எந்தவொரு பிரச்சினைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் பொறுப்பேற்க முடியாது. நேரலை நிகழ்ச்சிக்காக நிரம்பி வழியும் கூட்டத்தின் ஈர்ப்பை உணராத நிர்வாகத்தின் முழுமையான தோல்வி இது. ஏ.ஆர்.ரஹ்மான் தனது இசை, வார்த்தைகள் மற்றும் செயல்கள் மூலம் எப்போதும் அன்பையும் அமைதியையும் பகிர்ந்து கொண்டுள்ளார். அவருக்குத் தகுதியான அனைத்தையும் தொடர்ந்து வழங்குவோம். அவருடன் நின்று, எல்லாம் சரியாகிவிடும் என்று கூறுவோம்” என தெரிவித்துள்ளார்.