Nandita Das Birthday : அழகி , கன்னத்தில் முத்தமிட்டாள், நீர்ப்பறவை: ரசிகர்களை கவர்ந்த நந்திதா தாஸ் பிறந்தநாள்
இயக்குநரும் நடிகையுமான நந்திதா தாஸ் இன்று தனது 54 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
நந்திதா தாஸ்
குறைவானப் படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களிடையே ஆழமான மனப்பதிவை ஏற்படுத்திய நடிகைகளில் ஒருவர் நந்திதா தாஸ். அழகி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நந்திதா தாஸ். இதனைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டாள் படத்தில் இவர் நடித்த ஷியாமா கதாபாத்திரம் ரசிகர்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்திற்காக தன்னுடைய மகளை அகதிகள் முகாமில் விட்டுச் செல்லும் பெண்ணாக நந்திதா தாஸ் நடித்திருந்தார். இந்தக் கதாபாத்திரத்திற்காக சிறந்த நடிகருக்கான தமிழ் நாடு மாநில விருதை வென்றார். இதனைத் தொடர்ந்து வெகு நீண்ட இடைவேளைக்குப் பின் நீர்ப்பறவை படத்தில் நடித்தார். இந்தப் படத்திலும் அவரது கதாபாத்திரம் விமர்சன ரீதியாக பாராட்டப் பட்டது. தமிழில் குறைவான படங்களில் நடித்திருந்தாலும் இந்தி, மலையாளம் என பல்வேறு மொழிகளில் 40 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தார்கள்.
இயக்குநர்
40 படங்கள் நடித்திருந்தாலும் நந்திதாஸ் தன்னை ஒர் இயக்குநராக அடையாளப்படுத்தப் படுவதையே விரும்பக் கூடியவர். தனது நடிப்பிற்காக அங்கீகரிக்கப் பட்ட அதே அளவிற்கு தனது படங்களின் மூலம் உலகளவில் அங்கீகாரம் பெற்றவர். 2008 ஆம் ஆண்டு இவர் இயக்கிய ஃபிராக் என்கிற படம் பல சர்வதேச விருதுகளை வென்றது. புகழ்பெற்ற உருது எழுத்தாளரான சதத் ஹசன் மண்டோவின் வாழ்க்கையை மையப்படுத்தி இவர் இயக்கிய மண்டோ திரைப்படமும் உலகளவில் புகழ்பெற்றது. நவாசுதீன் சித்திக் இந்தப் படத்தில் மண்டோவாக நடித்திருந்தது குறிப்பிடத் தக்கது. இதனைத் தொடர்ந்து கொரோனா காலத்தில் இவர் இயக்கிய Listen To Her என்கிற குறும்படம் பரவலாக விவாதிக்கப் பட்டது. சமீபத்தில் இவர் இயக்கிய ஸ்விகாட்டோ என்கிற படம் சர்வதேச திரைப்பட விழாவில் வெளியானது. டெலிவரி நிறுவனத்தில் வேலை செய்யும் ஒருவரின் வாழ்க்கையைச் சுற்றி நடக்கும் கதையை படமாக்கி இருக்கிறார்.
Ting Tong!
— Nandita Das (@nanditadas) March 1, 2023
Aapka Zwigato trailer deliver ho gaya hai! Please rating dena mat bhooliyega ⭐#ZwigatoTrailer Out Now!#ZwigatoOn17thMarch pic.twitter.com/q5Zh0IUbLK
நடிப்பு இயக்கம் தவிர்த்து பல்வேறு சமூக செயல்பாடுகளிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருபவர் நந்திதா தாஸ். சினிமாவில் பெண்களின் பங்களிப்பு, பாலிவுட் சினிமா , மாற்று பாலினத்தவர்களுக்கான உரிமைகள், சமூக நீதி குறித்து தொடர்ச்சியாக உரையாடல்களை நிகழ்த்தி வருபவர் நந்திதா. சமீபத்தில் கல்லூரி நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட நந்திதா தாஸ் “ இன்றைய சூழலில் நமக்கு பிடிக்காத பல விஷயங்கள் இருக்கின்றன. திரைப்படங்களில் வன்முறையை நியாயப்படுத்துவது எனக்கு பிடிக்காத ஒன்று. ஆனால் இன்றைய சூழலில் இது குறித்த உரையாடல்களை சமூக வலைதளங்களைப் போன்ற பொதுவான ஊடகங்களில் தொடங்கி வைப்பது அவசியமாகிறது” என்று கூறியுள்ளார்.