![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
HBD Delhi Ganesh: குணச்சித்திர நடிகராக சிகரம் தொட்டவர்... யதார்த்தமான நடிப்புக்கு சொந்தக்காரர்... டெல்லி கணேஷ் பிறந்தநாள் இன்று
எளிமை, எதார்த்தம், நகைச்சுவை, அப்பாவித்தனம் என எந்த வாய்ப்பு வழங்கப்பட்டாலும் அதில் தனது அபாரமான நடிப்பையும், முக தோற்றத்தையும் இயல்பாக வெளிப்படுத்தி மக்களுக்கு நெருக்கமான டெல்லி கணேஷ் பிறந்தநாள்.
![HBD Delhi Ganesh: குணச்சித்திர நடிகராக சிகரம் தொட்டவர்... யதார்த்தமான நடிப்புக்கு சொந்தக்காரர்... டெல்லி கணேஷ் பிறந்தநாள் இன்று Actor Delhi Ganesh celebrates his 79th birthday today special story HBD Delhi Ganesh: குணச்சித்திர நடிகராக சிகரம் தொட்டவர்... யதார்த்தமான நடிப்புக்கு சொந்தக்காரர்... டெல்லி கணேஷ் பிறந்தநாள் இன்று](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/31/cd240ccdb40c1ec15d72d73f3973b8851690807861823224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராகவே இருந்த போதிலும் தனக்கென ஒரு தனி புகழும் அந்தஸ்தும் பெற்று இன்று வரை கோலோச்சி தமிழ் ரசிகர்கள் மனங்களில் நெருக்கமாக இருந்து வரும் நடிகர்களில் முதன்மையானவர் நடிகர் டெல்லி கணேஷ்.
ஒரு திரைப்படம் என்ன தான் ஹீரோ ஹீரோயின். இவர்களை சுற்றி நகர்ந்தாலும் முழுமையாக ஒரு திரைப்படத்தை ரசிகர்களை ரசிக்க வைப்பதில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் குணச்சித்திர நடிகர்கள். பெரும்பாலும் அவர் சாமானிய மக்களின் பிரதிபலிப்பாக இருப்பதால் அவர்களுக்கு ரசிகர்களும் ஒரு நல்ல பிணைப்பு ஏற்பட்டுவிடும். அப்படி ரசிகர்களின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராக மக்கள் மனங்களில் நெருக்கமானவர் டெல்லி கணேஷ். அவர் இன்று 79வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தரின் கண்டுபிடிப்புகளில் அசாத்திய திறமை படைத்த டெல்லி கணேஷும் ஒருவர். 'பட்டணப் பிரவேசம்' திரைப்படம் மூலம் அறிமுகமானார். கே. பாலச்சந்திரன் ஒவ்வொரு படைப்புகளிலும் ஒரு முக்கியமான இடம் நிச்சயம் டெல்லி கணேஷுக்கு இருக்கும். அப்படி அமைந்தது தான் 'பசி' படத்தில் முனியன் என கதாபாத்திரமும், சிந்து பைரவி படத்தில் குடிகார மிருதங்கக் கலைஞர் கதாபாத்திரமும். அப்படங்களில் அவர் நடிப்பு திறமையின் வெளிப்பாடே சான்றாக அமைந்தது.
எப்படி கே. பாலச்சந்தரின் ஆஸ்தான நடிகர்களில் ஒருவராக டெல்லி கணேஷ் இருந்தாரோ அதே போல விசுவின் படங்களிலும் முக்கியமான பங்களிப்பு இவருடையதாக இருக்கும். சகலகலா சம்பந்தி, சிதம்பர ரகசியம் உள்ளிட்ட படங்கள் அதற்கு சான்றுகளாகும். மணிரத்னம் இயக்கத்தில் நாயகன் படத்தில் வேலு நாயக்கரிடம் மொழி பெயர்ப்பாளராக அவரின் யதார்த்தமான நடிப்பு அனைவரின் பாராட்டையும் பெற்றது.
வில்லத்தனத்தையும் என்னால் வெளிப்படுத்த முடியும் என நிரூபித்த படம் 'அபூர்வ சகோதரர்கள்'. 'மைக்கேல் மதன காமராஜன்' படத்தில் பாலக்காட்டுத் தமிழ் பேசும் சமையல்காரராகவும், அவ்வை சண்முகி படத்தில் சுயநலம் கொண்ட நபராக, புன்னகை மன்னன் படத்தில் பொறுப்பற்ற அப்பாவாக, தெனாலி படத்தில் நகைச்சுவையான மருத்துவராக பஞ்சபூதம் கதாபாத்திரம் இப்படி அவர் நடித்த ஒரு சில கேரக்டர்கள் நெஞ்சில் நிலைத்துவிட்டது. எளிமை, எதார்த்தம், நகைச்சுவை, அப்பாவித்தனம் என எந்த வாய்ப்பு வழங்கப்பட்டாலும் அதில் தனது அபாரமான நடிப்பையும், முக தோற்றத்தையும் இயல்பாக வெளிப்படுத்தி மக்களுக்கு நெருக்கமானவர்.
ஆடம்பரம் இல்லாத அடக்கமான நடிப்பால் பார்வையாளர்கள் மத்தியில் பெரிய அளவில் தாக்கத்தை கடத்த கூடிய அசாத்திய திறமை படைத்தவர். துணை நடிகர்கள் பெரிய அளவுக்கு கௌரவிக்கப்படாத நிலையில் தனக்கென ஒரு தனி ரசிகர் கூட்டத்தை சேர்த்தவர். 600க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நடிகர் டெல்லி கணேஷின் அபார திறமையையும், சாதனைகளையும் கவுரவிக்கும் விதமாக அவருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது. இன்றும் தனது திரை பயணத்தை தொடரும் இந்த ரியல் ஜாம்பவானின் பயணம் இனிதே தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)