”கமலுக்கு அந்த படம்; என்னை வச்சி ஒரு படம் பண்ணுங்கன்னு ரஜினி சொன்னார்...!” : சந்தான பாரதி பகிர்ந்த கதை
தமிழ் சினிமாவில் எனக்கு என்னுயிர் கண்ணம்மா படம்தான் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது
சித்ரா லட்சுமணனின் சாய்வித் சித்ரா நிகழ்ச்சியில் அண்மையில் பங்கேற்றார் நடிகரும் இயக்குநருமான சந்தான பாரதி. அண்மையில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் அவரது நண்பர் உப்பிலி எனும் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார் இவர். அண்மையில் தோன்றியது இந்தப் படத்தில்தான் என்றாலும் 90களின் குறிப்பிடத் தகுந்த படங்களில் வில்லனாக நடித்திருப்பார். சினிமாவில் தனது சுவாரசிய அனுபவம் குறித்துப் பகிர்ந்து கொண்டார் அவர்.
”தமிழ் சினிமாவில் எனக்கு என்னுயிர் கண்ணம்மா படம்தான் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது. அதுவரை நான் சிறுசிறு வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் அந்தப் படம் எனக்கு பெரிய அளவிலான இயக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. அதன்பிறகு மீண்டும் சிறிய சிறிய வேடங்களில் நடித்தேன். அப்போதுதான் அமர் (கங்கை அமரன்) அலுவலகத்துக்கு ஒருமுறை சந்திக்கப் போனபோது திடீரென காஸ்ட்யூம் டிசனர் வந்து எனக்கு அளவெடுக்கத் தொடங்கினார். பிறகுதான் எனக்கு நான் கரகாட்டக்காரன் படத்தில் வில்லனாக நடிக்கிறேன் எனச் சொன்னார்கள். அதன் பிறகுதான் மைக்கெல் மதனகாமராஜனில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது” என்றார்.
மேலும்,ரஜினி தன்னிடம் கமல் குறித்து அவ்வப்போது விசாரிப்பார் என்றும், தன்னை வைத்து ஏன் இதுவரை படம் எடுக்கவில்லை என ரஜினி ஒருமுறை கேட்டதாகவும் சொன்னார். ‘என்னை வச்சி குணா மாதிரி ஒரு படம் எல்லாம் எடுக்கமாட்டிங்களா?’ என ரஜினி தன்னிடம் கேட்டதாகப் பகிர்ந்தார் அவர்.மேலும் தான் அரசியலுக்கு வருவது குறித்து ரஜினி தன்னிடம் கேட்டதாகச் சொன்ன அவர்,’ரஜினியா கமலா என்று தெரியாது ஆனால் மக்கள் நல்ல மாற்றத்தை எதிர்நோக்கி இருக்கிறார்கள். ஒரு தேவதூதன் வரமாட்டானா என ஏங்குகிறார்கள்.’ என்றார் அவர்.
மேலும்,’கமலை வைத்து குணா படத்தை இயக்கும் வாய்ப்பு எதேச்சையாகத்தான் அமைந்தது. நல்ல கதையாக இருந்தால் இயக்குகிறேன் எனச் சொன்னபோதுதான் குணா கதை கிடைத்தது. கமலும் அதில் நடிக்க ஆர்வமாக இருந்தார். அப்படித்தான் குணா உருவானது’ என்றார் அவர்.
View this post on Instagram
விக்ரம் திரைப்படம் கமல்ஹாசனின் 64 வருட உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் எனப் புகழ்ந்த அவர்,’படம் ஏகபோக வெற்றி, இதுவரை தான் தான் வசூல் மன்னன் எனச் சொன்னவர்களை எல்லாம், தம்பி நீ அப்படி கொஞ்சம் ஓரம்போ!; என பதிலடி கொடுத்துள்ளது இந்தத் திரைப்படம்’என அவர் கூறினார்.